முகப்பு வாயில்

 


நிலையாமை :

இல்லறம் துறவறம் ஆகிய இரு பேரங்களிலும் மனம் செல்ல வேண்டின் நிலையாமைத் தத்துவம் இன்றியமையாதது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, ஆகிய உண்மையை உணர்ந்தாலன்றி நல்லனவற்றை செய்ய மனம் ஒருப்படாது. இந்நிலையாமைத் தத்துவம் மனத்தகத்தே வேரூன்றியதும் பிறருக்கு நன்மை செய்வதிலும், பொது நலத்தில் அக்கறை கொள்வதிலும் உள்ளம் விழையும். தீமைகளைச் செய்ய உள்ளம் நடுங்கும். எனவே நிலையாமைத் தத்துவம் மக்களுக்கு இன்றியமையாததாகும். இப்பேருண்மையையும் தொல்காப்பியத்தில்,

"காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே"

என விளக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணையென்னும் அகத்திணைக்குப் புறனாம். அது பாங்காகுதல் அறிய சிறப்பினாற் பல நெறியானும் நில்லாது உலகத்தைப் பொருந்திய நெறியை உடைத்து என்றவாறு ஒருவர்க்கு ஒரு துணையாகாமை நிலையாமை மூவகைப்படும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூவகைப்படும். (இளம் பூரணர்) இந்நிலையாமைக் கொள்கையைத் திருக்குறளில் பார்க்கக் காணலாம்.

மும் மூடங்கள் :

இப்பெற்றிய நல்லறங்களை மேற்கொள்ளத் தடையாய் இருப்பது மூடநம்பிக்கைகள். அவைகள் தேவமூடம், உலகமூடம், பாசண்டிமூடம் என மூன்று வகைப்படும். தேவமூடம் என்பது தன்னைத் தெய்வம், வாழ்விக்கும் என மயங்கி அதனை வழிபடுதலும், கோபமும், கொடூரமும் வாய்ந்த தெய்வங்கள் உண்டென அச்சங்கொண்டு வணங்குதலும் ஆகியவை. உலகமூடம் என்பது, புண்ணியம் பெறலாமென தீர்த்தமாடுதலும் ஆறுகள் மூழ்குதலும் வீடுபேறு கிடைக்குமென மலைமீதேறி வீழ்ந்து இறத்தலும், கற்பனையாக உலகில் கூறும் பல போலிக் கொள்கைகளை ஆராயாமல் நம்பிப் பின்பற்றுவதும் ஆகியவைகளாகும். பாசண்டி மூடம் என்பது துறவிகளுக்குரிய அறநெறிகளைப் பின்பற்றாமலும், தியாகமும், அறிவு மின்றித் தன்னலங் காரணமாகத் துறவி வேடம் புனைந்து ஏமாற்றும் போலித்துறவிகளை வணங்கி வாழ்த்துதலுமாம்.

இம்மூன்று மூடங்களினின்றும் நீங்கியவனே அறிவுடையவன். அவனே மயக்கமற்ற மாசறு காட்சியுடையவன். அத்தகையாரே நல்லறங்களை உறுதியுடன் கடைபிடிப்பவர் என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். இம்மூடநம்பிக்கைகளைச் சிலப்பதிகாரத்தில் கண்டித்திருப்பதைக் காணலாம்.

ஊழ்வினை :

நம்முடைய வாழ்விற்கும், தாழ்விற்கும், இறப்பிற்கும், பிறப்பிற்கும், நட்புக்கு பகைமைக்கும் ஊழ்வினையே காரணம் என்பதை ஜைனப்பொயோர்கள் கண்டறிந்தனர். எனவே நல்லவை செய்வோர் நல்வினையையும், அல்லவை செய்வோர் தீவினையையும் அடைவர் என்பதை வலியுறுத்துகின்றனர். இவ்வுண்மையையும் தொல்காப்பியர்,

'ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி யுயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே'
- தொ.பொ. களவியல் 2

"என்பது ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறம் செய்துழி, அவ்விருவரையும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலும் இவ்வகை ஊழினும் என்றவாறு" என்னும் இளம் பூரணர் உரையால் அறியலாம். இவ்வூழ்வினைக் கொள்கையின்படி ஊழ்வினையின் இயல்பும், ஆற்றலும் வெளிப்படுகிறது. ஊழ்வினைத் தன்னைச் செய்வானைத் தானே வந்தடைகிறது என்ற உண்மையை விளக்கியுள்ளார்கள். இதனால் ஊழ்வினையைச் செலுத்த வேறொரு சக்தியில்லை என்பது தெளிவாம். இவ்வூழ்வினையை வெல்லும் ஆற்றல் மனிதருக்கு உண்டு.

