முகப்பு வாயில்

 

சோழன் சமணன்

கற்புக் கடம்பூண்ட கண்ணகி தன் கணவன் வெட்டுண்ட செய்தியைக் கேட்டு அலறியழுது அரசனின் அவைக்களத் தேகுகின்றாள். அரசன் கண்ணகியின் அழுகுரலையும், கண்களில் வடியுங் கண்ணீரையும், புழுதியடைந்த மேனியையும் கண்டுகலங்குகின்றான். ஆவேசமாகத் துடித்து நிற்கும் நிலையையும் கண்டு, "அம்மையீர்! நீங்கள் யார்?" என வினவுகின்றான். உடனே கண்ணகி தன் ஆருயிர்க் கணவன் வெட்டுண்ட செய்தியைக் கூறுமுன், தன் நாட்டு மன்னனின் செங்கோல் சிறப்பைக் கூறுகிறாள்:

"வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே" (சிலப்பதிகாரம், 2:20:53-56)

மேலும் இரண்டிடங்களில், (சிலப்பதிகாரம், 2:23:59; 3:29:17)

"பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை
அறன்அறி செங்கோல் மறநெறி நெடுவாள்
புறவுநிலை புக்கோள் கறவைமுறை செய்தோன்
பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்"

"புறவுநிறை புக்குப் பொன்னுலக மேத்தக்
குறைவி லுடம்பாந்த கொற்றவன்யா ரம்மானை
குறைவி லுடம்பாந்த கொற்றவன்முன் வந்த
கறவை முறைசெய்த காவலன்காண் அம்மானை
காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை"

சோழன் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவ்வாகளில் சிவபெருமான் தொடர்பும் சோழ மன்னனின் மகன் உயிர் பெற்றெழுந்த நிகழ்ச்சியும் கூறப்படவில்லை. இவ்விலக்கிய வரலாற்றின்படி சோழ மன்னன் தனது மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றான் என்றதோடு முடிகின்றது. இவ்வுண்மையை வலியுறுத்திப் பதினெண் கீழ்கணக்குகளில் ஒன்றாகிய பழமொழி நானூறு என்னும் ஜைனநூலில்,

"சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலைக் கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறமைக்கு மூப்பிளமை யில்" (பழமொழி 242)

என விளக்கப் பெற்றுள்ளது.

இப்பெரும் வரலாற்றுண்மையைச் சைவ சமயக் கதையாகக் கொள்ளவேண்டி, சேக்கிழார் தமது பொய புராணத்தில் மனுறிகண்ட சோழன் எனப்பெயாட்டு, அம்மன்னன் தனது மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றதும், சிவபெருமான் தோன்றி, மன்னனின் நீதியைப் பாராட்டி, அரசகுமாரனுக்கும் பசுங்கன்றுக்கும் உயிர் கொடுத்து எழுப்பித் தந்தார் எனக் கற்பனைச் செய்து, சைவ சமயக் கதையாக மாற்றிக்கொண்டார்.

இதினின்றும் சோழமன்னன் ஜைன சமயத்தைச் சார்ந்தவனென்பதும், அம் மன்னனைச் சைவ சமயத்தவராகக் காட்டி வேண்டி அவர் வரலாற்றில் சிவபெருமான் தொடர்பைச் சேர்த்துப் பொய புராணம் இயற்றப்பட்ட தென்பதும் தெற்றென விளங்குகிறது.

இளங்கோவடிகள் சைவ சமயத்தைச் சார்ந்தவராயிருப்பின் சிவபெருமானின் திருவிளையாட்டை உலகுக்கு அறிவிக்கும் இவ்வாய சந்தர்ப்பத்தை இழப்பாரா? எனவே, இளங்கோவடிகள் சைவ சமயத்தவரல்லர் என்பதும் பொய புராணக் கூற்றுப் பொய்யென்பதும் வெளிப்படை.

சேக்கிழார் இவ்வாறே பல நாட்டுக் கதைகளையும் பல மதங்களின் வரலாறுகளையும் தமது நூலில் சில மாறுதல்களுடன் சேர்த்துக்கொண்டு சிவ கதைகளாகப் புராணத்தில் பாடியிருக்கின்றார்.

