முகப்பு வாயில்

 


மற்ற மணிவண்ணனென்னுந் திரு நாமத்தையுடைய திருமாலினது கோயிலையும், புத்தரைச் சார்ந்த ஏழு விகாரங்களையும், தங்களுக்கு வலத்திட்டுச் சென்று ஊர் வாயில் கடந்தனர். காவிரியாற்றின் கடைமுகத்தினின்றும் ஒரு காதம் வந்து சேர்ந்தனர். ஒரு சோலையை அணுகினர். அங்கே தவவேடம் பூண்டுள்ள கவுந்தியடிகளைக் கண்டு இருவரும் பணிவுடன் அடிதொழுதனர். அடிகள் (ஆரியாங்கனை) இருவரையும் உற்று நோக்கினார். அவர்கள் தோற்றத்தால் உயர்குடி மக்கள் என்பதையும் தன்னைப் பக்தியுடன் பணிந்த முறைமையால் அவர்கள் சிராவகர்களென்பதையும், எவ்விதப் பாதுகாப்புமின்றி இருவரும் தனித்து வந்துள்ளதால், ஏதோ நிலைதவறியுள்ளனர். என்பதையும் அறிந்து கொண்டார். அடிகளுக்கு இரக்கம் குடிகொண்டது. தவத்தின் இயல்பு அருள், அல்லவா, அவ்வருளையுடைய மாதவத் தோராகிய அவர் அவர்களை நோக்கி உருக்கத்துடன் உரையாடுகின்றார்.

"மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை யேத்த
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய துள்ளம் உடையேன்"

என்றார்.

இம்மொழியைக் கேட்ட கோவலனுக்கு அடங்கா மகிழ்ச்சியுண்டாயிற்று. பின்னரும் கவுந்தியைக் கைதொழுது,"அடிகளே! தங்கள் திருவருள் எங்களுக்குக் கிடைக்குமாயின் எங்கள் துயரெல்லாம் பறந்தோடிவிடும்" என ஆர்வமோடு மொழிந்தான். பின்னர் கவுந்தியடிகள் வழியில் உள்ள இடர்களை எல்லாம் விளக்கிக் கூறிவிட்டுக் கையில் கமண்டலத்தையும், மயிற்பீலியையும் எடுத்துக் கொண்டு, அறநூல்கள் நிறைந்த ஏட்டுச் சுவடிகளை யுடைய உறியைத் தோளில் தாங்கிய வண்ணம், "மொழிப் பொருள் தெய்வம் வழித் துணையா" கென வழிநடந்தனர்.

"தோமறு கடிகையும் சுவர்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைக் கைப்பீலியுங் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை யாகெனப்
பழிப்பு அருஞ்சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்"

"குறை கூறுவதற்கு அரிதாகிய சிறப்பினையுடைய கவுந்தியடிகள் மொழிப் பொருள் தெய்வமந்திரமாகிய பஞ்ச நமஸ்கார மந்திரங்களைப் பிரார்த்தித்துக் கொண்டு சென்றனர்" என்றார் இளங்கோவடிகள்.

இப்பேருரைகளால் மதுரை மூதூர் ஜைன அறவோர்கள் நிறைந்த உயர்பதி யென்பதையும், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகிய மூவரும் ஜைன சமயச் சான்றோர்கள் என்பதையும் நன்கு அறிகின்றோம். இளங்கோவடிகளின் இணையற்ற அகச்சான்றுகளைப் படித்தறிந்தும் சில பிற்கால இலக்கியமாகிய மணிமேகலை ஆசிரியர் கூற்றைக் கொண்டு வணிகர்குல திலகங்களாகிய கோவலனையும் கண்ணகியையும் பெளத்த சமயத்தவரெனப் பேசுவதும் அதன்படி எழுதுவதும் நமக்கு வியப்பைத் தருகின்றது. தமிழ் நாட்டின் பழம்பதியாய் விளங்கும் மதுரைமா நகரும் அதன் பகுதிகளும் ஜைன சமயத்தின் தலைமைத் தலங்களாக விளங்கின எனும் உண்மையை, மேலும் விளக்க மதுரைக் காண்டத்தின் தொடக்கத்தில்,

"திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக் கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத்திகழொளி சிறந்து
கோதை தாழ் பிண்டிக் கொழதிய விருந்த
ஆதியிற் றோற்றத்து அறிவனை வணங்கி."