"ஊழையும் உப்பக்கங் காண்பர்" என்பது குறள் மொழி. வினைகளை வென்றோரே வீடுபேறடைவர் என்பது ஜைன அறவோர்கள் கண்ட உண்டை. இவ்வூழ்வினைகள் (கர்மங்கள்) எண் வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவைகளின் உட்பிரிவுகள் நூற்று நாற்பத்தெட்டாகும். தலையாய எட்டு கர்மங்களின் விவரங்களை இங்கு சாலும், ஞானாவரணீயம் (அறிவைமறைப்பது), தர்சணாவரணீயம் (காட்சியை மறைப்பது) மோகனீயம் (மயக்கத்தை அளிப்பது) வேதனீயம் (இன்பதுன்பங்களுக்குக் காரணம்) நாம கர்மம் (தடைகளின் விளைவுக்குக் காரணம்) கோத்திரகர்மம் (குடிப்பிறப்பிற்குக் காரணம்) ஆயுட்கர்மம் (ஆயுளுக்குக் காரணமாகும்) இவ்வெண்வகைக் கர்மங்களும் உயிரினங்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

மும்மணிகள் :

உலகியல் துறையில் மக்கள் வாழ்க்கையைப் பண்படுத்தியது போன்றே ஆத்மீகத் துறைக்கும் வழிகோலினர் ஜைன அறவோர்கள். ஆத்மீக முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவைகளாகிய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மூன்றுமணிகளைவழங்கினார்கள். நற்காட்சி என்பது உண்மைப் பொருளை ஆராய்ந்தறிதல் என்பதாகும்.

"மெய்ப்பொருள் தேறுதல் நற்காட்சி என்றுரைப்பர்
எப்பொருளும் கண்டுணர்ந்தார்"

என அருங்கலச்செப்பு அறைகின்றது. கண்கள் எவ்வாறு புறப்பொருள்களை ஆராய்ந்து அறிகின்றதோ அவ்வாறே நூற்பொருள்களின் உண்மைகளை ஆராய்ந்து ஏற்கவேண்டும் என்பதாகும். 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்னும் குறளே நற்காட்சிக்கு நற்சான்றாகும். தமிழ் நூல்களில் காணும் மாசறு காட்சி, பொய்தீர் காட்சி போன்றவைகளெல்லாம் நற்காட்சியையே குறிக்கும். இவ்வாறு ஆராய்ந்தறிந்த நூற்பொருளில் அறிவைச் செலுத்துதல் நன்ஞானம் என்றும் அப்பொருளின் வழி ஒழுகுதல் நல்லொழுக்கம் என்றும் அறிவுறுத்தினர். இச்சீரிய கொள்கையை,'

"மெய்ப்பொருள் தொதல் மற்றப்பொருண்மிசை விரிந்தம் ஞானம்
அப்பொருள்வழாத நூலின் அருந்தகை ஒழுக்கம் தாங்கி
இப்பொருள் இவைகள் கண்டாய் இறைவனால் விரிக்கப்பட்ட
கைப்பொருளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற்றா ரோய்"

என்றார் சூளாமணி ஆசிரியர்.

இம்மூன்று வழிகளே மனிதகதி, தேவகதி, விலங்குகதி, நரகதி ஆகிய நான்கு கதிகளைக் கடந்து வீடு பேறடைய இன்றியமையாதனவாகும். நாம் ஸ்வஸ்திக்கைப் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் அதன் விளக்கம் பலருக்குத் தொயாது. நாம் மேலே கூறிய மனிதகதி, தேவகதி, விலங்குகதி, நரககதிகளைக் காட்டுவது தான் ஸ்வஸ்திக் என்பது.

அக்கதிகளினின்றும் ஒவ்வொரு ஆன்மாவும் விடுதலைப்பெற்று வீடுபேறடைய நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளைப் பெற்றாக வேண்டும் என்பதாம். எனவே நாம் முன்னர்கூறிய கொல்லாமை போன்ற அறநெறிகளின் வழி ஒழுகுதலே மனிதப்பிறவியின் மாண் பயனாகும். "ஒழுக்கம் விழுப்பந்தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்னும் திருக்குறளாலும் தெளியலாம்.