இஸ்லாம் மதத்தில், ஆண்டவன், இப்ராஹீம் என்ற பக்தனைச் சோதிக்க வேண்டி, அவன் மகனைக் கொன்று, கறியாக்கித் தனக்குப் படைக்குமாறு கேட்கின்றார். அதற்கு இசைந்த பக்தன் தன் மகனைக் கொல்ல ஆயத்தமாகின்றான். உடனே ஆண்டவன் தோன்றி அவன் பக்தியை மெச்சி, 'குழந்தையைக் கொல்ல வேண்டாம்! உன்னை ஆட்கொண்டேன்' என்று பலியைத் தடுக்கிறார். இந் நிகழ்ச்சியைச் சேக்கிழார் தமது பொய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனார் கதையில் பாடிவிட்டார். அக்காலத்தில் தமிழர்கள் வாணிபம் தொடர்பாக அரேபியா போன்ற வெளிநாடுகளில் பயணம் செய்தமையால், அவர்கள் வாயிலாக இக்கதை இங்கு வந்து சேர்ந்தது. ஆனால், பொய புராணத்தில், சிறுத்தொண்ட நாயனார் தம் மகனைக் கொன்று கறியாக்கிச் சிவபெருமானுக்கு உணவாக அளித்ததாகவும், அதனைச் சிவபெருமான் கண்டுகளித்த பின்னர் பிள்ளையை உடலோடும், உயிரோடும் எழுப்பித் தந்ததாகவும், பகுத்தறிவுக்கும், ஆண்டவன் செயலுக்கும், சமய நெறிக்கும் இயற்கைக்கும் முரணாகத் கற்பனை செய்து, சேக்கிழார் கதை எழுதிவிட்டார்.

அரேபியாவில் காய் கனி கிடைப்பது அரிதாகையால், அங்குள்ள மக்கள் புலாலுணைவை மேற்கொண்டிருந்தார்கள். அதனால் ஆண்டவன் அங்கே பக்தனைச் சோதிக்கவேண்டி புலாலுணவைக் கேட்டதாகக் கதை எழுந்தது. அக்கதை நரமாமிசத்தை வெறுத்தும், பகுத்தறிவுக்கும், இயற்கைக்கும் முரணின்றியும் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இங்கே புலாலுணவையே வெறுக்கின்ற பாரத நாட்டிலே, திருக்குறள் பிறந்த தெய்வத் தமிழ்ப் பூமியிலே-இறைவன் நரமாமிசத்தை விரும்புவதையும், பக்தன் தம் மகனைக் கொன்று பக்குவமாகச் சமைத்துப் படைத்தளிக்கும் கொடுஞ்செயலையும் புராணத்திலே படம் பிடித்துக்காட்டுகின்றார் சேக்கிழார். இதுதான் தமிழர் சமயமாம்! அந்தோ! இக் கொடு நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கின்ற போன்பப் பேற்றைவிட இப்பிறவிப் பெருங்கடலில் என்றென்றும் வீழ்ந்து அலையலாம்!

"நன்றாகு மாக்கம் பொதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை" (திருக்குறள், கொல்லாமை-8)

என்பது தமிழ் மறை.

இப்பொதுமறையின் வழித்தோன்றலாகிய கோவலன், தன் மகள் மணிமேகலைக்குப் பெயாடும் விழா நடத்தித் தானம் வழங்குகையில், ஒரு வயோதிக அந்தணனை மதமேறிய யானை கைக்கொண்டது கண்டு விரைந்தோடி, யானையின் சினத்தை அடக்கி, அந்தணனைக் காப்பாற்றினான். இவ் வீரச்செயலை மாடலன், "கடக்களி றடக்கிய கருணை மறவ" எனப் போற்றுகிறான் (2:15:53). 'கருணை மறவ' என அழைத்தமைக்குக் காரணம், அந்தணன் உயிரைக்காத்ததற்கு மட்டுமன்று; யானையின் உயிருக்கும் ஆபத்தின்றி மத மடக்கிய வீரச் செயலை பாராட்டவுமாகும்!

