முகப்பு வாயில்

 


ஆனந்தன் : ஆமாம் சார்! சமயச் சார்பற்றப் பகவான் விருஷபதேவர் அறநெறிக்கு ஜைன சமயம் அல்லது சமண சமயம் என்ற பெயர் எவ்வாறுண்டாயிற்று?

ஆசிரியர் : அவசியமான கேள்வி! பகவானுக்குப் பின்னர் சமயம் என்ற பெயரால் பல பிரிவுகள் ஏற்பட்ட வரலாற்றை முன்னரே கூறியுள்ளேன். அப்பிரிவினர்களாலேயே இவ்வறநெறிக்கும் சமயம் என்ற பெயர் சூட்டப்பெற்றது. ஆதீஸ்வரர் தவமியற்றி வினைகளை வென்றார். வினைகளை வென்றமையால் அவருக்கு வடமொழியில் ஜினன் என்ற பெயர் வழங்கலாயிற்று. துறவியாகி தவம் செய்தமையால் அத்துறவியை வடமொழியில் சிரமணர் சிரமணர் என்றழைத்தனர். ஜினன் என்றால் வென்றவன்! சிரமணர் என்றால் துறவி. இவ்விரு பெயர்களைக்கொண்டே அவரால் தோற்றுவிக்கப்பெற்ற அறநெறிகளுக்கு ஜைன சமயம், சமண சமயம் என்று பெயாட்டனர். ஆனால் ஜைன சமய நூல்களில் தங்கள் அறங்களைச் சமயம் என்றோ மதம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. சமண சமயம். ஜைன சமயம் என்பதெல்லாம் பிறரால் அழைக்கப்பெற்று வழக்காற்றில் வந்துள்ளதேயன்றி அவர்கள் நூலில் எங்குங் காணமுடியாது. தொல்காப்பியர் பகவான் விருஷபதேவர் அருளிய முதல் நூலைக் குறுப்பிடும்போது,

"வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூல்"

என்றே சிறப்பித்துள்ளார்.

அறிவு-நம்பி : அறிவு விருந்தளித்த ஆசிரியரே! தாங்கள் இதுவரை அறிவுறுத்திய செய்திகளும், கவிகளும், தோத்திரங்களும் தமிழ் மாணவர்களாகிய எங்களுக்கு புதியனவாகத் தோன்றுகின்றனவே!

ஆசிரியர் : ஆம்! தமிழ் நூல்களில் பகவான் விருஷபதேவர் வழிவந்துள்ள நூல்கள், தொல்காப்பியம், திருக்குறள், சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, மேருமந்தரபுராணம், நீலகேசி, யசோதர காவியம், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறு பஞ்சமூலம் போன்ற பதினெண் கீழ்க்கணக்குகளும், அறநெறிச்சாரம் அருங்கலச்செப்பு, திருக்கலம்பகம், திருநூற்றந்தாதி, தோத்திரத்திரட்டு, திருவெம்பாவை, திருப்பாமாலை, போன்ற பல நூல்களுமாகும். நன்னூல், நேமிநாதம், காரிகைகள் முதலிய இலக்கண நூல்கள் வேறு! இவைகளில் பெரும்பாலும் உங்கள் பாட புத்தகங்களில் பாடங்களாக வைப்பதில்லை. கடவுள் வாழ்த்து எனப் பல பாட புத்தகங்களில் காணப்படுகின்றன. அவைகளில் ஜைனத்தோத்திரங்களில் ஒன்று கூட காண முடியாது! எனவே மாணவர்களாகிய உங்களுக்கு அவை புதியவைகளாகவே இருக்கின்றன! இந்நிலை மாறி ஜைன சமயக்கொள்கைகளும் கடவுள் வாழ்த்துக்களும் பாட புத்தகங்களில் வரும்படி செய்தால் மாணவர்களின் அறிவும் பண்பும் வளரும்!

அறிவுடை-நம்பி : தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் அடிப்படையாகவுள்ளவை சமணர் நூல்கள்தான் போலும்! ஐயா, இது போன்று ஆதீஸ்வரர் கோயில் தமிழகத்தில் எங்கெங்கே இருக்கின்றன?

