முகப்பு வாயில்

 


4. முத்துப்பட்டி

மதுரை வட்டத்தில் வடபழஞ்சி என்ற ஊருக்கு அண்மையிலுள்ளது முத்துப்பட்டி என்னும் சிற்றூராகும். இங்கு மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சிறிது தொலைவிலுள்ள மலையில் 43 அடி நீளமுள்ள பொய குகைப்பள்ளி உள்ளது. இதில் கி.பி. 1,2 ஆம் நூற்றாண்டுகளில் 30 கற்படுக்கைகள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதிலிருந்து, இங்கு மிகுதியான துறவியர் சமயப் பணி செய்திட வந்திருந்தமை தொய வருகிறது. பிற்காலத்திலும் இங்கு சமயப்பணிகள் சிறந்திருந்ததை அறிவுறுத்தும் வகையில் தீர்த்தங்கரர் சிற்பங்களும், கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இந்தத் திருவுருவங்களை கனகவீரப்பொயடிகள், மகாநந்தி என்னும் துறவியர் வடிக்க ஏற்பாடு செய்ததாக அறிய வருகிறோம்.

5. கொங்கர் புளியன்குளம்

மதுரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள ஊர் கொங்கர் புளியன்குளமாகும். இத்தலத்திலுள்ள குன்றில் ஆறு குகைகள் காணப்படுகின்றன. இவற்றிலும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்தே சமணத் துறவியர் தங்கியிருந்ததைத் தொவிக்கும் வகையில் கற்படுக்கைகளும், பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. இக்குகைப் பள்ளிகளுள் ஒன்றின் முகப்பை ஒட்டி உபருவன் என்னும் சிராவகர் தாழ்வாரம் ஒன்றை அமைத்ததாகவும், அதற்கு பேராதன் பிட்டன் என்பவர் கூரைவேய ஏற்பாடு செய்ததாகவும் அறிய வருகிறோம். பிற்காலத்தில் அஜ்ஜநந்தி அறவோர் இக்குகையின் முகப்பிற்கு மேலாக தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றைச் செதுக்க வழிவகை செய்திருப்பதாகவும் கூறப்பட்டள்ளது.

6. திருப்பரங்குன்றம்

மதுரைக்குத் தெற்கில், முருகப் பெருமானின் சிறப்பு வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்றாகக் கருதப்பெறும் திருப்பரங்குன்றத்து மலை கி.பி. 1,2 ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயச் சார்புடையதாகவும் திகழ்ந்திருக்கிறது. இம்மலையின் பின்புறத்தில் உயரமான பகுதியில் 56 அடி நீளமுள்ள குகைத்தளமும், அதில் ஏராளமான கற்படுக்கைகளும் உள்ளன. இவற்றில் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுக்கள் பலவும் சிதைந்த நிலையிலிருக்கின்றன. எனினும் ஒன்றில் அந்துவன் என்னும் பெயர் இடம் பெற்றுள்ளது. மற்றொன்றில் ஈழ நாட்டு எருக்காட்டுரைச் சார்ந்த பொலாலையன் என்னும் சிராவகர் இங்கு கற்படுக்கைகள் அமைத்த செய்தியைக் கொண்டிலங்குகிறது. இது இலங்கை நாட்டிற்கும், தமிழகத்திற்கும் சமண சமயத்தின் வாயிலாக இருந்த நல்லுறவினை வெளிப்படுத்துவதாக இருப்பது சிறப்பிற்குரியதாகும். இங்குள்ள பாறைகளிலும் பிற்காலத்தில் தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் வடிக்கப்பட்டு, அவை வழிபடப்பட்டு வந்திருப்பதைக் காணலாம்.

7. வாச்சியூர்

இவ்வூர் மதுரைக்குத் கிழக்கில் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அடுத்தடுத்துள்ள மூன்று குன்றுகளுள் கிழக்கிலுள்ளதில் மிகுந்த இடவசதியினைக் கொண்ட குகை காணப்படுகிறது. இதுவே கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளில் சமணப் பள்ளியாகத் திகழ்ந்ததாகும். இதனை அறிவுறுத்தும் வகையில் இதில் கற்படுக்கைகளும், பிராமிக் கல்வெட்டுக்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் படுக்கைகளுள் மிகுதியானவையும் உடைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும் இவற்றிலுள்ள கல்வெட்டுக்கள் மிகவும் அழிந்த நிலையில் இருப்பதால், இவற்றின் செய்திகளை அறியப் பெறும் வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.

