Ӹ š¢

 எனவே, நிலையாமைக் கொள்கை இரண்டறங்களுக்கும் துணை செய்கின்றது. அவர்தம் இவ்வற இயல்பினையும், துறவற நெறியையும் பாராட்டிப் போற்றியுள்ள துதி நம்மைப் பரவசப் படுத்துகின்றது.

"மன்னுயிர் காத்தலான் மனம்விட்ட வருளினோடு
இன்னுயி ருய்கென்ன வில்லறமு மியற்றினையே
புன்மைசா லறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
தொன்மைசால் குணத்தினாற் றுறவரசாய்த் தோற்றினையே"
-யாப், விருத்-சூத். 84, உரைமேற்கோள்.

பிறப்பினால் அனைவரும் ஒன்றே

எனவே, விருஷபதேவர் அமைத்த சமதாயத் துறையில் பசி, பிணி, பகையின்றி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற மனப்பான்மையோடு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தேவைக்குமேல் பொருளைத் திரட்டாமை என்னும் பொதுவுடைமைத் தத்துவம் பொலிவுற்றிருந்தது. செய்தொழில் வேற்றுமையன்றிப் பிறப்பினால் அனைவரும் ஒன்றென விளங்கினர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - (குறள். பெருமை.2)

வாணிபம் கைத்தொழில் முதலியன வளர்ந்தோங்கின வாணிபத் துறையில் அயல்நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இவைகளை சாத்திரம் சாற்றும்.

தமிழ்நாட்டுப் புலவர் பெருமக்களே! வரலாற்றுப் பேராசிரியர்களே! அறிஞர்களே! விருஷபதேவர் கொள்கை ஒரு சமூகத்திற்கோ, ஒரு நாட்டவருக்கோ சாயதன்று உலகிற்கே உரியது. உலகிலும் மக்களுக்கு மட்டுமல்லாமல் மன்னுயிர் அனைத்திற்கும் பொதுவானது.

தமிழ்நாட்டுப் பண்டைய சமணப் பேரறிஞர்கள் அவ்அவறிவன் அருளிய அறிவியக்கக் கொள்கையைத் தழுவி, அறம் பெரும் நூல்களை யாத்துள்ளனர். அவைகளே தொல்காப்பியம், திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, நீலகேசி, நாலடியார், யசோதரகாவியம், ஏலாதி, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, ஜீவசம்போதனை, அறநெறிச் சாரம், திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி போன்ற பல நூல்களாம்.

இவைகள் யாவும் சமய நூல்களே அல்ல உலக மக்களுக்கெனவே சமண அறிஞர் பெருமக்களால் இயற்றி அருளியவை. இவ் வுண்மையைப் பரணிக்கோர் சமயங்கொண்டான் என விதந்தோதப் பெற்ற சமண அறிஞராகிய கவிச் சக்கரவர்த்தி சயங் கொண்டாரை, அபயன் 'நுமதூர் யாது?' என்று கேட்டபோது, அவர் சோழவள நாட்டிலே, நன்னிலத்திற்கு அண்மையிலுள்ள 'தீபங்குடி' தமதூர் என்று பெருமையாகக் குறிப்பிடும் பொழுது அவர் சொன்ன கீழ்வரும் அழகான கவிகளால் காணலாம்.

நீரும் கயமூ மிகுசோ லைகளும்
நிரைசேர் பழனக் கரையின் கமுகுங்
காரும் பரவு மவனா டிதெனக்
களிகூர் தமிழ்நா வலர்வாழ் புரியூர்.

காலைப் பொழுதும் மாலைப் பொழுதும்
கல்விப் பொருளே செல்வப் பொருளாய்
மேலைக் குறுநற் குணனைக் கருதி
மிகுமா தவமே புரிவார் தமதூர்.

செய்யும் வினையும் இருளுண் பதுவும்
தேனும் நறவும் ஊனும் கொளலும்
பொய்யுங் கொலையும் களவுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்வார் தமதூர்.

வஞ்சங் கருதார் பிறனில் விழையாச்
வாமன் வழிநூல் வழுவார் நிதமும்
இஞ்சொன் மிகுமா தவர்தான் தொழுதே
இயல்நல் லறமே புரிவார் தமதூர்.

நிலைசேர் பொருளும் நிலையில் பொருளும்
நிமலன் நெறியால் உலகுக் குரைசெய்
தலையா கியமா தவர்தாள் நிதமும்
தலை கொண் டிதமே புரிவார் தமதூர்.

அனகன் அமலன் அரியே றணையான்
ஆதிப் பெருமா னலர்மேல் வருவோர்
பனகப் பணி நீ ழலில்வா ழருகன்
பததா மரையே பணிவார் தமதூர்.


வண்டார் பிண்டிக் கிறைமுக் குடையான்
வாமன் தருமத் திகீரிப் படையான்
தொண்டா கியமா தருவக் சூரியன்
துகளார் மன்முற் றவருக் குரியன்.

பண்டார் வேதப் பரமன் சரனைப்
பாவால் நிதமும் பணிவார் தமதூர்
குண்டார் முலைமென் மடவா ரதரங்
கோபங் கடியுந் தீபங் குடியே!

உலக சமாதானமும் சமண தர்மமும்

இவ்வளவு சிறப்புற்று விளங்கும் அறிவியக்கக் கொள்கையாகிய திருவறங்களைத் தற்கால அறிஞர் பெருமக்களும் வரவேற்கின்றனர். கல்கத்தாவிலே உலக சமாதானக் கோஷ்டியார் விஜயம் செய்தபோது அவர்களுக்கு வரவேற்பு நடத்திய சமயத்தில், ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளை விசாரணை செய்த சர்வதேச டிரிபுனல் முன்னை நீதிபதி டாக்டர் ராதாவினோத்பால் அவர்கள் கூறிய பல்வேறு விஷயங்களின் இடையில் எந்தச் சமாதனப் பிரியர்களின் மகாநாட்டுக்கும் பிரதிநிதிகளை அழைத்து நல்வரவு கூறும் உரிமை எவருக்கேனும் உண்டெனில், அது சமண சமூகத்தினருக்கே; உலக சாந்தியை அடைய வல்ல அஹிம்ஸைக் கொள்கையானது சமண தீர்த்தங்கரர்களால் மனித முன்னேற்றக் குறிக்கோளுக்காக அளிக்கப் பெற்ற உண்மையான மிகச் சிறந்த 'தானம்' ஆகும். உலக சாந்தியைப் பற்றிப் பேசும் உரிமை பார்ஸ்வநாதர், மகாவீரர் ஆன மகான்களைப் பின்பற்றும் நெறியாளரைத் தவிர வேறு யாருக்கு உண்டு?" (The Jaina Gazette, Jan' 1950) என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறே பல அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றனர். எனவே, உலக மக்களின் உரிமையுடையதாகிய ஜைனத் திருவறங்களை மக்களின் நன்மையைக் கருதிப் பரப்புங்கள்! உலகில் சமாதனம் நிலவும்! சகோதர உணர்ச்சி வளரும்! ஒழுக்கம் உச்ச நிலை அடையும்!

வாழிய நல்லறம்!
 

1   2   3   4


 

 

Ӹ š¢        www.jainworld.com