என அருகனை வணங்கி உறுதிப்படுத்துகின்றார் இளங்கோவடிகள்.

பெருந்தொகை நூலில்,

"பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை ஆனை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டுமோ பிறவித் தீங்கு"

எனவும் சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இதனால் மதுரைப் பகுதியில் காணும் திருப்பரங்குன்றம், ஒருவகம், பப்பாரம், சமணர் பள்ளி, அருங்குன்றம், பேரானந்தம், ஆனைமலை, அழகர் மலை, ஆகிய எண்குன்றங்களும் அறவோர்கள் நிறைந்த பள்ளிகளாகவும் அருகக் கடவுளின் திருப்பதிகளாகவும் விளங்குவதால் அம் மாண்புறு மலைகளின் பெருமையினைப் புகழ்வாருக்கும் சிந்தையிலிறுத்தி அறவழி நிற்போர்க்கும், பிறவித்தீங்கு அணுகாது என்கிறார்.

சீன யாத்திரிகர்


எனவே இதுவரை யாம் கண்ட இலக்கிய ஆதாரங்களை மெய்ப்பிக்க சீன யாத்திரிகர் யுவான் சுவாங்கின் இந்திய விஜயம் பெருந்துணையாகிறது. அவர் நமது நாட்டிற்குக் கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயம் செய்து மதுரை காஞ்சிபுரம் முதலிய நகரங்களில் சுற்றுப்பிரயாணம் செய்தார். அவர் தமது குறிப்புப் புத்தகத்தில் மதுரையிலும் காஞ்சிபுரத்திலும் ஜைன சமயம் மிகச் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது என எழுதியுள்ளார்.

அறவோர் பள்ளிகள்

இவ்வாறு பண்டைய இலக்கியங்களிலும், வரலாற்றுச் செய்திகளிலும், பொறிக்கப்பெற்றுள்ள உண்மைகளை எந்நாளும் கண்டுகளிக்கும் வண்ணம் மதுரையிலும், அம் மாநகரைச் சுற்றிலும் உள்ள தீர்த்தங்கரர் சிலைகள், ஜினர் கோயில்கள் மலைகள், குகைகள், கல்வெட்டுச் செய்திகள், ஓவியங்கள் பள்ளிகள் ஆகியவை இன்றும் நின்று நிலவுகின்றன பெருந்தொகை நூலில் கண்ட எண் குன்றங்களுடன் விருஷபர் மலை, பசு மலை, சமண மலை எனப் பல குன்றுகள் பண்டைய வரலாற்றுச் சின்னங்களுடன் அறவோர் உருவங்களைத் தாங்கிக் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.

