முகப்பு வாயில்

 

இளங்கோ துறவி

மேலும், ஜைன சமயத்தில் துறவறம் மேற்கொள்ளவேண்டுமாயின், மற்றொரு ஜைன முனிவர்பால் துறத்தல் வேண்டுமென்பது துறவு நூல் முறையாகும். இக்கொள்கையைச் சீவக சிந்தாமணியில் விசயமாதேவி துறவு, சீவகன் துறவு; சூளாமணியில் பயாபதி மன்னன் துறவு முதலியவாற்றான் அறியலாம். எனவே, அரும் பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லாரினும் மேற்சென்று, கடவுளர் முன்னர்த் துறந்திருந்தாரென ஐயமற விளக்கிப் போந்தார். இதனால் சிலவர் ஐயுறுவது போன்று இளங்கோவடிகள் அரசை மட்டுந் துறந்தாரேயன்றி, உலகப் பற்றைத் துறந்த முனிவராக இல்லையென்றும் கருத்தும் மாய்ந்து விடுகிறது. இவ்வாறு சிலர் கருதக்கூடும் என்பதை யறிந்தே அடியார்க்கு நல்லார், "அடிகளென்றது துறத்தலான்" என்றும், "இளமைப் பருவத்தே இராச போகத்தைத் துறத்தலருமையால் துறந்தென்றும், அங்ஙனம் போகம் நுகர்ந்த விடத்தே மீட்டும் தவவுருத் தாங்கி யிருத்தல் அருமையான் இருந்தென்றும் கூறினார்" என விளக்கங்கொடுத்தார். இதனால் இளங்கோவடிகள் அரசையுந் துறந்தார், முனிவருமானார் என்பதே சாலவும் பொருத்தமுடையது. மேலும் தமது அண்ணனுக்கே அரசாட்சி நிலைக்கவேண்டுமென விரும்பும் இளங்கோவடிகள் துறவாது இல்லறத்தில் வீற்றிருப்பாராயின் நிமித்திகனின் சாதகப்படி, சூழ்நிலை மாறி இளங்கோவடிகளுக்கே பட்டம் வானும் வரலாம். எனவே, முற்றுந் துறந்து முனிவரானாலன்றி பட்டம் வகிக்குமுரிமை அகலாது. எனவே, முனிவரானரென்பதுதான் உண்மையாகும்.

சிலப்பதிகார உரையாசிரியர்கள் இருவரும் அறிவிற் சிறந்த பேராசிரியர்கள் என்பதை மறத்தல் கூடாது. அப்புலவர் பெருமக்கள் நூலாசிரியான் உட்கருத்தை அறிந்து எழுதும் ஆற்றல் படைத்தவர்கள் இவ் வாசிரியர்களுக்குப் பின்னர், பல பேராசிரியர்கள் இவ்வுரைகளை எழுதியும் படித்தும் வந்தார்கள். சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டுக்கு அருகிலுள்ள விசயமங்கலம் என்ற கிராமத்தில் தோன்றியவரும், ஜைன பிராமணராக இருந்தவரும், கார்மேகக் கவிஞரெனப் பட்டம் பெற்றவருமான ஜினேந்திரரா லியற்றப்பட்ட கொங்குமண்டல சதகத்தில், அடியார்க்குநல்லாரைப் பற்றிக் கூறும் கவியில்,

"குருவை யுணர்ந்த விளங்கோ வடிக ளுட்கொண்டு சொன்ன
தருவை நிகருஞ் சிலப்பதி காரத் தனித்தமிழ்" (கொங்குமண்டல சதகம், 95)

என இளங்கோவடிகளைச் சிறப்பிக்கின்றார். கொங்கு மண்டல சதகத்தைப் பதிப்பித்தவரும், விவேக திவாகரன் பத்திராதி பருமான திருச்செங்கோடு அறிஞர் உயர்திரு. தி.அ.முத்துசாமிக் கோனார் அவர்கள் மேலே கூறப்பட்ட இக்கவிக்கு, "தீர்த்தங்கரர் நிலையை நன்குணர்ந்து துறந்த இளங்கோவடிகள்" என்று விவாத்துள்ளார்கள்.

மகாமகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் சிலப்பதிகாரத்தை முதல் முதலில் ஏட்டுப் பிதியிலிருந்து அச்சேற்றித் தமிழுலகிற்குத் தந்தார். சீவகசிந்தாமணியை அச்சிட முயன்றபோது சமயக்காழ்ப்புக்கொண்ட சிலரால் அவர் பட்டபாடு நம்மையும் திடுக்கிடச் செய்கின்றது. அத்தகைய இடுக்கண் இடையே சிலப்பதிகாரத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள். ஜைன நூல்களை அச்சிடுவதால் உண்டாகும் எதிர்ப்புக்கு அஞ்சி, அடியார்க்குநல்லாரும் அரும்பதவுரையாசிரியரும், கொங்குமண்டல சதக ஆசிரியரும் இளங்கோவடிகளை ஜைன அறவோர் என்று அறுதியிட்டுக் கூறியவற்றையறிந்தும், ஐயரவர்கள்,

"இவருக்கு அடிகள் என்று பெயர் வந்திருத்தலைக் கொண்டும் பதிகத்தில் 'குணவாயில் கோட்டத்து' அரசு துறந்திருந்த என்பதில் கோட்டம் என்பதற்கு 'அருகன் கோயில்' என்று அடியார்க்குநல்லார் பொருள் செய்திருத்தலைக் கொண்டும், இந்நூலிற் சில இடத்துச் சைனமதக் கொள்கையை இவர் மிகுத்துச் சொல்லி இருத்தலைக் கொண்டும் இவரது சமயம் சைனமென்று கூறுவாரும் உளர்"

என எழுதிப் போந்தார்.

இந்த வாசகத்தை நாம் ஊன்றிக் கவனித்தால் ஐயரவர்கள் அக்காலச் சூழ்நிலையை உத்தேசித்தே இவ்வாறு எழுதியுள்ளார் என்பது தெளிவாகும். அடியார்க்குநல்லார் உரையையும், அரும்பதவுரையாசிரியர் விளக்கத்தையும், கொங்குமண்டல சதகத்தையும் எத்துணையோ உரை ஆசிரியர்கள், புலவர்கள் படித்து இன்புற்று வந்தார்கள். அவ்வுரையாசிரியர்கள் கருத்துப்படி இளங்கோவடிகள் ஜைனரே என்று பல பேராசிரியர்கள், வழி வழியாக எழுதியும், பேசியும் வந்திருப்பது மறக்கற்பாலதன்று.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவரும் சொல்லின் செல்வருமான டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய சிலப்பதிகார விளக்கம் எனும் நூலில்,

"ஆசிரியர் தமது நூலின் சைவ சமயத் தெய்வங்களாகிய சிவபெருமானையும், ஆறுமுகப் பெருமானையும், வைணவ சமய தெய்வமாகிய திருமாலையும் நிறைந்த சொற்களால் புகழ்ந்து வாழ்த்தினாலும், சமண சமயக் கொள்கைகளையே விளக்கமாகவும், விரிவாகவும் கூறியிருக்கின்றார். கோவலனும், கண்ணகியும் புகார் நகரத்தினின்றும் புறப்பட்டு மதுரை மாநகரம் சேரும் வரையில் அவர்கள் நடந்த வழிகளையும், கடந்த காடுகளையும், விரிவாகக் கூறும் பகுதியில் அவ்விருவருக்கும் வழித் துணையாக வந்து அருள் செய்கின்ற பொயோரெல்லாம் அருக சமய ஆன்றோர்களாகவே விளங்குகின்றார்கள். புகார் நகரினின்றும் ஒரு காதவழி நடந்ததும் கவுத்தி அடிகள் என்னும் சமண சமயப் பொயார் தோன்றுகின்றார். இவர் இருவருக்கும் துணையாய் மதுரை மாநகர் வரை செல்கின்றார். இம் மூவரும் செல்லும் வழியில் அறஞ்சாற்றும் அருக சமய சாரணர் தோன்றுகின்றார். அருகக் கடவுளைப் போற்றிப் புகழ்கின்றார். பின்னர், வழி முழுவதும் நடந்து மதுரை மாநகரம் சென்று, ஆயர்சோயில் கண்ணகியை மாதா என்னும் இடைக்குல மாதிடம் அடைக்கலமாகக் கொடுக்கும்போது, அங்கும் செவ்விய மேனியுடைய வானவன் ஒருவன் வந்து நிற்கிறான். அவனும் அருக சமய உண்மைகளையும், மந்திரத்தின் திறத்தினையும் எடுத்துரைக்கின்றான். இவ்வாறு கதை நிகழ்வதற்கு இடமில்லாது நாயகனும் நாயகியும் வழிநடந்த பகுதியைச் சொல்லவந்த இடமே தமது சமயக் கொள்கைகளை எடுத்துரைக்க ஏற்ற இடமெனத் துணிந்து அவ்வாறே ஆசிரியர் சமண சமயக் கொள்கைகளை விவாத்துரைத்தார். இன்னும் சமண சமயத்தின் அடிப்படையான கொள்கைகளை ஆசிரியர் தமது நூலின் முடிந்த முடிபாக அறுதியிட்டுக் கூறுகின்றார்."

