முகப்பு வாயில்

 


அறி-நம்பி : ஆசிரியரே! வைஷ்ணவ சமயத்தின் வரலாற்று நூலாக விளங்கும் பாகவதமே பகவான் விருஷபதேவரை விஷ்ணுவின் 8-வது அவதாரமாகப் போற்றுகிறதென்றால் அவ்வழியில் வந்த நான் அப் பகவானை வழிபடும் உரிமையுடையவனல்லவா? நமது நண்பர் ஆனந்தம் கூறியதுபோல் பிற்கால நூல்களைக் கொண்டு, முற்கால நிகழ்ச்சிகளை, மறப்பதும், பழிப்பதும், அறியாமையாகும்! கி.மு. முதல் நூற்றாண்டில் நாடெங்கும் போற்றிய எம்மானை பிற்காலத்தில் மக்கள் மறந்தனரென்றால் ஏதோ சமய வெறியின் திருவிளையாடலாகத்தான் இருக்க வேண்டும்! மனித சமூகத்துக்கன்றி மன்னுயிரனைத்திற்கும் வாழ்வளிக்கும் அறம் அன்றோ ஆதிபகவன் திருவறம்! அத்தகைய சிறந்த அறநெறிகளைப் பழிக்கும், இன்றைய சமய வாதிகள் தங்கள் பண்டைய சமய நூல்களைப் புரட்டிப் பார்க்கட்டும்! அங்கே பகவான் விருஷபதேவர் தாசனமளிப்பதைக் கண்டு வெட்கப்படுவர். வைதீக சமயத்தின் முதல் நூல் எனப் போற்றப்படும் வேதங்களிலேயே பகவான் விருஷபதேவர் துதிக்கப்படுகின்றார் என்றால், யான் அப்பெருந்தகையை வழிபடுதல் அறமும், கடமையும், முறைமையும் அன்றோ! எனவே, எனது பேராசிரியரே! இன்று போல் என்றும் நமது இறைவனும் ஆதீஸ்வரரைப் பணிவேன்! அவர் அறங்களைக் கடைப்பிடிப்பேன்!

ஆசிரியர் : உணர்ச்சி மிக்க நம்பி! உனது உரை உயிர்பெற்று விளங்குகிறது! ஆனந்தனும், நீயும் எனக்கே, ஒரு புத்துணர்ச்சியைப் புகுத்தி விட்டீர்கள்! நானும், சைவ சமயத்தைச் சார்ந்தவன் என்பது உங்களுக்கு நன்றாகத் தொயும். யான் காலஞ்சென்ற தமிழ்ப் பொயார் திரு.வி.க. அவர்களின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்பதுண்டு. அவர் சைவமும், ஜைனமும் ஒன்றே என்று பல மேற்கோள்களுடன் பேசுவார். இராவ்பகதூர் A. சக்கரவர்த்தி நயினார் M.A.I.E.S. (RTD) அவர்கள் வெளியிட்ட நீலகேசி, மேருமந்தரபுராணம். சமயசாரம், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு முதலிய நூல்களையும், காஞ்சிபுரம் உயர்திரு. தி. அனந்தநாத நயினார் எழுதிய "திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைன சமய சித்தாந்த விளக்கமும்" என்ற நூலையும் ஜீவபந்து T.S.ஸ்ரீபால் எழுதிய இளங்கோவடிகள் சமயம் யாது? பகுத்தறிவும், சமதர்மமும், ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும் எனும் மூன்று நூல்களையும் வாசித்தேன். அவைகளின் வாயிலாக பல உண்மைகளை அறிந்தேன். பிறகு திருக்கலம்பகம் எனும் சமண நூலில்,

"ஒருமொழியி னுயிர்பரந்த மருள்மருவா வருண்முதல்வனை
மூவிலையொரு நெடுவேலின்-மேவாத வினையவுணர்
குன்றுபட நூழிலாட்டி-வென்றட்ட விறல்வெகுளியை
மூவெயிலின் முரண்முருக்கி-மூவர்சர ணடைய நின்றனை
சுருப்புநாண் வில்லிபட-நெருப்புமிழ் நெடுநோக்கினை
கோள்வலிய கொடுங்கூற்றைத்-தாள்வலியின் விழவு தைத்தனை
பாவில்கே வலக்கிழத்தி-பிரிவில்லா வொருபாகனை
யான்றமெய் யறம்வளர்க்கும்-மூன்றுகண் முனித்தலைவனை
யாலநெடு நிழலமர்ந்தனை-காலமூன்று முடனளந்தனை
தாழ்சடை முடிச்சென்னிக்-காசறுபொன் னெயிற்கடவுளை"

