முகப்பு வாயில்

 

அறம்

"இளங்கோவடிகள் சமயம்" என்னும் தலைப்பைக் கண்டதும் சிலருக்கு விருப்பு உண்டாகும். இளங்கோவடிகளது சமயத்தை அறிந்துகொள்ள இந்நூல் துணைபுரியமெனச் சிலர் எண்ணவும் கூடும். ஆனால், உண்மையில் இளங்கோவடிகளைச் சமயவாதியாகவோ மதவாதியாகவோ காட்ட நான் விரும்பவில்லை. தமிழகத்தின் பண்டைய வரலாற்றை அறிந்துகொள்ளவும், சமயம், மதம் என்ற பெயரால் அமையாமல், அறம், அறம் என உலகை நோக்கிப் பேசும் பொதுநெறி கொண்ட தமிழ் நூற்களை அறிமுகப்படுத்தவுமே, இவ் வாராய்ச்சி நூலை எழுதலானேன்.

தமிழகத்தின் பண்டை வரலாற்றை எண்ணும்போது, தொல்காப்பியம் நம் கண்ணெதிரே வந்து நிற்கின்றது. இன்றுவரை நமக்குக் கிடைத்துள்ள பண்டைய நூல்களுள் தொல்காப்பியமே தொன்மை வாய்ந்ததாகும். எனவே தொல்காப்பியத்தினின்றே இளங்கோவடிகளின் கொள்கைகளை அறிய வேண்டும்.

தொல்காப்பியத்தில், நான்கு மறைகள், அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கின் அடிப்படையில் அமைந்த இல்லறம் துறவறம், நிலையாமைக் கொள்கை, அருளறத்தின் மேன்மை, உடல் வேறு உயிர் வேறு எனும் தத்துவம், நல்வினை தீவினையாகிய ஊழ் வினைகள், ஆறறி வுயிர்கள், வினையின் நீங்கி விளங்கிய அறிவன், உலகம் இயற்கை யெனும் உண்மை, அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் எனத் தொழில் முறையால் அமைந்த நான்கு பிரிவுகள், வேள்வி, பார்ப்பான், ஐயர், இந்திரன், தேவர்கள் ஆகியன பலவும் பேசப்படுகின்றன. இவை யாவும் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்ட முதல் நூல்' வழி வந்தவை என்னும் வரலாற்றையுங் காணலாம்.


நான்மறை

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வரும் நான்மறைகளை ( 'அறங்கரை நாவின் நான்மறை முற்றிய' - தொல்காப்பியம், பாயிரம் ) ஆராய்வோம். இந்நான்கு மறைகளும் வைதிக சமயத்தவர் கூறும் இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் அல்ல. இவ் வேதங்களுக்கு எல்லாம் தொன்மை வாய்ந்தவை தொல்காப்பியர் கூறும் நான்மறை. இக் கருத்தைத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களுள் ஒருவரான நச்சினார்க்கினியர், 'இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என்பாரும் உளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேத வியாதர சின்னாள் பல்விணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தார்' என விளக்கியுள்ளார் தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், நச்சினார்க்கினியர் உரை. எனவே தொல்காப்பியம் கூறும் முதல் நூலாகிய மறைகள் வேறு என்பதும், அம் மறைகள் இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு மறைகளுக்கும் முற்பட்டவை என்பதும் தெளிவாகின்றன. வைதிக வேதங்களுக்கு முன்னே நான்கு மறைகள், இருந்தமை பின்வரும் நூல்களாலும் உறுதிப்படுகின்றன.

