முகப்பு வாயில்

 


ஆனந்தன் : ஐயா! இந் நிகண்டில் ஆதிபகவன் மட்டுமல்ல! திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் கூறப்படும் சிறப்புப் பெயர் அனைத்தும் அடங்கியுள்ளனவே! ஒருவேளை ஆதிபகவன் அருளிய அறத்தினையே இயற்றியிருப்பாரோ!

ஆசிரியர் : நன்று கூறினை! உன் அறிவை மெச்சினேன்! 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் சமய திவாகர மாமுனிவர் எனும் சமணப் பேராசிரியர் நீலகேசி என்ற பண்டைய தர்க்க நூலுக்கு அறிவுசான்ற உரை எழுதியுள்ளார். அவர் தமது உரையில் மேற்கொளாகத் திருக்குறளைக் குறிப்பிடும்போதெல்லாம் அது "எம்மோத்தாதலால்" (எமது வேதம்) என உரிமையுடன் பாராட்டி எழுதுகின்றார். இக்கருத்தை நோக்கும்போது நீ கொண்ட கொள்கை தவறல்ல. ஆதிபகவனின் அறமே திருக்குறள் எனத் துணிந்து கூறலாம்.

அறிவுடை : ஐயா! அரிய செய்திகள்! தாங்கள் விளக்கிய கவிகளைக் கூறுங்கள் குறித்துக்கொள்ளுகின்றோம்.

ஆசிரியர் : உங்கள் அவாவை வரவேற்கின்றேன்! நான் இதுவரைப் பேசி வந்தவைகளுக்கெல்லாம் இலக்கிய ஆதாரங்களுண்டு. அவைகளையெல்லாம் இங்கு விரிப்பதாயின் நேரம் அதிகமாகும். அடுத்த ஞாயிற்றுக்கிழமை எனது இல்லத்திற்கு வாருங்கள். உங்களுக்கு வேண்டியவற்றைக் குறித்துக் கொள்ளலாம். பல நூல்கள் இருக்கின்றன.

அறிவுடை : பேராசிரியரே! வடமொழி இலக்கியங்களில் பகவான் விருஷப தேவரைப்பற்றிய பேசப்படுகின்றனவா?

ஆசிரியர் : யானும் அவைகளைப் பற்றிதான் விளக்கவாய் திறந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். சிறு மாணவர்களாயினும், உங்களிடம் கூர்மையான அறிவு விளங்குகிறது. ஜைன இலக்கியங்களில் ஆதிபுராணம், மகாபுராணம் போன்ற பல நூல்களில் ஆதீஸ்வரர் வரலாறுகள் விளக்குவது போலவே வைதீக சமய சம்பந்தமான நூல்கள் பலவற்றிலும் அவர் போற்றப்படுகின்றார். அவைகளை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். அக்குறிப்புகள் இங்கே எனது டாயில் இருக்கின்றன.

மாணவன் : (நகை முகத்துடன்) மிக மிக நன்றி சார்? தயவு செய்து கூறுங்கள்.

ஆசிரியர் : (டாயைப் பிரித்து) ரிக்வேதம் (10, 12, 166 வது சூத்திரங்கள்)

மார்க்கண்டேய புராணம் (அதிகாரம் 50 பக்கம் 150)

கூர்ம புராணம் (பாகம் 1 அதிகாரம் 33 பக்கம் 51)

ஸ்காந்த புராணம் (அதிகாரம் 37 பக்கம் 148)

சிவ புராணம் (அதிகாரம் 4 பக்கம் 24)

இலிங்க புராணம் (அதிகாரம் 47 பக்கம் 68)

விஷ்ணு புராணம் (பாகம் 2 அதிகாரம் 1 பக்கம் 77)

பாகவதம் (5-வது ஸ்கந்தம்)

இவற்றுடன் ஒரு சிறந்த வரலாற்றைக் கேளுங்கள்!