நந்தி :

பகவான் விருஷப தேவர் தாம் உலகுக்கு உரை செய்த அறநெறிகளுக்கு எருதைச் சின்னமாக அமைத்தார். இதனால் அறம் எனில் எருது. எருது எனில் அறம் என அக்காலமுதல் வழங்கலாயிற்று. இவ்வரலாற்றுண்மையை ஜைனநூல்களிலெல்லாம் விரிவாகக் காணலாம். குறிப்பாகத் தமிழ் மொழியின் தலைசிறந்த காவியமாக விளங்கும், சீவகசிந்தாமணியில்,

"மணியினுக் கொளிஅக மலர்க்கு மல்கிய
அணியமை யங்குளிர் வாசம் அல்லாதூஉம்
திணியிமில் ஏற்றினுக் கொதுக்கஞ் செல்வ நின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே"

எனப் பகவான் விருஷப தேவரைப் போற்றுகையில், அப்பெருமகன் இணையடிகள், ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் உயிர்களுக்கு ஒளியையும், அவ்வுயிர்களின் உள்ளங்களுக்கு அழகமைந்த கருணை என்னும் மனத்தையும், அதுவுமன்றி அங்கே எக்காலும் அறம் (திணியிமிலேறு) தங்கி உறைவதற்குரிய நிலையையும் அளித்தன எனும் அரிய கருத்தினின்றும் அறம் எனில் எருது என ஐயமின்றி அறிகின்றோம்.

உயிர்கட்கு இடர் தீர்த்து உயான்பமாக்கும் அறத்தினையும், அந்நல்லறத்தின் சின்னமாகக் காளையையும் அமைத்து உலகை உய்வித்த உத்தமர் பகவான் விருஷபதேவர் இறுதியாகக் கைலாயகிரியில் கடுந்தவம்புரிந்து வீடுபேறு பெற்றர். இப்புண்ணியநாளில் கலந்துகொண்ட இந்திரன் முதல் பல்வேறு தேவர்களும் பரதசக்கரவர்த்தி முதலிய பல்வேறு சக்கரவர்த்திகளும், அறிஞர் பெருமக்களும் அப்பெருமகன் திருவடிகளைப்போற்றி அத்திருநாளைச் சிவராத்திரி எனக் கொண்டாடி அத்தூயோனால் அருளப்பெற்ற அறத்தின் சின்னமாகிய காளையை அவருக்கே சின்னமாக அமைத்து அவ்வறவோனையும் அறத்தையும் ஒருங்கே வழிபட்டு அம்முதல்வனை உலகக்கரு எனப் புகழ்ந்து போற்றி மகிழ்ந்தனர்.

இப்பெற்றிய வரலாற்றுச் சின்னமாகிய காளையையே நந்தி எனவும் அழைத்துப் போற்றினர். இக்காரணம் பற்றியே இவ்வறவோனை ஆதிகாலத்து அந்தணர், ஆதிபகவன், தலைவர் தம் தலைவர்க்கும் தலைவன், அறநெறித் தலைவர், நந்தியெம்பெருமான், நந்திதேவர், அருள் நந்தி தேவர் எனப் பரத கண்டத்துப் பல்வேறு நூல்களும் போற்றுகின்றன.

இம்முதல்வனின் வழிவந்த ஜைன முனிவர்களின் பெயர்களில் நந்தி கலந்து வருவதைக் கணலாம். எடுத்துக்காட்டாகக் கனகநந்தி, விஜய நந்தி, வஜ்ரநந்தி, பவணந்தி, தருமநந்தி அச்சணந்தி, எனப்பலமுனிவர்கள் பாரதநாட்டிலும் தமிழகத்திலும் வாழ்ந்துவந்தனர் என்பதை ஆங்காங்கு காணப்படும் கல்வெட்டுச் செய்திகளிலும் பண்டைய இலக்கியங்களிலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நந்தி எனின் அறவோர் எனவும் போற்றப்பெற்றுள்ளன. நந்தியின் பெயராலேயே நந்திசங்கங்கள் பல இருந்தன. மேலும் நந்தியம்பாக்கம், நந்திமங்களம் நந்திபுரம், நந்தீஸ்வரம், நந்திமலை, நந்திதுர்க்கம் என்னும் பெயரால் பல கிராமங்களையும் மலைகளையும் காணலாம்.

