முகப்பு வாயில்

 


அறநிலைய ஆட்சிப் சிறப்பு:

நமது சுவாமிகள் அறநிலைய ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின்னர் நமது சமய வளர்ச்சிக்கான அரும்பெரும் சேவைகளைச் செய்துள்ளார்கள். நமது சமய நூல் பயிற்சிக்காக கோலாப்பூரில் ஓர் இலவசப் பள்ளியை திறந்து வைத்தார்கள். ஏழை மாணவர்களுக்கு உணவு வசதியும் அளித்துக் கல்வியை வளர்த்துவருகிறார்கள் அப்பள்ளிக்கு ஜைன சாஸ்திரியர் ஒருவரே ஆசிரியராக இருக்கின்றார். இன்றும் இலவச உணவுடன் பன்னிரண்டு மாணவர்கள் படிக்கின்றார்கள். இது தவிர உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கும் அவ்வப்பொழுது பொருளுதவி செய்து வருகின்றார்கள்.

நூல் நிலையம்:

கோலாப்பூர் மடத்தில் ஓர் சிறந்த ஜைன சமய நூல் நிலையம் அமைத்துள்ளார்கள். சுமார் 2000 புத்தகங்களுக்கு மேல் இருக்கும் ஏழு பிரோக்கள் கொண்ட அந்நூல்கள்யாவும் நல்ல முறையில் வாசை எண்கள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளில் இரண்டு பிரோக்கள் ஓலைச்சுவடிகளைக்கொண்டவை. பல அறிஞர்கள் அவ்வப்பொழுது நூல் நிலையத்திற்கு வந்து படிக்கின்றார்கள். தினந்தோறும் சுவாமிகளின் அறவுரைகளும் நிகழ்வதால் மக்கள் பலர்வருவதுடன் தங்களுக்குரிய சந்தேகங்களையும் சுவாமிகளையும் கேட்டுத் தெளிக்கின்றார்கள்.

கோயில்கள்:

நமது மடத்தைச் சார்ந்த பல கோயில்களும் இருக்கின்றன. சதுர்விம்சதி தீர்த்தங்கரர் ஆலயமும், சுக்கிரவாரப்பேட்டையிலுள்ள பார்ஸ்வநாதர் கோயிலும் மிகச்சிறப்புடையன. இவை தவிர கங்காவேஸில் மானஸ்தம்பக் கோயில் மங்களவாரப்பேட்டையில் நேமிநாதர் கோயில், ரவிவாரப்பேட்டையில் சந்திரநாத சுவாமி கோயில், சாஹிபுரியில் நேமிநாதர் கோயிலும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளன. இக்கோயில்களிலெல்லாம் பூஜை முதலியவைகள் காலந்தவறாமல் நடந்தேறிவருகின்றன. தினந்தோறும் ஜைனப்பெருமக்கள் பலரும்-ஆண்கள். பெண்கள் சிறுவர்கள் ஆகியோர் காலை மாலை இருவேளைகளிலும் கோயில்கட்குச் சென்று அருகப்பெருமானை வணங்கி வலங்கொண்டு வழிபாடியியற்றுகின்றார்கள்.

இவ்வாலயங்களில் மடத்தின் சார்பில் ஆண்டு தோறும் விழாக்கள் பல நடக்கின்றன இவ்விழாக்களில் சுருத பஞ்சமி விழாவே மிக முக்கியமானதாகும். இவ்விழாவை கோலாப்பூர் மடத்தைச் சார்ந்த பல பாகங்களிலுமுள்ள ஜைனப் பெருமக்கள் யாவரும் திரண்டு வந்து சிறப்பிப்பார்கள். இவ்விழாக் காலங்களில் பல ஜைன அறிஞர்களையும் அறவோர்களையும் கொண்டு தினந்தோறும் உபந்யாசங்கள் நடத்தப்படும்.