கபாலிகம்

இதே போன்ற நிகழ்ச்சி பொய புராணத்தில் கொலையில் முடிந்திருக்கின்றது. எறிபத்த நாயனார் முதலானோரின் கதைகளில் அருளறம் இடம் பெறவில்லை. இந்நிலை காபாலிகமும் வாமமும் தமிழகத்தில் நுழைந்து பக்தி இயக்கம் வளர்ந்ததன் விளைவேயாகும்.

அப்பரும், சம்பந்தரும் தங்கள் தேவாரங்களில்,

"சவந்தாங்கு மயானத்துச் சாம்ப லென்பு
தலையோடு மயிர்க்கயிறு தாத்தான்தன்னை"
"கார்க்கெடிலுங் கொண்ட கபாலி போற்றி"
"கமழ் வீரட்டானக் கபாலி யடி"
"கண்ணார் நுதலார் கரபுரமுங் கபாலியாரவர்தங் காப்புக்களே"
"கடியதோர் விடையேறிக் கபாலிகர்"
"வெண்தலை மாலைதாங்கி"
"கண்ணுதற் கபாலியர்"
"ஒன்றியூர் உறைவானோர் கபாலியே"
"மாண்டார்தம் எலும்பணிவார்"
"கண்ணப்பர் பணியுங் கொள் கபாலியே"
"உண்டு ழன்றது முண்டத் தலையிலே"

என காபாலிகத்தையே பாராட்டிப் பாடியுள்ளார்கள்.

காபாலிகமும், வாமமும் தத்துவ நெறிகாணாத மார்க்கங்கள். கள் குடிப்பதும், ஊனுண்பதும், காமந்துய்த்தலுமே கொள்கைகளாகக் கொண்டவைகள். அவைகளை இங்கு விளக்க உள்ளமும் கூசுகின்றது. ஆகவே, ஆரிய சமாஜத் தலைவர் தயாநந்தசரஸ்வதி அவர்கள் எழுதிய 'சத்தியார்த்தப் பிரகாசி' என்னும் நூலில் படித்தறிந்து கொள்ளலாம். காபாலிகம், வாமம், வைரவம், பாசுபதம், காளாமுகம் ஆகிய ஐந்து சமயங்களும் சேர்ந்ததே சைவ சமயம் என்பது. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் காபாலிகத்தைத்தான் பாடியுள்ளார்கள். அதனாற்றான் அப்பர் ஊன் உணவை ஆதாத்துப் பல பாக்களைப் பாடியுள்ளார்.

"ஊனிகந் தூணுறிகையர் குண்டர் பொல்லா
ஊத்தைவாய்ச் சமண ருறவாகக் கொண்டு
வானகங்சேர் வைரவத்தை நண்ணாத நாயேனை"

"கான நடு கலந்து திரியலென்
ஈனமின்றி யிருந்தவஞ் செய்யிலென்
ஊனையுண்டல் ஒழித்து வான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றி நன்கில்லையே"

என அப்பரும்,

"ஊனொடுண்டல் நன்றென
ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால்
பேசநின்ற தன்மையான்"

எனக் கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்கு அளித்த புலாலுணவை ஆதாரங்காட்டித் திருஞானசம்பந்தரும் தேவாரத்தில் பாடியுள்ளார்கள்.