இவைகள் மட்டுமல்ல, பண்டைய காலத்தில் அமைந்த பகவான் விருஷபதேவர் கோயில்களின் மதில்களிலும் கோயில்களின் நுழைவாயில்களிலும் நந்தியை அமைத்து, முதன் முதல் அறம் உரைத்தப் பகவான் விருஷபதேவர் திருக்கோயில் என்பதையும் அவரால் அருளப்பெற்ற அறமே நமது வாழ்க்கைக்குத் துணையாகும் என்பதையும் மக்கள் அறிந்து பகவானை வழிபடுமுன் அறத்தையே வணங்குமாறு வழிசெய்தனர்.

ஜைன மடங்கள் பல நந்திதேவர் பெயரால் விளங்கி வழி வழி வந்தன.

இவ்வாறு மிகப் பழங்கால முதலே அறத்தின் சின்னமாகப் போற்றிய நந்தியைப் பிற்காலத்தில் தோன்றிய சைவாகமங்கள் சிவபெருமானின் வாகனமெனக் கற்பித்துச் சுமைதாங்கும் காளையாகச் செய்து விட்டன. இந்நிலை வளர்ந்து வளர்ந்து சமயப்பூசல்கள் நேர்ந்த காலத்தில் பகவான் விருஷபதேவர் கோயில்களைக் கைப்பற்றி சிவபெருமான் கோயில்களாக மாற்றிவிட்டனர். கோயில்களைப்போன்றே நந்திதேவர் வழிவந்த ஜைனமடங்களெல்லாம் சைவமடங்களாக மாற்றப்பட்டன. எனினும் அச்சைவ மடாதிபதிகள் தங்களைக் கைலாயகிரிநந்தி பரம்பரையைச் சார்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்வார்களேயன்றி சிவபெருமான் பரம்பரைஎனக் கூறிக்கொள்வதில்லை. இவைகள் தமிழகத்தில் தலையாய வரலாறுகள்.

பல்கலைகள் :

ஜைன அறவோர்கள் நமது பரதகண்டமெங்கும் மேலே கூறிய அறநெறிகளைப் பரப்பி மக்கள் வாழ்க்கைப் பண்பையும், வாழ்க்கை நலத்தையும் ஆத்மீக முன்னேற்றத்தையும் வளர்த்தார்கள். அந்நல்லறங்கள் யாவும் உலகுக்கே உரியவை. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் தமது கலிங்கத்துப்பரணியில் ஜைன அறவோர்களைப் போற்றுகையில்,

"நிலைசேர் பொருளும் நிலையில் பொருளும்
நிமலன் நெறியால் உலகுக்குரை செய்
தலையாகிய மாதவர்தாள் நிதமும்
தலை கொண்டிதமே புரிவார் தமதூர்"

என்னும் கவியில் அச்சான்றோர்களின் நூல்கள் உலகுக்குரை செய்பவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, பெருங்கதை, சூளாமணி போன்ற பல காவியங்களையும், தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி போன்ற பல இலக்கண நூல்களையும், மேருமந்திரபுராணம், நீலகேசி போன்ற பலதர்க்க நூல்களையும், சூடாமணி, நிகண்டு, திவாகரம்போன்ற பலநிகண்டுகளையும், திருக்குறள், நாலடியார், ஏலாதி, பழமொழி நானூறு போன்ற பலநீதிநூல்களையும், நாடகக்கலை, இசைக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கணிதக்கலை, சோதிடக்கலை, கலிங்கத்துப்பரணி, போன்ற பல்வகைக் கலைநூல்களையும் இயற்றித் தமிழ் மொழிச் சிறப்பிற்கும், பெருமைக்கும், வளர்ச்சிக்கும் அரிய சேவை செய்துள்ளார்கள்.

இவ்வரலாற்றுண்மையை மேல்நாட்டுப் பேரறிஞர் கால்டுவெல் அவர்கள் "ஜைனசமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது அரசியலிலன்று; கல்வித்துறையிலும் அறிவுத்துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகாகத்தின் பொற்காலம் எனலாம்" எனப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இது காறும் யாம் ஆராய்ந்த இலக்கியங்களாலும் வரலாற்றுச் செய்திகளாலும் ஜைன சமயத்தின் தன்மையை (அறிநெறிகள்) நன்கு அறிந்தோம். இனித்தொன்மையை ஆராய்வோம்.

1   2   3   4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com