முகப்பு வாயில்

 

1. கி.மு.2-ம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட அரசன் காரவேலன் தமிழகத்தையும் வடநாட்டையும் தன் ஆணைக்கு அடங்கச்செய்து அரசோச்சினான். அப்பேரரசன் நாடு முழுவதும் வாழ்ந்த சமண முனிவர்களைத் திரச்ட்டி மகாநாடு நடத்தினான். மெளாயர் காலத்தில் இழக்கப்பட்ட ஏழுவகை அங்காகமங்களையும் தொகுப்பித்தான். தமிழகத்தின் தென் எல்லையாகிய குமாக்குன்றில் சமணம் தழைத்திருந்ததை அவன் பதின்மூன்றாவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக் குன்றில் வாழ்ந்த சமணத் துறவிகளுக்குச் சீனத்து ஆடைகளையும் வெள்ளாடைகளையும் வழங்கினான். தேக, ஜீவன்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்தான். இக்குன்றில் இருந்த சமணர்கள் திகம்பரர்களாகவே காணப்பட்டனர். இத்தகு சீரும் சிறப்பும் வாய்ந்த சமணப் புரவலனாகிய காரவேலன் சர்வ சமய சமரச நோக்குடையவன். காரவேலன் காலத்தில் விளங்கிய குமாக்குன்று இளங்கோவடிகள் காலத்துக்கு முன்பே கடல் கொண்டு விட்டதை,

"பறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமாக்கோடும் கொடுங்கடல் கொள்ள"

என்ற சிலப்பதிகார குறிப்பு தெளிவுறுத்துகிறது. பார்க்க: டாக்டர் சோ.ந. கந்தசாமி அவர்கள் எழுதிய 'தமிழும் தத்துவமும்' பக்கம், 84, 1976

மாடலன் சமயம்
இனி மாடல மறையோன் வரலாற்றை ஆராய்வோம். மாடல மறையோன் கவுந்தியடிகள் வீற்றிருக்கும் இடத்திற்கு வருகின்றான். கோவலனும் அங்கு இருக்கின்றான். அவ் வந்தணனைக் கண்டதும் கோவலன் வணங்கி வரவேற்கின்றான். இம் மாடலன் ஜைன அந்தணன் என்பதை முன்பே விளக்கினோம். மேலும் மாடலன்,

"மாதவ முனிவன் மலை வலங்கொண்டு
குமாயம் பெருந்துறை கொள்கையிற் படிந்து"

என்பதால் மாடலன் அகத்தியர் பொதிய மலையை வலங்கொண்டு வந்தானென்பது பெறப்படுகின்றது. இந்தப் பொதிய மலை ஜைன சமயத்திற்குரியதாய் இருப்பதாகவும், அதில் நேமி தீர்த்தங்கரான் ஆலயம் இருப்பதாகவும் சான்றுகள் உள்ளன.

"மயிலாபுரி நின்றவ ராயாசன வும்பான்
மலர்போதி லிருந்தவ ரலர்பூவி னடந்தவர்
அயிலார் விழிமென் கொடிமிடை தீபை நயந்தவ
ரமராபதி யிந்திர னணியாட லுகந்தவர்
கயிலா யமெனுந் திருமலை மேலுறை கின்றவர்
கணநாயகர் தென்தமிழ் மலைநாயகர் செம்பொனி
னெயிலா ரில குஞ்சின கிரியாள்பவர் சம்பைய
ரெனையாள நினைந்துகொல் வினையேனு ளமர்ந்ததே" (திருக்கலம்பகம்.74)

என்னுந் திருக்கலம்பகத்தின் தோத்திரச் செய்யுளாலும் மற்றும் பல ஜைன நூல்களாலும் முதல் அகத்தியர் வரலாற்றாலும் இவ்வுண்மை புலனாகும். ஆகவே, மாடலன் பொதிய மலைக்குச் சென்றது நேமிஜினரை வழிபட வென்பதும், அவன் ஜைன அந்தணன் என்பதும் உறுதிப்படுகின்றன.