எனவரும் வாகளைப் படித்தேன், திகைத்தேன்! என் உள்ளத்தில் குடிகொண்டிருந்த சமயவெறி சொல்லாமல் மறைந்துவிட்டது! மேலே கூறியவாகளால் நாம் அறிந்துகொள்ளும் உண்மைகளைப் பாருங்கள். வினைகளை வென்று பகவான் விருஷபதேவர் தவமியற்றி வீடுபேறு பெற்ற இடம் கயிலாயம். சிவபெருமான் வீற்றிருக்கை கயிலாயம். பகவான் விருஷபதேவருக்குச் சின்னம் விருஷபம். சிவபெருமானுக்கு வாகனம் விருஷபம். பகவான் விருஷபதேவர் ஆலமரத்தின்கீழிருந்து அறமுரைத்தார். சிவபெருமான் இருக்கையும் ஆலமரம். பகவான் விருஷபதேவர் பல மாதங்கள் அசையாமல் கடுந்தவம் புரிந்தார். அதனால் தலையில் சடை வளர்ந்தது! சிவபெருமானுக்கு சடை இயற்கை. பகவான் விருஷபதேவர் வினையெனும் அவுணரைத்துரத்த நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மூன்று அறங்களையுடைய ஆயுதத்தை உபயோகித்தார். இங்கே சிவபெருமான் கொடிய அவுணரைக் கொல்ல மூன்று முனைகளையுடைய சூலாயுதத்தை தாங்கியுள்ளார். பகவான் விருஷபதேவர் ஐம்புல அடக்கத்தால் காமனை வென்றார். சிவபெருமான் காமனை எரித்தார். நந்தியெனும் அறத்தின பெயர்கொண்டு தருமநந்தி, கனகநந்தி, விஜயநந்தி, பவணந்தி, என சமண முனிவர்களின் பெயர்களில் போற்றப்பெறுகின்றன. சைவ சமயத்திலும் நந்தி போற்றப்படுகிறது! பகவான் விருஷபதேவர் கேவல ஞானம் பெற்று விளங்கினார். அதனால் கேவலக்கிழத்தியை பிரியாத ஒரு பாகன் என்று புலவர் போற்றினர். இங்கே சிவபெருமான் பார்வதியை ஒரு பாகத்தில் பெற்றுள்ளார். பகவான் விருஷபதேவருக்குத் தான் முதன் முதல் சிவன் என்ற பெயர் இருந்ததாக கி.மு. நூற்றாண்டுகளில் காணப்படும் இலக்கியங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அவர் வீடுபேறடைந்த இன்ப நிலைக்கும் சிவகதி என்றும் பெயர்! எனவே, சிவன் என்ற சொல்லும் இங்கே சைவமும் ஆண்டு வருகிறது. இரு கடவுளருக்கும் கைலாசநாதர் என்றும் பெயர். பகவான் விருஷபதேவர் பாநிர்வாணமடைந்த தினத்திற்கு சிவராத்திரி யென்றே வழங்கப்பெறும். எனவே இவ்விரு சமயங்களின் இறைவன் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒருமைப்பாடு காணப்படுகிறது! வைணவ சமயமோ பகவான் விருஷபதேவரை தங்கள் கடவுளாகவே ஏற்றிப் போற்றுகின்றது. ஆகவே சிவபெருமான், மகாவிஷ்ணு முதலிய சிலைகளில் அமைந்துள்ள ஆடை, ஆபரணங்கள், சங்கு, சக்கரம். சூலாயுதம், மண்டையோடு, எலும்பு மாலைகள், மயிர்க்கயிறுகள் ஆகியவற்றை நீக்கி அசல் உருவத்தை நோக்கினால் அவை பகவான் விருஷபதேவரே என்பது தெளிவாகும். திருக்குறள் கடவுள் வாழ்த்தில் கூறப்படும் இறைவன் பண்புகள் அங்கே காணப்படும்! துறவு, தவம் என்ற அதிகாரங்களின் இலக்கணம் புலப்படும். இதுபோன்றே கொள்கைகளிலும், காணலாம்! பகவான் விருஷபதேவர் அறம்,

"தன்னுயிர் தான் பாந்தோம்பு மாறுபோல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க் கிறைவனாய் இன்ப மூர்த்தியாய்
பொன்னுயிராய்ப் பிறந்து உய்ந்து போகுமே!"
-சீவகசிந்தாமணி.