ஹொம்புஜம் மடத்திற்குரிய சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில் ஒன்றும் கோலாப்பூரில் இருக்கின்றது. நமது திகம்பர சமயத்திலேயே நான்கு பிரிவுகள் இருக்கின்றன. நமது மடத்தைப்போலவே மற்ற மூன்று பிரிவினர்களுக்கும் மூன்று மடங்கள் இருக்கின்றன. ஆனால் அம்மடங்கள் சிறந்த முறையில் நடைபெறவில்லை. அப்பிரிவினர்களும் நமது மடாதிபதி ஸ்ரீ சுவாமிகளைத் தங்கள் தங்கள் விசேஷ விழாக்களுக்கு அழைத்துச் செல்கின்றார்கள். சாதுர்மாதவிரத காலங்களாகிய நான்கு மாதங்களுக்கும் சுவாமிகளைத் தங்கள் தங்கள் கிராமங்களுக்கு அழைத்துச்சென்று அறங்கேட்கின்றார்கள்.

சுவாமிகளும் கோலாப்பூர் சமஸ்தானத்திலும், மகாராஷ்டிரத்திலும் உள்ள நமது சமயத்தவர்கள் எப்பிரிவினராயிலும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று அறவுறைப்பகர்ந்து வருகின்றார்கள். மேலும் கோலாப்பூரில் குஜராத் மார்வார். ஜைனப் பெருமக்கள் பெரும்பாலோர் சிறந்த வியாபாரிகளாக விளங்குகிறார்கள். இவர்களுக்கெனத் தனிக்கோயில் ஒன்று இருக்கிறது. அக்கோயில் அழகாகவும் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. அவர்களும் சுவாமிகளைத் தங்கள் பக்திக்கும், அன்பிற்கும் உரியவராகக் கொண்டு அறவுரை கேட்டு வருகின்றார்கள்

கோலாப்பூர் நகால்மட்டும் நமது சமயத்தவர் குடும்பங்கள் சுமார் 300 இருக்கின்றன சமஸ்தான முழுவதிலும் சுமார் 100 கிராமங்கள் இருக்கின்றன.

எல்லாரும் நல்ல நிலைமையில் வாழ்கிறார்கள் கல்வித் துறையிலும், வியாபாரத் துறையிலும், முற்போக்கடைந்துள்ளார்கள். கிராம மக்கள் விவசாயிகளாக இருப்பினும் அந்தந்த கிராமத்தில் செல்வாக்குப்பெற்று விளங்குகிறார்கள் கோலாப்பூர் சமஸ்தானத்தில் அரசாங்க அலுவலகங்களில் பலர் உத்தியோகம் புரிகின்றார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றார்கள். இன்றுமட்டுமல்ல: பண்டைய காலம் தொட்டே மகாராஷ்டிரத்தில் ஜைனர்கள் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளார்கள். "ஒரு காலத்தில் மகாராஷ்டிரத்துப் பள்ளிகளில் ஜைன அறிஞர்களே ஆசிரியர்களாக இருந்து மக்கள் அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்து வந்தார்கள்" என ஆச்சாரிய வினோபாஜி டில்லியில் நடந்த மகாவீர ஜயந்தி யன்று பாராட்டியுள்ளார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கோலாப்பூர் சமஸ்தானத்தில முதல் அமைச்சராக பணியாற்றியவர் 'லத்தே' என்ற ஜைன அறிஞர் என்பதை உலகறியும். ஆங்கில அரசாங்கம் ஆட்சிபுரிந்த காலத்தில் பம்பாய் கவர்னர் ஒருவர், இந்நாட்டில் பிராமணர்களுக்குச் சமமான அறிவும். திறமையும் பெற்றவர்கள் ஜைனர்களே! எனப்புகழ்ந்துள்ளார்கள். எனவே, மகாராஷ்டிரத்து ஜைனப் பெருமக்கள் அன்றும் இன்றும் சிறந்து வாழ்ந்து வருவதைக்கண்டு மகிழ்கின்றோம்.