"வினையின் நீங்கி விளங்கிய ஞானத்துஓர்
முனைவன் இன்மையி னான்முத நூலில்லை
அனைய மாண்பினது ஆகமம் ஆதலான்" (நீலகேசி, 862)


"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை" (திருக்குறள், கொல்லாமை, 2)

"கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு இயற்கை விளங்கக் காணாய்" (சிலப்பதிகாரம், 2: 11: 154-155)

"ஆதி வேதம் பயந்தோய் நீ" 6 (சீவகசிந்தாமணி, 1242)

"ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை" (சூளாமணி, 214)

"நான்மறை நூல் மொழிந்தவரே" (திருக்கலம்பகம், 75)

"ஏதங்கள் நீங்க எழிலினம் பிண்டிக்கீழ்ப் - புறாவே
வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல் புறாவே"
(யாப்பருங்கல விருத்தி, சூத்திரம், 68 மேற்கோள்)

"நான்மறை யாள மும்மதிற் கிழவ" (யாப்பருங்கல விருத்தி, சூத்திரம், 68 மேற்கோள்)

"இனையவாம் விமலனார் கணத்து நாதராய்
வினையெலாம் அறஎறி வேத நான்கினை
மனைதுற வாணருக்கு ஓதி" (மேருமந்தர புராணம், 1356)

"ஆதி வேதத்து அகவயின்" (பெருங்கதை, 3:1:86)

இவை போன்று சூடாமணி நிகண்டு, யசோதர காவியம், சீவசம்போதனை, நன்னூல், திருநூற்றந்தாதி, ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் முதலான ஜைன நூல்கள் நான்மறைகளைப் பற்றியும் அவைகளைத் தோற்றுவித்த பெருமகனைப் பற்றியும் போற்றுகின்றன.

இந்நான்கு மறைகள் அல்லது முதல்நூல் வழி அமைந்த இல்லறம் துறவறங்களை ஆராய்வோம்.

"காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" (தொல்காப்பியம், கற்பியல், 51)

இல்லறம்

இச்சூத்திரத்தில், இல்லற இன்பங்களைப் பூரணமாகத் துய்க்க வேண்டும் எனவும், பின்னர் கிழவனும் கிழத்தியும் துறவறத்திற்கான ஒழுக்கங்களை இல்லறத்திலேயே பயில வேண்டும் எனவும் விளக்கப்பட்டுள்ளன. இதனால் இல்லறமே துறவற நெறிக்குத் துணைசெய்வது என்பது பெறப்படுகின்றது. இல்லறம் இரும்புச் சுரங்கம். துறவறம் பொன் சுரங்கம். பொன் சுரங்கத்தினின்றும் பொன்னை எடுக்க வேண்டுமாயின் இரும்பு இன்றியமையாதது. இரும்பு இல்லாமல் பொன்னை எடுக்க இயலாது. எனவே, இரும்புச் சுரங்கத்தினின்றும் இரும்பை எடுத்துப் பண்படுத்திக்கொண்டு பொன் சுரங்கத்தில் இறங்க வேண்டும். அது போன்றே துறவறம் மேற்கொள்ள விழைவோர் வயது முதிர்ந்த பின்னர் - அதாவது இல்லற இன்பங்களைத் துய்த்த பின்னர் - இல்லறத்தினின்றே சிறந்தது பயிற்றல் வேண்டும். அதாவது, பிரம்மச்சாயம், உணவு, சுவை குறைத்தல், பட்டினி நோன்பு இயற்றல், உழவு, வாணிபம் முதலான குடும்பத் தொழில்களில் ஈடுபடாதிருத்தல், இன்னான் இனியான், என்றி

ராமல் யாவாடத்தும் அன்புடன் பழகுதல் போன்ற நெறிகளைப் போற்றுதலாம். இவைகளும் இல்லற நெறிகளென்றே கூறப்பட்டுள்ளன. இத் துறைகளில் வெற்றி பெற்றவர்களே துறவறம் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையவர்கள். இல்லையேல் இல்லற நெறியிலேயே நின்று விடலாம். இதனேயே,

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்" (திருக்குறள், இல்வாழ்க்கை, 6)

என்றார் நமது தமிழ் மறை யாத்தப் பொயார். ஏனெனில், இல்லறம் எனில் ஒருவன் மனைவி, மக்கள், சுற்றம், செல்வத்துடன் வாழ்வது மட்டுமன்று; அதற்கேற்ற பண்புகளும் அமையப் பெறுதலாம். தொல்காப்பியம்,

"கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை யானும்
இடையில் வண்புகழ்க் கொடைமை யானானும்
பிழைத்தோர்த் தாங்கும் காவ லானும்
பொருளொடு புணர்ந்த பக்கத் தானும்" (தொல்காப்பியம், புறத்தினை இயல், 17)

என்றார். இவ் வாகளை இளம்பூரணர் நன்கு விளக்கியுள்ளார். "இல்லறத்திற்கு உரித்தாக நான்கு வருணத்தாருக்குஞ் சொல்லப்பட்ட அறத்தின் கண் நிற்றல், அவை யாவன : அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நடுவு நிலைமை, வெகாமை, புறங்கூறாமை, தீவினை அச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை, என்பன". எனவே, இல்லறம் ஆத்மீகத் துறைக்கு அடிகோலும் போடமாகும். இதனாற்றான் இல்லற நெறி தவத்திற்கொப்பாகவும் போற்றப்பட்டுள்ளது.

"நற்றவம் செய்வார்க்கிடம் தவம் செய்வார்க்கு மதிடம்" (சீவக சிந்தாமணி, 77)
எனத் திருத்தக்க தேவரும் விளக்கியுள்ளார்.

துறவறம்

மேலே கூறிய சூத்திரத்தின் தொடர்ச்சியாகவே துறவறம் கூறப்பட்டுள்ளது.

"அருளொடு புணர்ந்த அகற்சி யானும்
காமம் நீத்த பாலி னானுமென்று
இருபாற் பட்ட ஒன்பதின் துறைத்தே" (தொல்காப்பியம், புறத்திணை இயல், 17)

"அருளொடு புணர்ந்த அகற்சியும் - அருளொடு பொருந்தின துறவும், அதாவது அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு என்பனவற்றைப் பொருத்துதலாம்". (திருக்குறள், இல்வாழ்க்கை, 6)

அருளுடைமையாவது யாதானும் ஓர் உயிர் இடர்ப்படுமிடத்துத் தன்னுயிர் வருந்தினாற் போல வருந்தும் ஈரமுடைமை.

"அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள"

கொல்லாமையாவது யாதொன்றையும் கொல்லாமை.

"அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்"

பொய்யாமையாவது தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை.

"வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை யிலாத சொலல்"

கள்ளாமையாவது பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல்.

"களவென்னுங் காரறி வாண்மை யளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்" (திருக்குறள், கள்ளாமை, 7)

புணர்ச்சி விழயாமையாவது பிரமசாயம் காத்தல்.

"மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர்
நோக்கார்கொ னொய்யதோர்ப்புக்கில்லை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்" (நாலடியார், 41)

கள்ளுண்ணாமையாவது கள் உண்டலைத் தவிர்த்தல்.

"களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்" (திருக்குறள், கள்ளுண்ணாமை, 8)

துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்.

"யாதனின் யாதனி னீங்கியா னோதல்
அதனின் அதனின் இலன்" (திருக்குறள், துறவு, 1)

காமம் நீத்த பாலும் - ஆசையை நீத்த பக்கமும்.

"காமம் வெகுளி மயக்க மிசைமூன்ற
னாமங் கெடக்கெடும் நோய்" (திருக்குறள், மெய்யுணர்தல், 10)

என்பது இளம்பூரணர் உரை.

இவ்வாறு முற்றும் துறந்த முனிவர்கள் இயல்பையும் துறவின் இயல்பையும் கலங்கரை விளக்கம்போல் காணலாம். அருளொடு புணர்ந்த துறவறத்தின் இயல்பிற்குத் திருக்குறள் துறவுக்கொள்கையையும், நாலடியார் கொள்கையையும் மேற்கோள்காட்டித் தமிழர்தம் இல்லற நெறியையும் துறவற நெறியையும் நன்கு விளக்கியுள்ளார் தவத்தோர் இளம்பூரணர்.

 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com