முகப்பு வாயில்

 


மாசற்ற துறவிகளின் தவப் பள்ளியாக விளங்கிய இத் தூய சமணர் மலைக்கு எதிர்பாராமல் நேர்ந்த ஆபத்தையும் அது நமது காங்கிரஸ் அரசினரால் அறவே நீங்கப் பெற்றுப் பாதுகாத்தற்குரிய பண்டைய பொருளாக மதித்துப் போற்றும் பேற்றைப் பெற்ற வரலாற்றையும் சிறிது விளக்குவோம்.

ஜீவகாருண்ய சேவை சம்பந்தமான எனது சுற்றுப் பிரயாணத்தில் யான் கம்பம் என்னும் ஊருக்குப் போக நேர்ந்தது. 1949-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7-ஆம் தேதி மதுரையில் பஸ் ஏறிக் கம்பம் புறப்பட்டேன். அந்தப் பஸ் சுமார் 5 மைல் தூரம் சென்றதும் அதில் ஏதோ பழுது ஏற்பட்டது. எனவே எல்லாப் பிராயாணிகளும் கீழே இறங்கி விட்டோம். மீண்டும் அது புறப்பட சுமார் 1 மணி நேரமாகிலும் பிடிக்குமெனத் தொந்தது. நான் எங்கு சென்றாலும் மலைகளையோ, கோயில்களையோ கண்டுவிட்டால் அவைகளைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமிக்குடையவன். பஸ் நின்ற இடம் புதுக்கோட்டை என்னும் சிறிய கிராமம். அக்கிராமத்திற்குத் தெற்கே சுமார் ஒரு பர்லாங்கு தூரத்தில் கிழக்கு மேற்காக அமைந்துள்ள ஓர் அழகிய மலை தென்பட்டது. அதனைக் கண்ட நான் அங்கே இளநீர் விற்றுக்கொண்டிருந்த ஒருவரைப் பார்த்து, "அம்மலையின் பெயர் என்ன?" வென்று கேட்டேன். அவர், அதற்கு 'அமணர் மலை' என்றார். மற்றொரு பொயவர், "சமணர் மலை எனவும் அழைப்பதுண்டு" என்றார். அவ்விரண்டு சம்பந்தமுடைய தென்பது இயல்பாகவே விளங்கிவிட்டது.

எனவே அத்திருமலையைக் காண வேண்டும் என என் மனம் விழைந்தது. கம்பம் போகும் பிராயணத்தை நிறுத்திக்கொண்டு ஓரன்பர் துணையுடன் சமணர் மலைக்கு விரைந்து சென்றேன். அதன் கீழ்க் கோடியின் அடிவாரத்தில் ஒரு பழங்காலக் குளமும், புதிதாக அமைக்கப் பெற்ற சிறு தேவதையின் கோயிலொன்றும் காணப்பட்டன. பின்னர் மலைமீது ஏறினேன். சமமாக உள்ள ஒர் இடத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஒரு சிறு ஆலமரம் இருக்கிறது. அதன் எதிரே உள்ள பாறையின் ஓரங்களில் கோரைப்புற்கள் செழிப்பாக வளர்ந்து அப்பாறையை மூடிக்கொண்டிருந்தன. இவ்வளவு விசாலமான இடத்தில் ஒன்றையும் காணோமே என எண்ணி அப்பாறையின் மேலே சென்று பார்க்கலமென அங்கொரு மூலையில் அக்கோரைப் புற்களைத் தள்ளிப் பார்த்தோம். அவ்வளவுதான்! அப்பாறையில் அழகாகக் செதுக்கப் பெற்ற தீர்த்தங்கரர் சிலை தென்பட்டது. உள்ளம் பூரித்தேன்! சமணர் மலை என்பதற்குரிய வரலாற்றையே கண்டுவிட்டோம் என ஆனந்தித்தேன்.