இவைகளைக்கொண்டு தமிழ் நாடும், ஜைன சமயமும் ஒன்றை ஒன்று பிரிக்கவொண்ணாத நிலையில் பண்டைய காலந்தொட்டு தொடர்பு கொண்டுள்ளது என்பது விளங்கும். ஜைன சமயத்தின் வரலாற்றை ஆராயவேண்டுமாயின் தமிழ் நாட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். புதுக்கோட்டை சித்தன்னவாசல் கல்வெட்டுகளில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப்பெற்றுள்ள பிராமி கல்வெட்டுச் செய்திகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டே இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப் பழமையானதென்று, கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் ஒரு முகமாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு சுமார் இருபது பிராமி கல்வெட்டக்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. எனவே ஜைன சமய வரலாற்றைத் தமிழகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுவதில் எவ்வித அபிப்பிராய பேதமும் இருப்பதற்கில்லை. மேலும் முதல் அகத்தியர் வரலாற்றைக் கொண்டு ஆராயின் கிருஷ்ண பகவான் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் ஜைன சமயம் சிறப்புற்றிருந்ததென்று விளங்குகிறது. முதல் அகத்தியர், கிருஷ்ண பகவானின் உத்தரவின் போல் சுமார் 18 குடும்பங்களுடன் தமிழகத்தில் குடியேறினார் என்னும் வரலாற்றால் ஜைன சமயம் தமிழகத்தின் பழமையான சமயம் என்பது வெளியாகிறது. இதனால் சந்திரகுப்த பேரரசர் காலத்தில் பத்ரபாகு சுவாமிகளின் தென்னாட்டு விஜயம் முதற்கொண்டே ஜைன சமயம் தொடர்பு கொண்டது என்னும் வரலாறு பெருந்தவறாகும். ஜைன சமயம் முதல் அகத்தியர் காலத்திற்க முந்திய தமிழகத்தில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதுதான் உண்மையாகும் இக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் திருக்கலம்பக ஆசிரியர்.

"மயிலாபுரி நின்றரவாயாசனவும் பான்
மலர் போதிலிருந்தவ ரலர் பூவினடந்தவ
ரயிலார் விழிமென் கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திரனணி யாடலு கந்தவர்
கயிலாய மெனுந்திரு மலைமேலுறை கின்றவர்
கணநாயகர் தென்றமிழ் மலைநாயகர் செம்பொனி
னெயிலாரில குஞ்சின கிரியான்பவர் சம்பைய
ரெனையான நினைந்துகொல் வினையேனுளமமர்ந்ததே.

என்னும் தோத்திர பாவினால் தென் தமிழ் மலை நாயகன் எனப் பொதிகை மலையில் கோயில் கொண்டுள்ள பகவான் நேமி தீர்த்தங்கரரை வழிபடுகிறார். பகாவன் நேமிநாதர் கிருஷ்ண பகவானின் ஒன்று விட்ட சகோதரர், கிருஷ்ண பகவானுக்கு இளையவராயினும் சம காலத்தவர் பகவான் நேமிநாதர், கிருஷ்ண பகவான் ஆகிய இருவான் வரலாறுகளும் ஹாவம்ஸ புராணத்தில் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. நேமிநாதர், பகவான் விருஷபதேவர் அறநெறிகளை மேற்கொண்டு கடுந்தவம் புரிந்து பாநிர்வாணமடைந்தவர்; இருபத்திரண்டாவது தீர்த்தங்கரர்; இவர் காலம் முதல் அகத்தியான் காலமாதல் வேண்டும். இவர் பகவானின் அறவுரைகளைக் கேட்டு வழிபாடியற்றும் பாக்கியமும் பெற்றிருக்கலாம். எனவே அகத்தியர் பொதிகை மலையில் வீற்றிருந்து தமிழ் வளர்த்த காலத்தில் தம்முடைய நாட்டைச் சார்ந்தவரும் தாம் நேரே கண்டு வழிபாடியற்றி பகவான் நேமிநாதற்குப் பொதிகையில் சின்னங்கள் அமைத்திருக்கலாம். எனவே திருக்கலம்பக ஆசிரியர் பகவான் நேமி நாதர் கோயில் கொண்டுள்ள மயிலாப்பூர், தீபங்குடி, திருமலை, சினகிரி, சம்பை முதலிய பாடல் பெற்று திருப்பதிகளைக் குறிப்பிடுகையில் முதல் அகத்தியரால் பூசிக்கப்பெற்ற நேமிநாதனின் திருப்பதியையும் விளக்கத் தென்தமிழ் மலைநாயகன் எனச் சிறப்பித்துப் போற்றுகின்றார்.