ஜைன மாணவர் விடுதி:

கோலாப்பூரில் ஜைன மாணவர்களுக்கென பம்பாய், சேத்மானக் சந்த் ஹிராசந்த் ஜெயின் அவர்கள் ஒரு சிறந்த மாணவர் விடுதியை ஏற்படுத்தியுள்ளார். விடுதி இரண்டு மாடிகளாக அழகுடனும், கம்பீரமாகவும், விசாலமாகவும் கட்டப்பெற்றுள்ளது. அவ்விடுதியில் அனந்த தீர்த்தங்கரர் ஆலயமும் அமைந்துள்ளனர். ஸ்ரீமதி மானக்சந்த் ஹிரா சந்த்ஜி அவர்கள் பெயரால் ஒரு கலியாண மண்டபமும் கட்டப்பெற்றுள்ளது. கல்லூரிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளிலும் வாசிக்கும் திகம்பர ஜைன மாணவர்கள் இவ்விடுதியின் ஆதரவால் கல்விபயின்று வருகின்றார்கள். சேத்மானக் சந்த் ஹிராசந்த் ஜெயின் அவர்கள் ஒரு பொய கொடைவள்ளல். அவர் கோலாப்பூர் விஜயம் செய்திருந்தபோது இவ்வூர் ஜைனப்பெருமக்களின் வேண்டுகோளின் படி இத்தகைய சிறந்த மாணவர் விடுதியையும், கோயிலையும் கலியாண மண்டபத்தையும் அமைத்து உதவினார்கள். அவ்வள்ளலின் பேருதவியால் இன்று கோலாப்பூர் ஜைன மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சிக்குரிய நற்பயனைப் பெற்று வருகின்றார்கள்!

பேராசிரியர் A.N. உபாத்யாய அவர்கள் M.A., D.Litt.

இப்பொயார் கோலாப்பூர் ராஜாராம் கல்லூரியில் அர்த்தமாகதி மொழியின் ஆராய்ச்சிதுறைத்தலைவராகப் பணியாற்றுகின்றார்கள். வடமொழி, கன்னடம், ஆங்கிலமொழிகளில் புலமைப் பெற்றவர். இந்தியாவிலுள்ள பிராகிருத பேராசிரியர்களில் தலைசிறந்தவர். கோலாப்பூரில் நமது சமயச் சான்றோர்களில் ஒருவராகவும் அறிஞர்களில் சிறந்தவராகவும் விளங்குகின்றார். இவரும் நாகப்பூர் ஸ்ரீ ஹிராலால் சாஸ்திரி M.A. அவர்களும் 1955-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்திய சாத்திர மகாநாட்டிற்கு விஜயம் செய்திருந்தார்கள்.

அதுசமயம் அவர்களுடன் நெருங்கிப்பழகும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. திருக்குறளைப்பற்றி அரும்பெரும் விவாதங்கள் நடத்தி உண்மை அறிந்தனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அறிஞரைக்காண அவர் இல்லம் சென்றேன். அப்பேரறிஞர் என்னைக் கண்டதும் அன்புடன் வரவேற்றார். எதிர்பாராத வரவைக்கண்டு மகிழ்ந்தார். கோலாப்பூர் ஸ்ரீ மடாதிபதி சுவாமிகளை அழைத்துவரும் வாய்ப்பால் தங்களைக் காணும் பாக்கியம் கிடைத்ததெனக் கூறினேன். "எங்கள் மதிப்புக்குரிய சுவாமிகள் வந்துவிட்டார்களா" வெண ஆவலுடன் கேட்டார். "ஆம்! வந்து விட்டார்கள். ஆனால் சுவாமிகள் கோலாப்பூர் வரவில்லை. ராயபாக்கிலோயே இருக்கின்றார் என்றேன். நமது மடாதிபதி சுவாமிகள் நலனையும். நமது பேராசிரியர் ராவ்பகதூர் A. சக்கரவர்த்தி நயினார் சமய சார்பான பலவிஷயங்களைப்பற்றி உரையாடினார். சுமார் மாலை 4-மணிக்கு யானும் பேராசிரியரும் சிற்றுண்டி அருந்திய பின் பிரியவியலாது விடைபெற்றுத்திரும்பினேன். எங்களுக்கு நேரமின்மையால் இன்னும் பல அறிஞர்களைக் கண்டு பேச வாய்ப்பில்லாது போயிற்று.