8. அழகர்மலை

திருமாலிருங்குன்றம் எனப் போற்றிப் பரவப்படும் வைணவத் தலமாகிய அழகர் மலையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமணத் துறவியர் குடிகொண்டதாகத் திகழ்ந்திருக்கிறது. இம் மலையில் ஏறத்தாழ 150 அடி நீளமுள்ள குகைப்பள்ளியும், அதன் உட்புறத்தில் ஆங்காங்கே கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தப் படுக்கைகளை ஆதன் எனும் பொன்வணிகன், இளச்சந்தன் என்னும் இரும்பு வியாபாரி, கணதிகன் என்ற உப்பு வணிகன், நெடுமல்லன் எனும் சர்க்கரை வாணிகன், இளைய ஆதன் என்னும் துணிவியாபாரி முதலிய பல்வேறு வணிகர்களும், கழுமாறன், தியசந்தன் என்னும் சிராவகர்களும் அமைத்திருக்கின்றனர். இங்கு உறைந்து சமயப் பணி மேற்கொண்டோருள் கணிநந்தன், கணிநாகன், காசிபன் முதலிய ஆண் துறவியரும், சாபமித்ரா எனும் பெண் துறவியும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இங்குள்ள குகைப்பள்ளியின் முகப்பிலும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தீர்த்தங்கரரது அழகிய சிற்ப வடிவினைக் செதுக்க அஜ்ஜநந்திப் பெருந்துறவி ஏற்பாடு செய்திருப்பது ஒரு சிறப்பாகும்.

9. கருங்காலக்குடி

மேலூருக்கு ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் வடக்கிலுள்ள கருங்காலக்குடியில் பஞ்ச பாண்டவர் குட்டு என்றழைக்கப் பெறும் குன்று ஒன்றுள்ளது. இக்குன்றில் அகலமான குகைத்தளமும், சிறிய அளவிலான குகைகளும் காணப்படுகின்றன. இவை அனைத்திலும் கற்படுக்கைகள் ஆங்காங்கே செதுக்கப் பட்டிருப்பதிலிருந்து கி.மு. 2,1 ஆம் நூற்றாண்டுகளில் மிகுதியான துறவியர் உறைந்து சமயப்பணி ஆற்றியிருக்க வேண்டுமென்பது தெளிவாகிறது. இந்தத் துறவியருள் அந்தை அரிதி என்பவரது பெயானைத் தவிர எஞ்சியோரது பெயர்கள் பொறிக்கப்படவில்லை. கொங்கர்புளியன்குளம், ஆனைமலை, அழகர் மலை போன்ற இடங்களிலுள்ள குகைப் பள்ளிகளில் சிற்பத் திருப்பணிகள் செய்வித்திருப்பது போன்று இங்கும் அஜ்ஜநந்தித்துறவியே தீர்த்தங்கரர் திருவடிவைச் செதுக்க வழிவகை செய்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

10. கீழவளவு

மேலூரிலிருந்து ஏறத்தாழ 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது இத்தலமாகும். இவ்வூருக்கு அருகிலுள்ள குன்றில் காணப்பெறும் குகையிலும் கிறித்தவ நூற்றாண்டின் தொடக்கத்தில் சமணத் துறவியர் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இக்குகையில் இடம் பெற்றுள்ள படுக்கைகளைத் தொண்டியைச் சார்ந்த இளவன் என்னும் சிராவகர் அமைத்து உதவி புரிந்திருக்கின்றார். தொடக்க காலத்தில் இங்கு சமயப் பணி ஆற்றிய அறவோர்களது பெயர்கள் எவையும் தொய வரவில்லை. பிற குகைப் பள்ளிகளிலுள்ளதைப் போன்று இங்கும் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சிற்பத் திருப்பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இவற்றை ஸ்ரீ லோகபானு பட்டாரகர் என்னும் பெருந்துறவியும், சங்கரன் ஸ்ரீவல்லபன், ஸ்ரீகட்டி ஆகிய சிராவகர்களும் செய்திருக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட மலைகளில் மட்டுமின்றி சோழ வந்தானுக்கு அருகிலுள்ள விக்கிரமங்கலத்திலும், நிலக்கோட்டைக்கு அண்மையிலுள்ள மேட்டுப்பட்டியிலும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்தே சமண அறவோர்கள் அரும்பணிகளை ஆற்றி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் குபேரன், செங்குபேரன், அந்தை அரிதி, ஐராவதன், விசுவன் முதலிய பலர் கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்ததாக அறிய வருகிறோம்.