என்று விளக்குவர். இவ்வாறு பல அறிஞர் பெருமக்கள் இளங்கோவடிகளைச் சமயச் சார்பற்ற அறவோர் (ஜைனம்) வழிவந்தவர் என முடிவு கட்டிய பின்னரும், சிலர், இளங்கோவடிகள் சைவ சமயத்தைச் சார்ந்தவர் எனக் கூறுவது வியப்பாக இருக்கின்றது. இது சமயக் காழ்ப்பும் காவியத்தின் பாலுள்ள காதலுமே யாகும். இதற்காக நடுநிலைமை தவறிப் பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர். இவர்கள் கூற்றை மெய்ப்பிக்க அகச்சான்றுகளும் இல்லை. இளங்கோவடிகள் தமது அறநெறிகளை (ஜைனம்) ஆங்காங்கு விளக்கிக் கூறுவன போன்று, மற்ற சமயக்கொள்கைகளை எங்கும் விளக்கிச் சென்றாரில்லை. அவர் காலத்தில் விளங்கிய சைவ, வைணவ, பெளத்த சமயங்களையும், அவர்கள் வழிபடும் தெய்வங்களையும், அந்தந்த சமயத் தலைவர் வாயிலாகப் புகழ்ந்து போற்றினாலும், அவர்கள் கொள்கைகளில் ஈடுபாடுகாட்டவில்லை. வேட்டுவர் வாயைப் படித்தால், வேடுவர்கள் கூடத் தங்கள் வழிபாட்டின் பெருமையை அவ்வளவு அழகாக எடுத்துக்கூறவியலாது என்பதை அறியலாம். அதனால், அவர் வேடுவராகி விடமாட்டார். அது போன்றே தமது கொள்கைகளை நன்கு விளக்கி, ஏனைய கொள்கைகளைக் கண்டித்துச் செல்வதைச் சிலப்பதிகாரம் முழுமையுங் காணலாம்.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவிபா லிருந்த போது, கண்ணகி தான் கண்ட கனவைக் கூறி வருந்தினதைக் கண்டு, தேவந்தி என்னும் பிராமணத் தோழி,

"கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக்
கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றின்
மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள
சோமகுண்டஞ் சூரிய குண்டத் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின்புறுவ ருலகத்துத் தையலார்
போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநா
ளாடுது மென்ற வணியிழைக்கவ் வாயிழையாள்
பீடன் றெனவிருந்த பின்னரே"

"பொற்றொடீஇ! நீ கண்ட கனாக்கொண்டு வருந்தவேண்டா; நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமில்லை; நின் கணவன் காரணமாக ஒரு நோன்பு முற்பிறப்பிலே தப்பினாய்; அதனால் உள்ள தீங்கு மிக்கன; இத் தீங்கு கெடுவதாகக் காவிரி தன் நீரைக் கொண்டு சென்று கடலொடு எதிர்த்து அலைக்கும் சங்க முகத் தயலதாகிய நெய்தற் கானலிடத்து இரண்டு தடாகமுள்ளன; அவை யாவை எனில் சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பெயரையுடையன; அவற்றின் துறைகளில் மூழ்கிக் காமவேள் கோட்டத்திற்புக்கு, அவனைத் தொழுதாராயின், அவர் இப்பிறப்பிலுள்ள நாளெல்லாம் தம் கணவரோடும் பிரிவின்றியிருந்த இவ் வுலகத்து இன்பமுறுவர்; மறுமைக்கும் போக பூமியிலேயும் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி மூன்று பல்லங்காலம் இன்பம் நுகர்வர் ஆதலான அவற்றை யாமும் ஒரு ஞான்று ஆடக் கடவே" மென்று சொன்ன தேவந்திக்குக் கண்ணகி, "அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந்தொழுதல் எங்கட்கு இயல்பன்று" என்று கூறி விடுகின்றாள். (சிலப்பதிகாரம், 9:55-64)

