Beautiful Bahubali – My Visit to SravanabelgolaJainworld2022-08-19T14:18:09-06:00
Beautiful Bahubali – My Visit to Sravanabelgola
ஜே ஜிநேந்த்ரா!
வந்தே ஜிநவரம்!!
ஸ்ரீ ஜிநாய நமஹ:
பேரழகன் பாகுபலி
ஸ்ரவண பெளிகுளம் – மைசூர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. பெங்கலூரிலிருந்து 100 மைல், மைசூரிலிருந்து 60 மைல், ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து 32 மைல் தூரத்தில் உள்ளது.
சமணர்களுக்கு, போற்றத்தக்க புனித ஸ்தலம்! சமணர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கும் இணையற்ற புனித தலம் எனக் கூறினால் மிகையன்று! இங்கு செல்லும் மக்கள் – தம் இன வேறுபாட்டை மறந்து – இயற்கை கடவுளான, பகவான், “கோமதீஸ்வரரை”, உள்ளன்புடன் கை கூப்பி, வணங்கத் தவறுவதே இல்லை!
மேலுன், இங்கு வருபவர்கள் – காணும் காட்சியால், வியப்பில் ஆழ்ந்தவர்களாகிச் சொற்களில், சொல்ல இயலாத நிலையில், இன்பக் கடலில், மெய்மறந்து விடுகின்றனர்.
உலக அதிசய மூர்த்தியான கோமடேஸ்வர் , வீற்றிருக்கும் மலை – “விந்தியகிரி” – “தொட்டபெட்டா” (பெரியமலை) – “இந்திரகிரி” – என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது! இம்மலை 47 அடி உயரம்; கடல் மட்டத்திலிருந்து 3347 அடி உயரம் கொண்டது. மலை ஏற சுமார் 500 படிகள் உள்ளன. மலையின் சுற்றளவு 1/4 மைல்.
பகவான் கோமடேசர் அருகாமை:-
மலை ஏறியதும், முற்றம் காணப்படுகிறது. முற்றத்தின் சுற்றுப் புறத்தில் ஜின பகவானின் சிலைகள் உள்ளன. மேலே சென்றதும், மற்றொரு மதில் சுவர் உள்ளது, அதன் நுழைவாயில் வழியாக, உள்ளே சென்றதும், மூவுலகோர் தொழும் பகவான் கோமடேசுவரரின் (பாகுபலி) ஒப்பற்ற திருமேனி, கம்பீரமாக காட்சியளிக்கிறது! 57′ அடி உயர திரு உருவம், நின்ற வடிவில் மிளிர்கிறது! அமைதி நிலவும், மோகன நிலையில், தன்னுள் ஆழ்ந்த, வெண்ணிற வடிவம் உயிரோவியமாகக் கண்களைக் கவர்கிறது!
உலக அதிசயங்களில், இதற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது எனில், மிகையாகாது!
இத்தகைய புனிதத் திரு உருவின், உயர்ந்த புருவமும், படர்ந்த நெற்றியும், சுருண்ட முடியும், கருணையும், புன்முறுவல் நிறைந்த முகத்தாமரையும், நீண்ட அழகிய செவிகளும், தியான நிலையிலும் – சிறிது அலர்ந்த கண்களும், உயர்ந்தும், பரந்தும் காட்சிதரும் – மார்பகமும்; நீண்ட கொடி போன்ற இரு கைகளும்; தொழுது வணங்கும் தொண்டர்களுக்கு இன்பம் பயக்கும் திருவடிகளும், எழிழ் உருவம் கொண்ட, அங்க அவயங்கள் பொருந்திய பகவான், சிலை வடிவில் மிளிர்கிறார்! அத்தகைய தேவனின், அனைத்து அங்க அவயங்களின் அமைப்பைக் காணும்போது; சிலைக்கும் – மனித உருவிற்கும் வேற்றுமை இல்லை! உடலில் மாதவிக் கொடியும், முழங்காலுக்கருகே படமெடுத்தாடும் பாம்புள்ள, புற்றும்; அகிலனின் அஞ்சா நெஞ்சத்தப் பறை சாற்றுகின்றன. திருவடிக்கு கீழே மலர்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை – மாபெரும் தாமரை – வடிவமைக்கப் பட்டுள்ளது.