ஆசிரியர் : பண்டைய காலத்தில் தமிழகமெங்கும் நிறைந்திருந்தன. நமது மைலாப்பூர் ஜைனர்களின் உறைவிடமாயிருந்தது. 8-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் பலகோயில்கள் மாற்றப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின! எனக்குத் தொந்தவரை எஞ்சியுள்ள பண்டைய கோயில்களாக உள்ளவை காஞ்சீபுரத்திற்கருகில், திருப்பருத்திக்குன்றம், அருங்குளம், கும்பகோணம், ஆர்ப்பாகை, மாகரல், திருப்பறம்பூர், கரந்தை, திருமலை, சித்தாமூர், திருநறுங்கொண்டை, தீபங்குடி, தஞ்சை முதலிய இடங்களிலும். மதுரை (ஜில்லாவில்) மாவட்டத்தில் சமணர்மலை, விருஷபமலை, ஆனைமலை, நாகமலைகளிலும், கோயமுத்தூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை, விஜயமங்கலம், திங்களூ ர், சீனாபுரம் முதலிய இடங்களிலும், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சித்தண்ணவாசல், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கழுகுமலை மற்றும் பல பாகங்களிலும் ஆங்காங்கு சிலைகள் மட்டும் காணப்படுகின்றன. ஆதீஸ்வரரை 'எம்மான்' என்று இங்கே அன்புடன் அழைப்பதுபோலவே, எம்மான்பூண்டி, திருமூர்த்திமலை, எம்மானேஸ்வரம், சாமிமலை, அப்பன் கோயில், ஐயன்கோயில் அப்பாண்டை நாதர் என்றெல்லாம் அழைத்து வழிபாடியற்றிய இடங்களும் இருக்கின்றன. (கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு) அப்பா மணி மூன்றாகிறது. நாம் ஏரியைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டுமல்லவா?

(சென்னை செளக்கார்பேட்டையில் இரு கோயில்களும் சுப்பிரமணிய முதலி வீதி 6-ம் நெம்பால் ஒரு கோயிலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன)

ஆனந்தன் : ஆம்! புறப்படலாம். இக்கோயிலை இப்போதுதான் புதுப்பித்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

ஆசிரியர் : ஆம்! வடநாட்டு ஜைனப் பெருமக்கள் சென்னையில் வசிக்கின்றார்கள். அவர்கள் இக்கோயிலை வழிபடவருவதுண்டு. அது சமயம் இக்கோயில் பாதுகாப்பாரின்றி பாழடையும் நிலையில் இருந்தது. உடனே அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டு இவ்வளவு அழகாகவும் வசதியாகவும் அமைத்துள்ளார்கள்! வடநாட்டு ஜைனர்கள் சென்னையில் பற்பல அறங்களைச் செய்து வருவது உங்களுக்குத் தொயும். ஜைன மிஷன் சங்கமும், வாசகசாலை, சென்னை தென்னிந்திய ஜீவரட்சகப் பிரசாரசபை, ஜைன உயர்தரப்பாடசாலை, ஜைனக் கல்லூரி, இலவச ஜைன வைத்தியசாலைகள் ஆகியவற்றை ஆங்காங்கு நிறுவி வருகிறார்கள். இன்னும் பலவித தருமங்கள் அவர்களால் நடைபெறுகின்றன.

மாணவர்கள் : ஆசிரியரே, உலகுக்கே முதற்றலைவராய் விளங்கியவரையும், அம்மாபுருடன் நமது நாட்டில் தோன்றியவரென்பதையும், அவ்வறவோன் வகுத்த அறநெறிகளே உலகெங்கும் பரவி உள்ளதென்பதையும் அவர் மூத்த புதல்வன் பரதன் பெயராலேயே இந்நாட்டிற்குப் பரதகண்டமென்று வழங்குகிறதெனும் வரலாற்றையும் இன்று தங்களால் அறிந்துகொள்ளும் பேறு எங்களுக்குக் கிடைத்தது. இப்போது மற்ற மாணவ மாணவிகளுக்கும், அறிஞர்களுக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது எங்கள் அவா. ஆசிரியரே! பகவான் விருஷபதேவர் பிறந்த நாள் குறிப்பு ஏதாவது கிடைக்குமா?