உடனே இருவருமாக எல்லாப் புற்களையும் மடித்துச் சாய்த்துப் பார்த்தோம்! அப்பப்பா! பிறவிக் கடலினின்றும் ஆன்மாக்களைக் கரையேற்றுபவர்கள் என்னும் கருத்தைக் கொண்ட தீர்த்தங்கரர் சிலைகள் வாசையாகக் காணப்பட்டன. ஆதிபகவன், மகாவீரர், பாரிஸ்வ நாதர், நேமி நாதர், கோமடேசுவரர் ஆகியோர் சிலைகளைக் கண்டோம். அச்சிலைகள் சாந்தமே குடி கொண்டு மக்களின் பண்பாட்டிற்கு வழிகாட்டும் சிலைகள் தூய்மையின் வடிவங்கள்: அஹிம்சையின் அடையாளங்கள்: அன்பின் உருவங்கள். அருளறமே உயிர் பெற்றெழுந்தாற் போன்ற அச்சிலைகளைக் கண்டதும் என் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுவிட்டன! அறிவு விருந்தளித்த அறவோர்கள் வழிபாடியற்றிய அச்சிலைகள் இன்று போற்றுவாரின்றிப் புற்களால் மூடப் பெற்றுப் பாசி படர்ந்து கிடக்கின்றன! நமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் சிறப்பிற்கும், வளர்ச்சிக்கும் காரணமாயிருந்த அறவோர் உறைவிடம் இன்று காக்கையும், குருவியும் வதியும் இடமாகவே விளங்குகிறது. உலக மக்களனைவருக்கும் அறம் வகுத்த அறவாழி வேந்தர்களான தீர்த்தங்கரர் களின் சிலைகளைக் கண்டதும் என்னை அறியாமல் என் இருகரங்களும் தலைமேல் குவிந்து,

"அறிவன், அறவோன், அறிவு வரம் பிகந்தோன்"
எனச் சிலப்பதிகாரத்தில் சாரணர், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் போற்றும் தோத்திரப்பாடலும் எனது உள்ளத்தெழுந்தது. கண்களில் ஆனந்த நீர் சுரந்தது! சற்று நேரம் அவ் வுருவங்களைக் கண்டு உளமகிழ்ந்து மெய்மறந்து நின்றேன்.

இங்குள்ள விசாலமான பகுதியில் சுமார் 200 பேர் அமர்ந்து தியானிக்கலாம். இவ்வளவு அமைப்புகளுடன் விளங்கும் இச்சிலைகளின் முன்னின்று கிழக்கே உள்ள மதுரையை நோக்கினால் நமது பார்வை முழுவதும் நேரே மீனாட்சியம்மன் கோயில் மேற்குவாயில் கோபுரத்தின் மேல் விழுகிறது. அக்கோபுரத்தினின்றும் இம் மலையை நோக்கினால் இச் சிலைகளை வணங்கக் கூடிய நிலையில் இவை வாசையாக அமைந்துள்ளன. இதனால் இம் மலைக்கும், அக்கோயிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. சிலைகள் உட்கார்ந்த நிலையிலும், நின்ற நிலையிலும் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிலைகளின் பக்கங்களிலும், அடிப்பாகங்களிலும் வட்டெழுத்தாலாகிய கல்வெட்டுச் செய்திகள் பொறிக்கப் பெற்றுள்ளன.

பின்னர் மலையுச்சிக்குச் சென்றேன். அங்கே ஒரு சிறிய கோயிலின் பாழடைந்த பாகங்கள் காணப்படுகின்றன. எனவே கீழே இறங்கி மலையின் தென்பகுதிகளில் கவனத்தைச் செலுத்தினேன். சிறிது தூரம் சென்றதும் ஒரு குகையும், அக்குகையின் வாயிற்புறத்துப் பாறையில் சுமார் நான்கு அல்லது ஐந்தடி உயரமுள்ள மகாவீரரின் சிலையும் காணப்படுகின்றன. அருகில் சென்றேன். அச்சிலையின் சிற்ப வேலையும், அதனுடைய புன்சிரிப்பின் தோற்றமும், உயிருள்ள ஒரு சான்றோரின் உருவம் போல் காட்சியளித்தது.