இச்சிலையின் மீது, எத்தகைய நிழலும் விழுவதில்லை!
இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அதி அற்புதச் சிலையாகும்!
இம்மாபெரும் சிலை, எவ்வித ஆதாரமுமின்றி தனித்து நிற்கின்றது!
கம்பீரமான இச்சிலையைக் காணும் ஒவொருவர் உள்ளத்திலும், தன்னடக்கத்தின் தெளிவு ஏற்படுகிறது!
இறைவனின் அழிவில்லாததும், எல்லை இல்லாததுமான, நிறை அழகில் எங்கும் – எக்காரணத்தை கொண்டும் – குறையே காண முடியாது – என்பதைக் கூறாமலிருக்க முடியாது!
இறைவனின், அங்க அவயங்களில் நிறைந்திருக்கும் அழகு – அனுபவித்து, அறியத்தக்கதே ஒழிய, கூற இயாலாதது!
பிரபு – இறைவைனை தரிசித்ததும்; ஒரு நிமிடம் கண்மூடி, சிந்திக்குங்கால், பகவான் பாகுபலியின் சிலையினருகில் இருப்பது போல் இல்லாமல் – யோகத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மையான – கோமதீஸ்வர பகவான் அருகில் அமர்ந்திருப்பதை போன்ற காட்சி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது! இதனை அனைவரும் உணர்ந்து மட்டுமே புரிந்து கொள்ள இயலும் ! எழுத்தில் சொல்ல இயலவில்லை!
இந்த ஜோதி நாயகரை, ஒரு முறை தரிசித்தால் – மனம் திருப்தி கொள்வதில்லை! ஓயாமல், பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகின்றது!
ஜிந தேவருடைய திருவடிகளில் – செல்வம், செழிப்பு, முன்னேற்றம் ஆகிய அனைத்தும், நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அவருடைய திருவடிகளை வணங்குபவர்களுக்கு – இவை யாவும், இயல்பாகவே கிடைத்து விடுகின்றன!! ஜிந பகவானுடைய திருவடிகளைத் தூய பக்தியுடன் பணியும் பக்தர்களை, வறுமை வாட்டுவதே இல்லை! அவர்களைக் கண்டு நடுங்கி ஓடி விடுகிறது!
சிலை வடக்கு நோக்கி நிற்கின்றது. பகவான் கோமடேசரின் அற்புதச் சிலை, நிறுவப்பட்டதன் காரணமாக – “பெளிகுளம்” – “போதனபுரம்” என அழைக்கப்பட்டது.
1865ல் மைசூர், தலைமை கமிஷனர் திரு.பாபு ரங்கா என்பவர், பெரிய சாரம் கட்டி, சிலையின் சரியான அளவுகளைக் கண்டு பிடித்தார்! அவர் கண்ட அளவின்படி சிலையின் உயரம் 57 அடி ஆகும்!
சிலையின் இதர அளவுகள் விபரம்:-
அடி
அங்குலம்
கால் முதல் காது வரை
50
—
காதின் அடி பாகம் முதல் தலை
6
6
கால்கள் நீளம்
9
—
இடுப்பு சுற்றளவு
10
—
இடுப்பிலிருந்து காது வரை
17
—
கையிலிருந்து காதுவரை
7
—
கால்களின் முன் அகலம்
4
6
கால் விரல்
2
—
காலின் பின்புறம் மேல் அளவு
6
4
முழங்காலின் பாதி மேல் அளவு
10
—
புட்டத்திலிருந்து காது வரை
20
6
பின்புறத்திலிருந்து காதுவரை
20
—
தொப்புள் கீழ் வயிற்றின் சுற்றளவு
13
—
மார்பின் அகலம் சுற்றளவு
6
—
கழுத்தின் கீழிருந்து காதுவரை
2
6
ஆள் காட்டி விரல் அளவு
3
6
2வது விரல் அளவு
5
3
3வது விரல் அளவு
4
7
சுண்டு விரல் அளவு
2
8
சிலையின் முழு அளவு
57
00
சிலை கி.பி. 1028ல் வடிக்கப்பட்டது! தற்போது 975 வருடங்களாகிறது! முதல் ப்ரதிஷ்டை சித்திரை மாதம் வளர்பிறை, பஞ்சமி, ஞாயிற்றுக் கிழமை, மிருகசீரிஷபம் நட்சத்திரம், கும்ப லக்னத்தில் நடைபெற்றது. 12 வருடங்களுக்கு ஒருமுறை முடி பூஜை – மகா மஸ்தகாபிஷேகம் – நடை பெற்று வருகிறது. அடுத்த முடிபூஜை, 2005ல் நடைபெற வேண்டும்!