இவ் வரலாற்றால் ஜைன சமயம் முதல் அகத்தியர் காலத்திலிருந்தே தமிழகமெங்கும் பரவியிருந்ததென்பதும், ஜைன அறவோர்களின் பள்ளிகளும் கலைவளர் மன்றங்களும், அறங்கூறு அவைகளும் நிறைந்திருந்தன வென்பதும் நன்கு புலப்படுகின்றன. இவ்வாறு தமிழ் நாட்டுப் பெருமக்களின் சமயமாக விளங்கிய ஜைன சமயத்திற்குப் பாண்டிய நாடும் சிறப்பாக மதுரை மூதூரும் தாயகமாக விளங்கின என்னும் உண்மையை நாம் முன்னரே ஆராய்ந்தறிந்தோம். பாண்டிய நாட்டின் தலை நகராகிய மதுரைமா நகரைச் சுற்றியுள்ள மலைகளில் ஜைன அறவோர்கள் வீற்றிருந்தனர் என்பதையும் கண்டோம்.

சமணர் மலை

அறிவும் ஒழுக்கமும் மக்கள் பண்பிற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டையும் அடிப்படையாகக்கொண்ட நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளாலாய ஆபகரணங்களால் மக்கள் அலங்காக்கும் அறிவு சான்ற அறவோர்கள் வதியும் மலைகளில் சமணர் மலையும் ஒன்று. சமணர் என்றால் பகவான் விருஷபதேவர் அருளிய துறவற நெறியை மேற்கொண்டோர் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். தொல்காப்பியமும் திருக்குறளும் கூறும் துறவற நெறியும் இதேயாகும். இத்தூய துறவிகளைப் பண்டைய தமிழ் நூல்கள் கடவுளர் என்றும் தெய்வங்கள் என்றும் போற்றுகின்றன. சிறப்பாகக் "கந்தன் பள்ளிக் கடவுளர்க்கெல்லாம்" எனச் சிலப்பதிக்காரத்திலும், "காசறு துறவின் மிக்க கடவுளர்"எனச் சீவக சிந்தாமணியிலும், "கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்ட மொத்தார்" எனக் கம்பராமாயணத்திலும் காணலாம். எனவே இத்தகைய அருந்தவத்தோர் பலர் அறம் வளர்த்து வந்தமையால் இம்மலைக்குச் சமணர் மலை எனப் பெயர் வழங்கலாயிற்று. இவ்வறவோர் மலை மதுரைக்கு மேற்கே ஐந்து மைல் தூரத்தில் கம்பம் போகும் பஸ் பாதையில் புதுக்கோட்டை என்னம் சிறிய கிராமத்தினருகே இருக்கிறது.

இம் மலை மிகப் பழங்காலத்திலிருந்தே ஜைன அறவோர்களின் உறைவிடமாக விளங்கி வந்தள்ளது. புதுக்கோட்டைச் சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ளவை போலவே இங்கும் பிராமி எழுத்தாலாய கல்வெட்டுச் செய்திகள் பொறிக்கப் பெற்றிருப்பதால் இம் மலை கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுகளிலிருந்தே சமணர் மலை என்று பெயர் பெற்றிருக்க வேண்டுமெனக் கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் ஜைனசமயம் தொன்றுதொட்டுத் தமிழர் சமயமாக விளங்கி வருவதால் இந்நாட்டு மன்னர்கள் இவ்வளவு பரந்த இடங்களையும், மலைகளையும் குகைகளையும், கோயில்களையும், பள்ளிகளையும் அமைத்துப் பல்கலைச் செல்வர்களாக விளங்கிய ஜைன அறவோர்களுக்கு உரிமையாக்கி உள்ளனர். மேலும் சேர, சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் பரம்பரை வரலாற்றையும் அவர்கள் மேற்கொண்ட அறநெறியையும், கல்வெட்டுச் செய்திகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் நாம் கொண்ட கருத்தையே உறுதிப் படுத்துகின்றனர். எனவே பாண்டிய மன்னர்களின் வழி வழி வந்த பல அற நிலையங்களில் சமணர் மலையும் ஒன்றாகும்.

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com