பகவான் விருஷபதேவருடைய முதற் புதல்வன் பெயர் பரதன். அவரே இந்நாட்டின் முதற் சக்கரவர்த்தி. அவர் பெயராலேயே இந்நாட்டிற்கும் பரதகண்டம் என வழங்குவது!

அறிவுடை : என்ன வேடிக்கை. நமது நாட்டின் வரலாற்று ஆசிரியர்கள் இவைகளைப் பார்த்தில்லையா? பலதரப்பட்ட இந்திய இலக்கியங்களில் பகவான் விருஷபதேவர் ஒரு சின்னமாகவன்றோ காட்சியளிக்கின்றார். இந்நாட்டிற்குப் பரதகண்டம் என்ற பெயர் வந்த வரலாற்றையாவது குறிக்கக் கூடாதா? இத்தகைய சிறந்த மாபெரும் தெய்வீகத் தலைவருக்குச் சாத்திரத்தில் இடங்காணோம்! ஆசிரிய பெரும! இருட்டடைப்பு செய்திருக்கிறார்களே! வெட்கமாயிருக்கிறதே.

ஆசிரியர் : வெட்கப்படவேண்டிய விஷயந்தான். எனினும், நாம் கூறிய உண்மைகளையெல்லாம் நடுநிலைமையோடு ஆராய்ந்து அறிந்த பேரறிஞர்கள் தங்கள் தங்கள் நூல்களில் குறிக்காமலும் இல்லை. காலஞ்சென்ற தமிழ் நாட்டு முதுபெரும் புலவரும் தனித்தமிழ்ப் பொயாரும் ஆகிய திரு.வி.கலியாண சுந்தரனார் அவர்கள் தாம் இயற்றிய "அருகன் அருகே அல்லது விடுதலை வழி" "பொருளும் அருளும்" என்ற இரு நூல்களிலும் பகவான் விருஷப தேவர் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார். அரசியலில் நிதியமைச்சராகப் பணியாற்றிய (காலஞ்சென்ற) இலக்கிய டாக்டர். R.K. சண்முகஞ் செட்டியார் அவர்களும், மற்றும் சில தமிழ் அறிஞர்களும் பகவான் விருஷபதேவர் வரலாற்றுப் புருடர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நமது நாட்டு உதவி ஜனாதிபதியும், தத்துவப் பேரறிஞருமாகிய டாக்டர் இராதாகிருட்டிணன் அவர்கள் தாம் எழுதிய இந்திய தத்துவங்கள் (Indian philosophy) என்னும் ஆங்கில நூலில் "பாகவத புராணம் விருஷபதேவர் ஜைன மத ஸ்தாபகர் என்பதை ஆமோதிக்கின்றது. கி.மு. முதல் நூற்றாண்டிலேயே முதல் தீர்த்தங்கரர் விருஷபதேவரை மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதைக் காட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. வர்த்தமானருக்கும், பார்ஸ்வநாதருக்கும் முன்பே ஜைன மதம் பரவி இருந்தது என்பதில் சந்தேகமில்லை. யஜுர்வேதம், விருஷபர், அஜிதநாதர், அரிஷ்டநேமி ஆகிய தீர்த்தங்கரான் பெயர்களைக் கூறுகின்றது" என அழகாக எழுதியுள்ளார். மற்றொரு அறிஞராகிய N.N.Basu என்பவர், ஹிந்தி விஸ்வகோசா (Hindi Visvakosa) என்ற நூலில், விருஷபதேவர் தான் முதலில் எழுதுங் கலையைக் கண்டுபிடித்தார். பிராமி எழுத்துக்களைக் கண்டு பிடித்தவரும் அவரே. அதனால்தான் அவர் 8-வது அவதாரமாகக் கருதப்படுகிறார். அவர் இந்திய அரசர் நாபி ராசருக்கும் அவர் மனைவி மருதேவிக்கும் பிறந்தவர். பாகவதத்தில் 22 அவதாரங்களில் 8-வது அவதாரமாகக் கூறப்படுகிறது" என விளக்கியுள்ளார். இன்று பூமிதான இயக்கம் நடத்திவரும் ஆச்சாரிய வினோபாஜீயும் பகவான் விருஷபதேவரைப் போற்றுவதுடன் அவர் இயக்கமும் பகவான் அருளிய 'மிகு பொருள் விரும்பாமை' யெனும் பேரறத்தின் அடிப்படையேயாகும்' இவ்வரலாற்றுச் செய்தியைக் கேட்டதும் ஏதோ சிந்திப்பதுபோல் மெய்ம்மறந்து சிலையை நோக்கினர்! முகங்கள் பொலிவுற்றன! புன்முறுவல் கொண்டனர்! ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்! ஆசிரியரையும் மறந்து அசையாமல் மெளன முற்றனர். மாணவர்களின் உள்ளத்தூய்மையை அறிந்த ஆசிரியர் "மாணவ மணிகளே! உலகையே மறந்துவிட்டீர்கள் போலும்!" என்றார். உடனே மாணவர்கள் உணர்ச்சியுற்று "எங்கள் பேராசியரே! எம்மான் எங்கள் தலைவன்! எம்மான் எங்கள் ஆசிரியன்! எம்மான் எங்கள் முனிவன்! எம்மான் எங்கள் இறைவன்! எம்மான் எங்கள் அறிவு! எங்கள் உயிர்! எங்கள் உடல்! எங்கள் உள்ளம்! எல்லாம் அவனே! ஆசிரிய பெரும! எம்மானை வணங்கவேண்டும்! எம்மானைப் பாட வேண்டும்! எம்மானைப் போற்றவேண்டும்! எம்மானை எங்கள் உள்ளத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்! எம்மான் திருமொழியை உலகெங்கும் பரப்பவேண்டும்!