இத்தகைய காபாலிகமும் வாமமும் வைரவமும் பரவி, கள் குடித்தல், போகந் துய்த்தல், புலாலுண்ணல் ஆகியவற்றை மதத்தின் பெயரால் புகுத்தி வரவே, பல்லவ மன்னனான மகேந்திர பல்லவன் 'மத்தவிலாச பிரஹசனம்' என்னும் நாடகத்தை இயற்றி, நாடெங்கும் நடத்தி அம் மதங்களைக் கண்டித்து வந்தான். சைவ சமயாச்சாரிகள் பக்தியை வளர்த்தார்களேயன்றி ஒழுக்கத்தை வளர்க்கவில்லை. இவ் வுண்மையை உயர்திரு. E.N. தணிகாசல முதலியார் அவர்கள் 'அப்பர் வரலாறு' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில், 'ஊனுண்ணாமையை இன்றியமையாத தென நஞ்சைவ சமயாச்சாரிகள் மொழியவில்லை' என்று பல மேற்கோள்களுடன் 1929-ஆம் ஆண்டு ஜனவா மாத 'கலாநிலை'யத்தில் எழுதியிள்ளதாலும் அறியலாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழர் சமயம் அருளறத்தின் வழி வளர்ந்து வந்துள்ளது. இவ் வுண்மையைத் தொல்காப்பியத்தின் வாயிலாகவே யாம் முன்னரே அறிந்துள்ளோம்.

இத்தகைய அன்பு நெறிக்கு மாறாகக் காபாலிகம் முதலிய கொள்கைகள் இங்குள்ள வேளாளர்களையும் வணிகர்களையும் மத மாற்றம் செய்துவிட்டன. இது திருஞானசம்பந்தர் கால முதலேயாகும். தமிழ் நாட்டிலுள்ள வணிகர்களும் வேளாளர்களும் தனித்தன்மை வாய்ந்த ஜைனர்கள். அருள் நெறியில் சிறிதும் பிறழாதவர்கள்.

"பகட்டி னானும் ஆவி னானுந்
துகட்டபு சிறப்பின் சான்றோர் பக்கமும்,." (தொல்காப்பியம், புறத்திணையில், 17)

என்னும் வாகளுக்கு விளக்க உரை எழுதிய இளம்பூரணர், 'பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார் வணிகர். இவ்விரு குலத்திலும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் சான்றோர்கள் அருளான் மிக்க நீர்மையராதலின்' என அழகாக விளக்கியுள்ளார். எனவே, இவ் வணிகவேளாளர்கள் கி.பி.7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் மதம் மாற்றப்பட்டார்கள். அவர்கள் திருநீறு பூசிக்கொண்டு, சைவ சமயம் புகுந்தார்கள். அங்குச் சென்றும் அவர்களில் பலர் புலாலுண்ணாதவர்களாகவே வாழ்கின்றார்கள்.

"செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரிற் றலைப்பிரிந்த ஊன்" (திருக்குறள், புலால் மறுத்தல். 8)

என்னுந் தமிழ் மறைக்கொள்கையில் நின்றவர்கள் எவ்வாறு மாற வியலும்? அதனாற்றான் சைவ சமயத்தில் புலாலுண்ணாதவர்களும் புலாலுண்போரும் கலந்துகாணப்படுகிறார்கள். ஜைன சமயத்தவரும் நீறுபூசிய சைவ சமயத்தவரும் வதியும் பல கிராமங்களில், ஜைனர்களைப் பற்றிக் குறிப்பிடும் தொழிலாளிகள், வெள்ளாயர்கள் என்பார்கள். சைவ சமயத்தவரைக் குறிப்பிடுகையில் நீறு பூசி வெள்ளாயர்கள் என்பார்கள், இவ்விரு பிரிவுகளால் முதல் முதல் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் ஜைனர்களே என்பதும், அவர்களி; மதம் மாற்றபட்டவர்களே சைவர்கள் என்பதும் தெளிவாகின்றன. சிலவர் வைணவமாகவும் மாறிவிட்டார்கள். எனவே, தமிழகத்தின் பழைய சமயம் ஜைனம் என்பதை அறிந்து பகைமை உணர்ச்சியை மறந்து, அம் மதத்து நூல்களையும், சின்னங்களையும், சிற்பங்களையும் மாற்றாது மறைக்காது காப்பது தமிழர்கள் கடமையாகும். மேலும், ஜைன சமய நூல்களில் சிவன், விஷ்ணு, முருகன் முதலான தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். காய்தல் உவத்தலின்றி அவர்கள் எதையும் ஆராய்ந்து வெளியிடும் தனிப்பண்பு வாய்ந்தவர்கள். எனவே இளங்கோவடிகள் ஜைன சமயச் சான்றோராவர்.

 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com