வைதிக மறுப்பு

இங்கே இரண்டு கொள்கைகளைக் காண்கின்றோம். ஒன்று நமது துன்பங்கள் அகல, துறைமூழ்கித் தெய்வந்தொழுதல். மற்றொன்று அது இயல்பன்று என மறுத்தல். தேவந்தியால் கூறப்பட்டது வைதிக சமயக்கொள்கை. இவ் வேற்றுமையைக் கண்ணகிவாயிலாகவே, 'பீடு அன்று' என விளக்குகின்றார் இளங்கோவடிகள்.

ஜைன சமயம் ஊழ்வினையை வலியுறுத்துவது. அதை 'ஊழிற் பெருவலி யாவுள' என்னும் குறளாலும் (38:10), 'ஊழ்வினை வந்து உருத்தது' என்னும் சிலப்பதிகார அடியாலும் (7:52:4) அறியலாம். கண்ணகி தான் பிறந்த ஜைன சமயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவள். தன் கணவரைப் பிரிந்தமைக்குத் தனது வினையே கரணம் என்பதை அறிந்தவள். அவ் வினையைத் துறை மூழ்குவதாலும் தெய்வந் தொழுவதாலும் அகற்ற இயலாதென்னும் இயல்பினையும், அக்கொள்கை உலக மூடம் என்பதையும் நன்கு உணர்ந்தவள். மேலும், கற்புடைய பெண்கள் தம் கணவரைப் பிரிந்திருக்கையில் வெளியில் செல்ல மாட்டார்கள். அத்தகையவர்கள் காமன் கோட்டம் செல்வார்களா?

"காமனை என்றும் சொல்லார்
கணவற் கைதொழுது வாழ்வார்"

என்பது சீவக சிந்தாமணி. (சீவக சிந்தாமணி, 1598)

இவ்வாறே கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, வழியில் ஒரு மறையோன் எதிர்ப்படுகின்றான். அவனை மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவனும் தேவந்தியைப் போன்று வைதிக சமயத்தைச் சார்ந்தவன். எனவே, அம் மறையோன் வழிகளைக் கூறி வருகையில், அழகர் மலையைக் காட்டி, அங்குள்ள பிலம் தேவர்களால் ஏத்தப்படுதலின், யாவரும் வியத்தற்குரிய புண்ணிய சரவணம், இட்டசித்தி, பவகாரணி என்னும் மூன்று பொய்கையில் மூழ்குமாறும், அதனாலுண்டாகும் பயனையும் விளக்கிக் கூறினான். இதனைக் கேட்ட கவுந்தியடிகள்,

"நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணா
யிறந்த பிறப்பி னெய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்
கியாவது முண்டோ வெய்தா வரும்பொருள்
காமுறு தெய்வம் கண்டடி பணிய
நீபோ யாங்களும் நீணெறிப் படர்குதும்" (சிலப்பதிகாரம், 2:11:152-161)

என்றார். இதனால் வைதிக சமயக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாது வெறுப்பதைக் காண்கிறோம். இவ்விரண்டையும் ஆராயின் இளங்கோவடிகளைச் சமணரென்பதா? சைவ சமயத்தவரென்பதா? இங்கே வைதிக சமயக் கொள்கையை அன்றோ கண்டித்தார் என்று கூறலாம். வைதிக சமய வேதங்களையும் அதன் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் சைவ சமயத்தின் மரபு என்பதை யாரும் மறுக்க இயலாது. 'வேத வேள்வியை நிந்தனை செய்தவர்' 'வைதிகத்தின் வழி ஒழுகாதவர்' எனத் திருஞானசம்பந்தரும், 'வேதநெறியும் சைவ நெறியும் தழைக்க' எனச் சேக்கிழாரும் தங்கள் தங்கள் நூல்களில் பாடியுள்ள பாக்களால் இவ் வுண்மைப் புலனாகும்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com