ஆசிரியர் : மாணவர்களே! இப்பொழுது இரண்டாங் குறளின் உரை காண்கிறீர்கள் போலும்!

அறிவுடை : ஆமாம் சார்! எங்கள் இருவருக்கும் இரண்டாம் குறளைப் பற்றி அடிக்கடி விவாதம் நடக்கும். திருக்குறளாசிரியர் கடவுளை வழிபடுமாறு கற்றவர்களைத்தான் வற்புறுத்துகிறார், பாமர மக்கள் ஏன் கோயிலுக்குப் போகவேண்டும் என்பார் ஆனந்தன்! யான் அதை மறுத்து, கற்றவர் கடவுளைத் தொழுதால் மற்றவர் அவர்களைப் பின்பற்றிப் பயன் பெறுவார்கள் என்பதுதான் அக் குறளின் கருத்து என்பேன்! இன்று இருவர் கருத்தும் பொய்த்துவிட்டது. அகர முதலாகிய எழுத்துக்களைக் கற்பித்த முதல் ஆசிரியன்! வர்க்க பேதமற்ற சமுதாயத்தை அமைத்தருளிய அரசியல் முதல் தலைவன்! இன்னான் இனியன் என்றிராமல் அனைவருக்கும் அறம் வகுத்த முதல் அறவோன்! என்ற எம்மான் வரலாற்றின் அருமைப் பெருமைகளை அறிந்த எவரும் அவரைப் போற்றாமலிரார்! அப்பெருமைகளை அறிந்துகொள்ளும் ஆற்றலும் கற்றவருக்கே உண்டு. மேலும் குறளாசிரியர் சமுதாய ஆரம்ப காலத்தையும் எழுத்துக்களின் தொடக்கக் காலத்தையும் விளக்கவே "ஆதிபகவன் முதற்றே உலகு" என்றார். எனவே உலக முதல் பேராசிரியராய் விளங்கும் தனிப் பெருந்தகையை வழிபடவேண்டியது கற்றவர் கடமை! இங்கே பக்தியின் காரணமென உரைகொள்வது பொருந்தாது. கடமை உணர்ச்சியைக் கற்றவர்களுக்கு நினைவுறுத்தவே,

"கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ரெனின்"

என்றார். நமது தமிழ்மறை தந்த ஆசிரியர் பெருமான்! இன்று எங்களிருவருக்கும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கே கற்றவர் எவர்க்கும் ஏற்படும் உணர்ச்சி! இதுவே இரண்டாம் குறளின் உரை என்றால் மிகையாகாது! அறிவுசான்ற ஆசிரியரே பிழையிருப்பின் பொறுத்தருள்க!

ஆசிரியர் : சீரிய கருத்து! குறளாசிரியான் உட்கருத்தும் இதுதான்! அஞ்ச வேண்டாம்! எங்கும் உரைக்கலாம். மறுக்க முடியாது?

ஆனந்தன் : ஐயா, தாங்கள் முதற் குறளின் கருத்தை நன்கு விளக்கிக் கூறினீர்கள்! யாங்கள் இரண்டாம் குறளின் விரிவுரையாக விளங்கினோம்! மற்றக் குறள்களின் கருத்துக்களை ஆராய்வானேன்! ஆதிபகவன் வகுத்த அறமே என்பது உறுதி!

ஆசிரியர் : ஆனந்தா! ஆழ்ந்த கருத்து! வரவேற்கின்றேன்! ஆனால் ஒன்று! நீ சைவ சமயம்! அவர் வைணவம்! இருவருக்கும் இந்த உணர்வு நிலைத்திருக்குமா என்பதுதான் சந்தேகம்!

ஆனந்தன் : ஆசிரியர் பெரும! சமயமா? தாங்கள் ஆதீஸ்வரான் வரலாற்றை விளக்கி வருகையில் எங்கள் உணர்ச்சியை சமயமோ சாதியோ தடை செய்யவில்லை! உயிரும் உள்ளமும் கலந்து போற்றினோம்! மேலும் பகவான் விருஷபதேவர், சமயம் என்ற பெயராலோ மதம் என்ற பெயராலோ அறம் வகுக்கவில்லை! பொதுவாக உலக மக்களுக்கெனவே அறம் என்ற பெயரால் தமது கொள்கையைப் பரப்பினார்! யான் உலகில் ஒருவன் அன்றோ! அத்தூயோனை வழிபடவேண்டிய கடப்பாடுடையவனல்லவா! சமயக் கண் கொண்டு பார்த்தாலும் சிவபுராணம், ஸ்காந்தபுராணம், ஆகியவைகளில் பகவான் விருஷபதேவர் போற்றப்படுகின்றார் என்றால் யானும் அவ்வழியைப் பின்பற்றுவது தவறாகுமா? ஏதோ இடைக்காலத்தில் சமயக்காழ்ப்பு நூல்களைக்கொண்டு உலகிலேயே ஒப்பாரும், மிக்காரும் இன்றி சிறந்து விளங்கிய ஒரு மாபெருந் தலைவரை மறக்க முடியுமா? அறிவியல், அருளியல், அரசியல், உலகியல், பொருளியல் ஆகிய உலகக் கலைகளுக்கே உறைவிடமாய்க் காட்சியளிக்கும் எம்மானை வணங்காத தலையும், தலையா? பாடாத நாவும், நாவா? பணியாத உடலும் உடலா! தொழாத கரங்களும், கரங்களா? மனித சமுதாயத்தின் மாண்புறு தலைவனை மறப்பதா? ஆசிரியரே! எம்மான் தாளை வணங்கி அவர் மெய்ப்பொருளின் வழி நிற்பேன்.

ஆசிரியர் : ஆனந்தா! மெச்சினேன் உனது உறுதியை? நமது அறிவுடைய நம்பியின் கருத்து யாதோ?

 

1  2  3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com