அம்பாபாய் கோயில்:

கோலாப்பூர் சமஸ்தானம் இன்று ஐக்ய பாரதத்தில் சேர்ந்துவிட்டது. சமஸ்தானத்தின் அரண்மனை ஒரு ஏரியின் கரையோரத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. பழைய அரண்மனை ஒன்றும் இருக்கிறது. கோலாப்பூர் பொய நகரம் முனிசிபாலிடியை யுடையது இந்து சமயத்தைச் சார்ந்த கோயில்கள் பல இருக்கின்றன. அவைகளில் அம்பாபாய் கோயில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். மகாலக்ஷமி கோயில் என்றும் அழைக்கின்றார்கள். இக்கோயில் மிகப் புராதன கோயிலாகும் பலவித சிற்பங்களையுடையது. கருங்கற்களாலமைந்த இக்கோயில் ஒரு காலத்தில் நமது பத்மாவதி அம்மன் கோயிலாக இருந்தது. அதற்குரிய அறிகுறிகளும் அக்கோயிலில் காணப்படுகின்றன. இக்கோயிலைச் சேர்ந்தாற்போன்றுள்ள சேஷசாஹி கோயிலின் முன் மண்டபத்தின் மேல் பகுதியில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். இரண்டொரு சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, நமது சமயத்தவர் தொழுதுவந்த பத்மாவதி அம்மன் கோயில் அம்பாபாய் கோயிலாகவும், சேஷசாஹி அதாவது மகாவிஷ்ணுவின் கோயிலாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்து சமய பக்தர்கள் ஏராளமாக வந்து வழிபடுகின்றார்கள். காஞ்சீபுரத்துத் தரும தேவதை கோயில் காமாக்ஷ அம்மன் கோயிலாக மாறினது போலவே இங்கும் ஏற்பட்டுள்ளது.

கோலாப்பூர் ஜைனமடத்தின் வருவாய்கள்:

கோலாப்பூர் நகால்மட்டும் சுமார் 400 ஜைனக் குடும்பங்களும் சமஸ்தான முழுமையும் சுமார் நூறு ஜைனக் கிராமங்களும் இருப்பதாக முன்னரே அறிந்துள்ளோம். இக்குடும்பங்கள்யாவும் மடத்திற்குரிய காணிக்கையாக ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ஒன்றேகால்ரூபாய் வர்த்தனையும், அந்தந்தகுடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள் ஒவ்வொன்றிற்கும் பதினோறு ரூபாய் நன்கொடையும் அளித்துவருகிறார்கள். இதுதவிர ஆங்காங்கு மடத்திற்கென சில நிலங்கள் இருக்கின்றன. நமது மடத்திற்குச் சொந்தமான 23 வீடுகள் இருக்கின்றன. இவ்வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இவ்வாறு நிலங்கள், வீட்டு வாடகைகள், வர்த்தனைகள், நன்கொடைகள் ஆகியவைகளின் வாயிலாக மடத்திற்கு வருமானங்கள் வருகின்றன.

பெல்காம் மடம்:

கோலாப்பூர் மடத்தைச் சார்ந்த கிளை மடங்கள் இரண்டு. ஒன்று பெங்காமிலும் மற்றொன்று ராயபாக்கிலும் இருக்கின்றன. பெல்காம் நகரம் பெல்காம் ஜில்லாவின் தலைநகராகும். பெல்காம் ஒரு முனிசிபல் நகராகும். பெல்காம் நகால் ஒசூர் என்ற பகுதியில்தான் நமது மடம் இருக்கிறது. நமது மடம் ஒரு பொய மாடியுடன் விசாலமாகவும், அழகாகவும் கட்டப்பெற்றுள்ளது. பின்பக்கம் தோட்டமும், கிணறும் இருக்கின்றன. இப்பாகங்களில் மண்ணினால் வீடுகளைக்கட்டுகின்றார்கள். வாசற்படிகளும், நூலகங்களும், பொய அளவில் மரங்களைச் செதுக்கி அமைக்கின்றார்கள். மாடிகளையும் அவ்வாறே மரப்பலகைகளால் மூடி மண்ணைப் பூசிவிடுகிறார்கள். குறிப்பாகக் கூறினால் மண் மாடிகள் என்றே அழைக்க வேண்டும். இப்பொழுது தான் அப்பாகங்களில் சுண்ணாம்பும், சிமெண்டும் தலைகாட்டிக்கொண்டிருக்கின்றன. எனவே, நமது மடமும் பண்டைய முறையில் அமைக்கப்பெற்றதாகும். இவ்வூரில் சுமார் 500 ஜைனக் குடும்பங்கள் இருக்கின்றன. இங்கேயும் ஜெயின் மாணவர் விடுதி ஒன்று இருக்கிறது. தக்ஷண மகாராஷ்டிரா ஜெயின் சங்கம் ஒன்றும் சிறந்த பணியாற்றி வருகிறது.

கோயில்கள்:

இவ்வூரில் 8 ஜைனக்கோயில்கள் இருக்கின்றன. இவைகளில் ஓசூர் ஆதிநாத சுவாமி கோயில், பெல்காம் நேமிநாதர் கோயில், சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில், பார்ஸ்நாதர் கோயில், சாப்பூர் கோட்டைக்குள் பண்டைக்கால வரலாற்றுக் கோயில்கள் இரண்டு இருக்கின்றன. அவைகள் இரண்டும் கருங்கற்களாலமைந்தவை. உட்புற கண்களைக் கவரும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களெல்லாம் பண்டைக்கால முறையில் அமைக்கப்பெற்றுள்ளன. கோபுரமும் கருங்கற்களாலானவை. பல வித சிற்பங்களும், இருபத்து நான்கு தீர்த்தங்கரர் சிலைகளும் வாசையாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவைகள் பண்டைய ஜைன மன்னர்களால் கட்டப்பெற்றவை. பாழடைந்த கோட்டைக்குள் இக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளை முறையே கமல பஸ்தி என்றும், சதுர்முகபஸ்தி என்றும் அழைக்கப்படுகின்றன. அவைகளில் சதுர்முக பஸ்தி கோயிலில் தினந்தோறும் பூஜை நடைபெறுகிறது. கமல பஸ்தி மட்டும் பூட்டப்பட்டுள்ளது. இவைகள் இரண்டும் அரசாங்க புதை பொருள் ஆராய்ச்சி நிலையத்தாரின் பாதுகாப்புச் சின்னங்களாகக் காத்து வருகிறார்கள். அவ்வாறே போர்டுகளும் வைத்துள்ளார்கள். இக்கோட்டை ஒரு காலத்தில் ஜைன அரசர்களின் ஆளுகையிலிருந்து இந்து மன்னர்களிடம் மாறிபின்னர் மொகலாயரால் கைப்பற்றப்பட்டது. அதற்குரிய வரலாற்றுச்சின்னங்களும் அங்கே இருக்கின்றன. திரவிய சங்கிரகம் இயற்றியருளிய நேமிசந்திர சித்தாந்த சக்கரவர்த்தி முனிவர் வாழ்ந்த சிறந்த திருப்பதி. அப்பாழடைந்த கோட்டைச் சுவர்களின் இடையே வேறு இரு ஜைனக் கோயில்கள் பள்ளிவாசல்களாக மாறியிருப்பதாகவும், அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். அக்கோட்டையின் முழு வரலாற்றையும் ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும். இவ்வூர் மடத்திற்கும் பல நிலங்களும், வாழை மர தென்னைமர தோட்டங்களும் இருக்கின்றன. கோலாப்பூர் மடத்தின் முறைப்படியே இங்கேயும் ஜைனப் பெருமக்கள் வர்த்தனைகளும், திருமண நன்கொடைகளும் அளித்து வருகிறார்கள். இங்குள்ள ஜைனப் பெருமக்களும், பல துறைகளிலும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்து வாழ்கின்றார்கள்.

 

1   2   3


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com