தமிழகத்தில் காலத்தால் முந்திய சமணச் சான்றுகளை மிகுதியாகக் கொண்டுள்ளது மதுரைப் பகுதியாகும். இந்தச் சான்றுகளின் அடிப்படையில் நோக்கும்போது இங்குள்ள மலைக்குகைகளில் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே துறவியர் மிகுதியான எண்ணிக்கையில் உறைந்து அறநெறி போற்றியிருப்பது தொயவருகிறது. தொடர்ந்து இப்பகுதிகளில் சமண சமயம் செல்வாக்குற்றிருந்த போதிலும் அது பற்றிக் கூறும் வகையில் தொல்லியல் சான்றுகள் கிடைத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சைவ சமயத்தின் அதிவேக எழுச்சியால் மதுரைப் பகுதியில் சமண சமயம் மிகுந்த பாதிப்பு எய்தியதை தேவாரம், பொயபுராணம் போன்ற நூல்களின் வாயிலாக அறியப் பெறுகிறோம். ஆனால் கி.பி.9 ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் சமண சமயம் மிகுந்த செல்வாக்கு பெறலாயிற்று. இதனை அந்தந்தப் பகுதியிலுள்ள கல்வெட்டுக்களும், சிற்ப வடிவங்களும் திறம்பட விளக்குபவையாகும் அந்த காலக் கட்டத்தில் பாண்டிய நாட்டில் சமண சமயம் மீண்டும் தழைத்தோங்க பல்வேறு அறவாழி அண்ணலார் அயராது உழைத்திட்ட போதிலும், அவர்கள் அனைவரைக் காட்டிலும் அஜ்ஜநந்திப் பெருமானார் ஒப்பற்றவராகத் திகழ்ந்திருக்கிறார். மதுரையைச் சுற்றியுள்ள தலங்களில் மட்டுமின்றி, குமாமாவட்டத்தைச் சார்ந்த திருச்சாரணத்து மலை போன்ற தொலைதூரத்துத் தலங்களுக்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர் சென்று, சமய, சமுதாயப் பணிகளை நிறைவேற்றிருப்பது இவரது ஈடு இணையற்ற தன்மையினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிவுறுத்துவதாகும்.

சமண சமயத்தின் தொன்மையான வரலாற்றினையும், தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பாயத்தையும், பறை சாற்றும் இந்த அறவோர் பள்ளிகள் பிற்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் போற்றிப் பாதுகாக்கப் படாத நிலையில் இருந்து வருகின்றன. இயற்கையின் சீற்றங்கள் ஒருபுறமும், பண்பாட்டுச் சின்னங்களின் பாங்கினை பகுத்துணர இயலா மாக்களின் பண்பற்ற செயல்கள் மறுபுறமும் இந்த சீரிய சான்றுகளைத் சிறிது சிறிதாகச் சிதைத்து வருவது வேதனைக்குரியதாகும். எனவே இவற்றைப் பாதுகாக்கப் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்வது இன்றியமையாததாகும்.

திங்கள் மும்மாரிபெய்க திருவறம் வளர்க
செங்கோல் நன்கினித ரசன் ஆள்க நாடெலாம்
விளைக மற்றும்
எங்குளவறத்தினோரும் இனிதூழிவாழ்க
எங்கள் புங்கவன் பயந்த நன்னூல் புகழுடன்
பொலிகமிக்கே.

- சிலப்பதிகாரம்.ச்

 

!

1  2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com