சிலை உருவானது குறித்து, கன்னட கவி, பஞ்சபாணன் எழுதிய “புஜ பலி சரித்திரத்தில்” கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:-
“குரு ஜிநசேனர், தென் மதுரையை ஆண்ட, சாமுண்ட ராயர் தாயார், “காலல் தேவியிடம்”, – “போதனபுரத்தில் பாகுபலியின் மாபெரும் சிலை உள்ளது; அதை தரிசித்தால் – நலம்” என்றார். உடனே அந்த தாய் – “கோமடேச பகவானை தரிசிக்கும் வரை, பால் அருந்துவது இல்லை”, என்று ‘பிரதிக்னை’ (விரதம்) எடுத்தார்! இச் செய்தியை சாமுண்ட ராயரின் மனைவி, அஜிதா தேவி மூலம் அறிந்து, தாயார் மீது உள்ள பற்றின் காரணமாக, குடி, படை, ராஜ பிரதாணிகளுடன் போதனாபுரம் பயணமானார். இடையில் சிரவண பெளிகுளாவில் தங்கினார். அங்குள்ள “சந்திரகிரி” மலையில் உள்ள பகவான் பார்சுவநாதரை தரிசித்தனர்; அருகில் உள்ள சுருதகேவலி பத்ரபாகு சுவாமிகள் திருவடிகளை தரிசித்தனர். அன்று இரவு சாமுண்டராயர் கனவில், பிரம்ம தேவரும், பத்மாவதியும் தோன்றி, “தற்சமயம், நீங்கள் போதனாபுரம் செல்ல இயலாது! உங்கள் பக்தியின் பலனாய், விந்திய கிரியில் (பெரிய மலை) அப்பகவன் தரிசனம் கிடைக்கும், குளித்து தூய உடை அணிந்து; சிறிய மலையில் அமர்ந்து; பெரிய மலையை நோக்கி ‘சுவர்ண பாணத்தை’ விடுவாயாக – காட்சி கிடைக்கும்!” என்றனர்.
இதே கனவு சாமுண்டராயர் தாயாருக்கும் தோன்றியது. மறுநாள் காலையில், சந்திர கிரியிலிருந்து, சுவர்ண பாணம் ஏவினார்! பாணம் சென்று பெரிய மலையில் உள்ள கல்லில் பட்டதும்; கல்லை துளைத்ததும்; உடனே பகவான் தரிசனம் சிடைத்தது! தாயார் “கல்லல் தேவியின்”, விருப்பம் நிறைவேறியது.
இம் மாபெரும் சிலை உள்ளவரை உலகில் ஜின தேவருடைய வீதராக (பற்றற்ற) ஆட்சியின் வெற்றிக் கொடி பட்டொளி வீசி, வானளாவப் பறந்து கொண்டிருக்கும்! எண்ணற்ற பவ்ய ஜீவன்களுக்கு, அமைதி நிலவிக் கொண்டே இருக்கும். இவ்விதமாக – “பேரழகன் ஸ்ரீ பாகுபலி” – கோமட்டேச ஸ்வாமி திவ்ய தரிசனத்தை கண்குளிரக் கண்டு – மன மகிழ்வோடும், மன அமைதியோடும், “இவ்வித பாக்கியம்”, எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்ற, இதயபூர்வமான பிரார்த்தனையோடு மலையிலிருந்து இறங்கினோம்.