ஆசிரியர் : ஓ தொயும்! அவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கிருஷ்ண பக்ஷம் நவமி. அவர் பாநிர்வாணமடைந்த நாள் மாசி மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி. இப்புனித நாளையே சிவராத்திரி எனக் கொண்டாடுவது.

மாணவர்கள் : எங்கள் குரு மூர்த்தியே! இவ்விரண்டு நாட்களிலும் பகவான் விருஷபதேவான் நினைவாக நாடெங்கும் விழா கொண்டாட ஏற்பாடு செய்வது நலம். அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.

ஆசிரியர் : மாணவர்களே! உங்கள் இருவருக்கும் தோன்றிய எண்ணம் நமது முதுபெருந் தமிழ் முனிவர் திரு.வி.க. அவர்களுக்கு என்றோ, என்றோ, என்றோ தோன்றி,

"ஆதிபகவன் சோதிநாதன்
விருஷபதேவன் புருஷநாயகன்
அவனே இறைவன் அவனே ஈசன்
அவனே மாயன் அவனே நான்முகன்
அவனே சித்தன் அவனே அருட்சினன்
அவனே தர்மம் அவனே அஹிம்சை
அவனே அருகன் அருகே அணைந்தால்
விடுதலை வழியைக் கடிதில் பெறலாம்
அவனை எண்ணுவம் அவனை வாழ்த்துவம்
அவன் பணி ஆற்றுவம் அவன் நெறி ஓம்புவம்"

என அருகன் அருகே அல்லது விடுதலைவழி என்ற அரும்பெரும் நூலில் தமது அவாவை வெளியிட்டுள்ளார்.

எனவே யாமும் பகவான் விருஷபதேவர் விழாக்கொண்டாடி அவர் ஆணையை நிறைவேற்றுவோமாயின் உலகிலேயே ஒரு புதுசமுதாயத்தைப் படைக்கலாம்! அஹிம்ஸா தருமம் எங்கும் பரவும்! சகோதர உணர்ச்சியும், தன்னலமின்மையும், மிகுபொருள் விரும்பாமையும் நாடெங்கும் வளரும்! சமரச சன்மார்க்கம் நிலைபெற்று விளங்கும்! உலகம் சமாதானமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கும்! மாணவத் தோழர்களே! நீங்கள் மனதுவைத்தால் இவ்வுலகை ஆட்டிப்படைக்கலாம்! மாணவர்களால் எத்தனையோ நாடுகள் முற்போக்கடைந்துள்ள வரலாற்றை நாம் படித்ததில்லையா? பகவான் விருஷபதேவர் நாளைக்கொண்டாட இன்று முதலே முனைந்து முயலுங்கள்! உங்கள் எண்ணம் வெற்றி பெறட்டும். பகவான் விருஷபதேவரை வாயார வாழ்த்திச் செல்லுவோம்!

ஆதி வேதம் பயந்தோய் நீ யலர் பெய்ம் மாரி யமைந்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ நிகால் காட்சிக்கிறையோய் நீ
நாதனென்னப் படுவோய் நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாத கமலந்தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே.
- சீவகசிந்தாமணி.

மயிலாபுரி நின்றவ ராயாசன வும்பான்
மலர் போதிலிருந்தவ ரலர் பூவினடந்தவ
ரயிலார் விழிமென்கொடி மிடைதீபை நயந்தவ
ரமராபதி யிந்திரன ணியாடலு கந்தவர்
கயிலாய மெனுந்திரு மலைமேலுறை கின்றவர்
கணநாயகர் தென்றமிழ் மலைநாயகர் செம்பொனி
னெயிலாரில குஞ்சின கிரியாள்பவர் சம்பைய
ரெனையாள நினைந்துகொல் வினையேனுளமர்ந்ததே.
- திருக்கலம்பகம்.

நல்லார் வணங்கப்படுவான் பிறப்பாதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பமாக்கும்
சொல்லான் தருமச்சுடரான் எனும் தொன்மையினால்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறையாக ஏற்றி.
- நீலகேசி.

திருவறம் வளர்க!
 

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com