"விரையார் மலர்மிசைவருவார் திருவறம் விழைவார்
கொலையினை விழையார்பொய்
யுரையார் களவினை யொழுகார் பிறர்மனை யுவலார்
மிகுபொருள் உவவார்வெஞ்
சுரையால் உணர்வினை யழியார் அழிதசைதுவ்வார்
விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை நுகரார் இரவுணல் புகழார்
குரவரை இகழாரே"
- திருக்கலம்பகம்.

"கதமொழிதீர்மின் கறுவுகள் தேய்மின் கருணைநெஞ்சோடு
இதமொழிகூறுமின் இன்னுயிரோம்புமின் எப்பொழுதுஞ்
சுதமொழிகேண்மின் சுகமிகவேண்டில் துறவர்சொன்ன
வதமொழியோன்மின் இவைசினனார் திருவாய்மொழியே"
- திருநூற்றந்தாதி.

தன்னுயிரைப்போல் மன்னுயிரைக் காத்தலும், கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர்மனை நயவாமை, மிகுபொருள் விரும்பாமை, கள்ளுண்ணாமை, ஊனுண்ணாமை, தேனுண்ணாமை, குரவரை இகழாமைப் போன்ற நல்லொழுக்கங்களை மேற்கொள்ளலும், அன்பு, இன்சொல், கருணை, சாந்தம், நல்லெண்ணம், நன்மொழி, நற்பணி போன்ற உயாய பண்புகளை வாழ்க்கையின் சின்னங்களாக அமைத்தலுமாகிய இயல் நெறிகளை ஏற்காத மாந்தரும் இருக்கவியலுமோ? எனவே மக்களனைவரும் இவ்வறநெறிகளை மேற்கொண்டு பல நூற்றாண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் சமூகத்தில் பல பிளவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக அவரவர்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட புது சமுதாயங்களைச் சிருட்டித்தனர்.

அறிவு-நம்பி : ஐயா! பிளவுக்குக் காரணம்?

ஆசிரியர் : நம்பி! சிக்கலான கேள்வி. அதை விளக்க விரும்பவில்லை. பொதுவாக யான் கூறும் வரலாற்றில் உனது கேள்விக்குரிய பதில் கிடைக்கும்.

அறிவு-நம்பி : மன்னிக்க வேண்டும்! மேற்கொண்டு கூறுங்கள்!

ஆசிரியர் : அப் புதுக் கொள்கைக்காரர் தங்கள் பிரிவுகளுக்கு சமயம் அல்லது மதம் எனப் பெயாட்டனர். நம்பிக்கையும் கடவுள் பக்தியும் அவர்கள் கொள்கைகளுக்கு அடிப்படை. எனினும் பகவான் விருஷபதேவர் அருளிய அறங்களில் சிலவற்றையும் மேற்கொண்டனர். ஆனால் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் அவர்கள் புரியும் வழிபாடுகளில் அந்நல்லறங்கள் ஒளிந்து ஒளிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையை உணர்ந்தே நமது திருக்குறளாசிரியர் பின்வரும் சில குறள்களால் அவ்வேற்றுமைகளை விளக்கி அறத்தின் இயல்பை நிலை நாட்டுகின்றார்.

"ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று"

"நன்றாகும் ஆக்கம் பொதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை"

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"

"கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு"

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்"

"தினற்பொருட்டாற் கொல்லாதுலகெனின்யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தரு வாரில்"

இவை போன்று வேறு பல குறள்களும் இருக்கின்றன.