பின்னர், குகையில் நுழைந்தேன். அக்குகை ஒரே பாறையில் குடையப்பட்டது. மேற்பாகம் வட்டமாக விமானம் (Dome) போல் குடையப்பட்டிருக்கிறது. அதன் பாதி பாகம் உடைந்து கீழே விழுந்து விட்டபடியால் அக்குகையின் அமைப்பு குலைந்து பொலிவிழுந்து கிடக்கிறது. அக்குகையின் மேல் காணும் வட்டமான பாகங்களைச் சுற்றிலும் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் பாவார தேவதைகளின் சிலைகளும் செதுக்கப் பெற்றுள்ளன. உடைந்து விழுந்துள்ள பாகத்திலும், சிலைகள் இருந்திருக்க வேண்டும். அப்பாறையயைப் புரட்டிப் பார்த்தாலன்றி அச்சிலைகளைக் காணவியலாது. அக்குகையின் பாறையில், H. K. Poln-1874 என்று கருப்பு வர்ணத்தால் எழுதப்பட்டுள்ளது. இதனால் H. K. Poln என்ற ஆங்கிலேய அறிஞர் 1874இல் பார்வையிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

பின்னர், அம்மலை முழுவதும் சுற்றிப் பார்த்ததில் சில படுக்கைகளும், கல்வெட்டுக்களும் தவிர வேறு சிலைகள் எதுவும் காணப்படவில்லை. அம்மலைக்கு மேற்கே இரு பர்லாங் தூரத்தில் பெருமாள் கோயில் மலை எனத் தற்காலத்தில் வழங்கும் ஒரு மலையை அணுகினேன். அதன் தென்பாகத்தில் ஒரு திறந்த குகை தென்பட்டது. அக்குகையின் வாயிற்புறத்தின் மேல் பாகத்தில் இரண்டு தீர்த்தங்கரர்களின் சிலைகளும், கல்வெட்டுக்களும் செதுக்கப்பட்டு இருந்தன. அக்குகையில் சமண முனிவர்கள் தவமியற்றியதற்கு அறிகுறியாக வழவழப்பான படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அப்படுக்கைகளின் பக்கத்தில் ஒரு தீர்த்தங்கரான் சிலைவைக்கப்பட்டுள்ளத. இது தவிர மற்றப் பகுதிகள் புதைபொருள் ஆராய்ச்சியாளர் எழுதியனுப்பிய வாறு அமைந்திருக்கிறது.

எட்டு நாட்களுக்கொருமுறை உணவருந்தும், குணசேன தேவர் போன்ற மகாமுனிவர்கள் தவமியற்றியிருப்பதாலும், சமணர் மலை என்றே பெயர் வழங்கியிருப்பதாலும், இம்மலைப் பகுதிகள் கி.மு. நூற்றாண்டுகளிலிருந்தே பல முனிவர்களின் பள்ளியாக விளங்கியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மேலும் இப் புண்ணிய மலைப் பகுதிகளுக்குத் திருக்குறள் தேவரும், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கத் தேவரும், சூளாமணி ஆசிரியர் தோலா மொழித்தேவரும், நாலடியார் இயற்றிய சமண முனிவர்களும், திராவிடச் சங்கம் அமைத்த வச்சிர நந்தியடிகளும், மற்றும் பல அறிஞர்களும், கவிஞர்களும், அரசர்களும், சாவக சாவகிகளும், விஜயம் செய்திருக்கலாமோ என ஐயுறுதற்கு இடமுண்டாகிறது.