ஆதலின், இம் மாடல மறையோன் ஜைன அந்தணனாவான். நாம் முன்னர் கூறியது போன்று ஜைன அந்தணர்கள் வேறு, வைதிக சமய அந்தணர்கள் வேறு.

"அறத்தகை அந்தணர் குழுவு மாடல்வேள்
மறத்தகை மன்னவர் குழுவு மாநகர்த்
திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
பொறுத்தவர் பொலிவுரை புடைபொ ழிந்ததே" (சூளாமணி, 1721)

எனவரும் சூளாமணியாலும் ஜைன சமய அந்தணர் வேறு என்பது புலனாகும். மாடல மறையோன் செங்குட்டுவனைச் சந்தித்துப் பேசும் அறவுரைகள் யாவும் ஜைன சமயக் கொள்கைகளாகவே காணப்படுகின்றன. மாடலன் அரசனை நோக்கி, 'மன்னரேறே அறக்கள வேள்வி புரிய வேண்டிய நீங்கள் மறக்கள வேள்வி புரிவோராயினீர்' எனவும், தான் கூறுவனவற்றில் செவி சாய்க்க வேண்டும் எனவும் கூறத் தொடங்கி, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, விலங்குகதித்துன்பம், நரககதித் துன்பம், தேவகதித் துன்பம், விலங்குகதித் துன்பம் ஆகிய நாற்கதித்துன்பங்களையும் ஜைன நூல்களில் வழிபற்றிப் போதிக்கின்றான். நிலையாமைத் தத்துவங்களும், நாற்கதி துன்ப வரலாறுகளும் ஜைன சமய நூல்களில் பரக்க இடம் பெறக் காணலாம். இவ்வாறு பேசும் தன்னை யாச சுப்பிராமணானகக் கருதிவிடுவாரோவென அஞ்சி, "அரும்பொருட் பாசிலேனல்லேன்" என்றும் உறுதி கூறுகின்றான். மன்னன் மாறுபட்ட சமயக்கொள்கையின் பயனாய், மறக்கள வேள்வி முதலிய துறைகளில் ஈடுபாடுடையவனாயிருக்கின்றமையால், அவன் உள்ளத்தை மாற்ற வேண்டி, இத்தகு பேரறங்கள் யாவும் 'பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்,,. பெருநல் வேள்வி நீ செய்யல் வேண்டும்' என்றும் தூண்டுகிறான்.

மாடலன் கூறி வந்த அறவுரைகளைச் செவியேற்ற செங்குட்டுவன் தனது நிலையை உணர்கின்றான். தனது முன்னோர்களின் சமய நெறியையும் எண்ணித் தெளிகின்றான். பின்னர், கண்ணகி கோயிலில் விழா நடத்திப் பூப்பலி செய்கின்றான். கொலையிலா நல் வேள்வியும் செய்கின்றான். இவ்வரலாறுகளை இளங்கோவடிகள் வாயிலாகவே அறிந்து இன்புறுவோம்:

"மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணார் பொருணை மணலினுஞ் சிறக்க
அகழ்கடன் ஞான மாள்வோய் வாழி
யிகழா தென்சொற் கேட்டல் வேண்டும்!"
வையங் காவல் பூண்டநின் னல்யாண்
டையைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யா தியாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை
வேந்துவினை முடித்த வேந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிநி னூங்கனூர் மருங்கு
கடற்கடம் பெறிந்த காவல னாயினும்
விடர்ச்சிலை பொறித்த விறலோ னாயினும்
நான்மறை யாளன் செய்யுட் கொண்டு
மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும்
போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கெனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்
வன்சொல் யவனர் வளநா டாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினு
மிகற்பெருந் தானையோ டிருஞ்செரு வோட்டி
அகப்பா வெறிந்த வருந்திற் லாயினும்
உருகெழு மரபி னயிரை மண்ணி
யிருகட னீரு மாடினோ னாயினுஞ்
சதுக்கப் பூதரை வஞ்சியுட் டந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோனாயினு
மீக்கூற் றாளர் வாயரு மின்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்
மல்லன்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கிற்
செல்வ நில்லா தென்பதை வெல்போர்த்
தண்டமி ழிகழ்ந்த வாரிய மன்னாற்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே
இளமை நில்லா தென்பதை யெடுத்தீங்
குணர்வுடை மாக்க ளுரைக்கல் வேண்டா
திருஞெமி ரகலத்துச் செங்கோல் வேந்தே
நரைமுதிர் யாக்கை நீயுங் கண்டனை
விண்ணோ ருருவி னெய்திய நல்லுயிர்
மண்ணோ ருருவின் மறிக்கினு மறிக்கும்
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய் விலங்கி னெய்தினு மெய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய வின்னுயிர்
கலங்கஞர் நரகரைக் காணினுங் காணு
மாடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக்
கூடிய கோலத் தொருங்குநின் றியலாது
செய்வினை வழித்தாயு யிர்செலு மென்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலி
னெழுமுடி மார்பநீ யேந்திய திகிரி
வழிவழிச் சிறக்க வாயவாள் வேந்தே
யரும்பொருட் பாசிலே னல்லே னியானும்
பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர்
மலர்தலை யுலகத் துயிர்போகு பொதுநெறி
புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பா
னருமறை மருங்கி னரசர்க் கோங்கிய
பெருநல் வேள்விநீ செய்யல் வேண்டும்." (சிலப்பதிகாரம், 3:28:125-178)


வேள்வி

இங்கே நாம் மூன்று கேள்விகளைக் காண்கின்றோம். அவை, அறக்கள வேள்வி, மறக்கள வேள்வி, மதுக்கொள் வேள்வி என்பனவாம். இம் மூன்று வேள்விகளுள் அறக்கள வேள்வி ஜைன சமயத்திற்கும், மறக்கள வேள்வி, மதுக்கொள் வேள்வி ஆகியவை வைதிக மதத்திற்கும் உரியவை.

ஜைன சமயத்தில் "சாவகர்கள்" என்ற இல்லறத்தாருக்கு நாள் கடமைகள் (நித்தியானுஷ்டானங்கள்) உண்டு. அவைகளில் ஓமம் ஒன்று. இன்றும் சாவகர்கள் வீட்டில் இந்தச் சாதாரண ஓமம் நடைபெறும்; நன்மை, தீமை (சுப-அசுப) காலங்களில் பொய ஓமமாகிய 'சாந்தி ஓமம்' செய்வார்கள். ஓமம் என்றால் வேள்வி என்பதாகும். இவ்வேள்வி தமிழகத்தில் தொன்றுதொட்டு வருகிறது. நெற்பொரியும் நெய்யும் சொரிந்து, தீ எறிப்பார்கள். வேள்வியில் உபயோகிக்கும் நெற்பொரி மூன்று ஆண்டுகள் நிறையப் பெற்ற நெல்லிலிருந்தே பொரித்ததாக இருத்தல் வேண்டும். ஏனெனில் மூன்றாண்டுகட்குட்பட்ட நெல்லில் முளைக்கும் சக்தி இருக்கிறது. எனவே புனிதமும் தெய்வீகமும் நிறைந்த வேள்வியில் எவ்வுயிருக்கும் தீங்கிழைத்தல் ஆகாது எனும் அடிப்படைக் கொள்கையில் நெல் பொரியையும் முளைக்கும் சக்தியற்ற நெல்லிலிருந்தே பொரித்து வந்தார்கள்.

இத்தகைய அருள் நிறைந்த புனிதமான பெருநெல் வேள்வியைத்தான் வைதிக சமயத்தினர் கொலை வேள்வியாக மாற்றிவிட்டார்கள். இம் முரண்பாடு வரலாற்று தொடர்புடையது. இது ஜைன சமய வரலாற்று நூலாக விளங்கும் மகாபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பாரத நாட்டின் பண்டைய வரலாற்று நூல் என்றே சொல்ல வேண்டும். இதன் சுருக்கமே ஸ்ரீபுராணம் என வழங்குகிறது. இவ்வரலாற்று நூலில் வேள்வியைப் பற்றிய விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com