பகவான் விருஷபதேவர் அறம் பூரண அஹிம்ஸையை உடையதென முன்னமே அறிந்துள்ளோம். அறிவையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக்கொண்டது. தமது கொள்கைகளை வளர்க்கப் பகவான் வகுத்த திட்டங்கள் மகத்தானவை. மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு கல்வியறிவு பெறுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் வாழ்க்கை நலமும் உயர்ந்து நிற்கும்! எனவே அம்முனைவன் முதல் முதல் எழுத்துக்களையும் அறிவுக்கலைகளையும் சிருட்டித்தார். அக்கலைகளில் அறிவையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தி நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் ஆகிய மூன்று இரத்தினங்களை மக்கள் வாழ்க்கைக்குரிய ஆபரணங்களாக வழங்கினார். சமூக முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பவை மூட நம்பிக்கைகள். அவைகளை அகற்றினாலன்றி எந்த நல்லறமும் நல்லறிவும் வளர்ச்சியுறாது. எனவே உலகமூடம், தேவமூடம், பாஷண்டிமூடம் எனும் மும்மூடப் புலிகளைக் கண்டு அஞ்சி அகலுமாறு எச்சாக்கை செய்தார். மக்களின் வாழ்வும் தாழ்வும் பெருமையும் சிறுமையும் அவரவர்கள் முயற்சியைப் பொறுத்தனவேயன்றி பிறரோ, பிறசக்திகளோ காரணமாகாதென அறிவுறுத்தி முயற்சியில் ஈடுபடச் செய்தார். எனவே அறிவையும் ஒழுக்கத்தையும் அடிப்படையாகக்கொண்ட அப்பழமைவாய்ந்த திருவறம் இன்றும் நின்று நிலவுகிறது! சீரும் சிறப்பும் பெற்றுப் பலர் புகழ் ஞாயிறெனத் திருக்குறளாகக் காட்சியளிக்கின்றது! இவ்வேறுபாடுகளை அந்தந்த சமய நூல்களில் காணலாம்.

மாணவர் : அன்புசால் ஐயா! நன்கு புரிந்துகொண்டோம். பிற்காலக் கொள்கையாரிடம் அன்பும் அறமும் பேசப்படுவதாயினும் அங்கே அவைகளுக்கு உள்ளங்கனிந்த வரவேற்பில்லை. கபாலிக, வாம மார்க்கக் கொள்கைகளுடன் அந்நற்பண்புகள் உறவாட நடுங்குகின்றன! தாங்கள் விளக்கங்கொடுத்து வரும்பொழுதே புதிய கொள்கைகளைக் கொண்ட நூல்களின் நுணுக்கங்களை யெல்லாம் ஆங்காங்கு மனத்தால் ஆராய்ந்து கொண்டோம்! பாவம்! அன்பும் அறனும் தாயுமான சுவாமிகள் பாடலிலும் இராமலிங்கசுவாமிகள் அருட்பாவின் ஆறாந்திருமுறையிலுந்தான் மூச்சு விடுகின்றன!

ஆசிரியர் : பொன்னை வாங்குகிறவர்கள் அப்பொன்னை நிறுத்து அறுத்து சுட்டு, உரைத்துப் பாட்சிப்பது போல் அறத்திறனையும் ஆராயும் பேரறிவு உங்களிடம் உறைந்துள்ளதை இன்றுதான் அறிந்தேன்!

"எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு"

என்ற குறள் மொழிப்படி,

மெய்ப்பொருளைத் தெளிந்துரைத்தீர்கள். இவ்வேறுபாடுகளையெல்லாம் நன்கு ஆராய்ந்த பின்னரே எனக்குப் பகவான் விருஷபதேவர் அறங்களில் பற்றும் அவர்பால் அறாத அன்பும் ஏற்பட்டது! ஒரு மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் ஆற்றுநீரை ஆங்காங்குள்ள மக்கள் சிறு சிறு கால்வாய்களாகப் பிரித்து நீரைக் கொண்டுபோவதுபோல எல்லா சமயங்களும் பகவான் விருஷபதேவர் அருளிய வழியையே பின்பற்றிச் சிறிது மாறுதல்செய்து கொண்டார்களேயன்றி வேறில்லை! இம்மாறுதல்களால் மக்களுக்குள் பிரிவு மனப்பான்மையும், உட்பகையும், சமயக் காழ்ப்பும், சாதிச் சண்டையும், மற்றும் பல தீமைகளுந்தான் வளர்ந்தன!
 

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com