இவ்வளவு சீரும், சிறப்பும் பெற்று விளங்கும் வரலாற்றுப் பெருமலையின் பகுதிகள் சாலைக்குப் போடக் கிராவல் கற்களுக்காகச் சர்க்காரால் தூள், தூளாக உடைபடக் கண்டேன். அந்தோ! கைகால் அயர்ந்தன! ஒன்றும் தோன்றவில்லை! அங்கே உடைப்பது மலையா? கற்களா? இல்லை! இல்லை! பாரத நாட்டின் வரலாறுகளை-தமிழகத்தின் கலைச் செல்வங்களை, சமண அறவோர்கள் ஆற்றிய அருள் தொண்டுகளையல்லவோ உடைத்து அழிக்கிறார்கள்! இக் கோரக்காட்சியால் உள்ளம் உடைந்தேன்! ஏதோ என் சொந்தப் பொருளுக்கு ஏற்படும் நஷ்டம் போன்ற உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது! பதைபதைத்தது. உயிரற்ற பிணம் போல் சென்னைக்குத் திரும்பினேன்.

சென்னை வந்ததும் நேரே தமிழ் நாட்டு ஜைனப் பெருமக்களின் தலைவரும், தலைசிறந்த தத்துவப் பேராசிரியருமான இராவ்பகதூர் A. சக்கரவர்த்தி நயினார் M.A., I.E.S. (Rtd) அவர்களிடம் சமணர் மலைச் சிறப்பையும், அங்கு நடைபெறும் அழிவு வேலையைப் பற்றியும் கூறினேன். அவர் உடனே வியப்பும், துக்கம் ஒருங்கே அடைந்தார். என்னை அழைத்துக் கொண்டு நேரே கோட்டையினுள் (Fort St. George) இந்தியா கவர்ன்மெண்டின் தென்னிந்திய புதைபொருளாராய்ச்சி இலாகா சூபாண்டெண் டெண்ட் உயர்திரு. V.D. கிருஷ்ணசாமி அவர்களிடம் சென்றார். சூபாண்டெண்டெண்ட் என்னையும் பேராசிரியர் அவர்களையும் அன்புடன் வரவேற்றார். பேராசிரியர் அவர்கள் சமணர் மலை சம்பவத்தை எடுத்துக் கூறினார். இலாகா அதிகாரி அவர்களும் இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப் படுவதைக் குறித்து வருத்தம் தொவித்தார். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டி என்னை உடனே ஓர் அறிக்கை எழுதித்தருமாறு பணித்தார். யான் சமணர் மலையைக் கண்டதையும், அது கிராவல் கற்களுக்காக உடைக்கப்படுவதையும் குறித்து விவரமாக எழுதித் தந்தேன். பேராசிரியர் அவர்களும் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு சூபான்டெண்டெண்ட் அவர்களிடம் கூறினார். சூபான்டெண்டெண்ட் அவர்களும் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் அம்மலையைப் பாதுகாக்க வேண்டியது தமது கடைமையென்றும், அதனால் விரைவில் மதுரை கலெக்டர் அவர்களுக்கும் தமது தலைமைக் காரியாலயத்திற்கும் எழுதித் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

பின்னர் இந்திய சர்க்கார் கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணரான டாக்கடர், B.CH. சாப்ரா அவர்கள் 'சமணர் மலையைப் பார்வையிட்டதைப் பற்றி இந்து' (The Hindu) பத்திரிக்கை பிரதிநிதியிடம் பின்வருமாறு கூறியதாக 15-7-1940-ஆம் தேதியில் மேற்குறித்த பத்திரிகையில் காணப்பட்டது.

"மதுரைக்கு மேற்கே சுமார் 7 மைல் தூரத்திள்ள சமணர் மலையில் பொறிக்கப் பெற்றுள்ள பத்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த சில கல்வெட்டுக்கள் புதைபொருள் இலாக்காவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டனவென்றும், அங்குள்ள பாறைகள் உடைக்கப்படா வண்ணம் பாதுகாத்தற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவென்றும் மேற்கூறிய இடம் தொன்மையான சமணர்கள் குடியேறின இடம் என்றும், இதுபற்றிய வட்டெழுத்தாலான கல்வெட்டுக்களும் சின்னங்களும் உள்ளன" என்றும் கூறினார்.

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com