முகப்பு வாயில்

 

ஜைன சமயம் துறவிகளுக்கு வகுத்துள்ள பல நெறிகளில் 'இரவில் பயணம் செய்யக் கூடாது' என்பது ஒன்று. இரவில் சிற்றுயிர்கள் கண்களுக்குப் புலப்படாதாகையால், அவைகள் நம் அடிச்சுவட்டில் மிதிப்பட்டு இறந்துபடு மென்பதால், பகலில் பயணம் செய்யுமாறு விதித்துள்ளது. கவுந்தியடிகள் ஆரம்பத்தில் கோவலன்-கண்ணகியைப் பகலிலேயே அழைத்துச் செல்கின்றார். வழிப் பயணத்தில் கண்ணகி படும் துயரத்தைக் கண்ட கோவலன் கவுந்தியடிகளை நோக்கி,

"கடுங்கதிர் வேனில்இக் காரிகை பொறாஅள்
படிந்தில சீரடி பரல்வெங் கானத்து
கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா
வாள்வா வேங்கையு மான்கண மறலா
வரவுஞ் சூரு மிரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கு நாடென
எங்கணும் போகிய இசையோ பொதே
பகலொளி தன்னினும் பல்லுயிர் ஓம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்." (சிலப்பதிகாரம் 2:13:3-13)

எனக் கூறுகின்றான். இவ் வுரையினைக் கேட்ட கவுந்தியடிகள் கண்ணகியின் பால் இரங்கி, கோவலன் வேண்டுகோளை ஏற்று, இரவிலே பயணம் செய்ய உடன் பட்டார். கவுந்தியடிகள் கண்ணகியின் துயர் கண்டு, தம் துறவுக்குரிய விதியைத் தியாகம் செய்துவிட்டார். அவாடம் தாய்மைப் பண்பு மேலோங்கிவிட்டதைக் காண்கிறோம்.

மேலும், கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி மூவரும் தங்கள் வழிநடையின் துயர் நீங்க ஓரிடத்தில் இளைப்பாற தங்குகின்றனர். அது போது, கோவலனும், கண்ணகியும் தனித்து சிறிது தூரத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர். அவ்வழியே வந்த வம்பப்பரத்தையும், வறு மொழியாளனும், கவுந்தியடிகளைக் கண்டு, கோவலனையும் கண்ணகியையும் காட்டி, காமனும் தேவியும் போன்ற அவர்கள் யாரெனக் கேட்டனர். கவுந்தியடிகள் பொதுமை எண்ணங்கொண்டு 'அவர்கள் என் மக்கள்' என்றார். கவுந்தியடிகளின் பொதுமை எண்ணத்தை அறியாது, 'உடன்-வயிற்றோர்கள் கணவன்-மனைவியாதல் உண்டோ?' எனக் கூறி நகைத்தனர்.

இத் தீ மொழி கேட்டு, கவுந்தியடிகள் தம் தவநிலையை மறந்து நீங்கள் 'முள்ளுடைக் காட்டில் முது நாயாக!' எனச் சபித்து விட்டார். இங்கே கவுந்தியடிகளுக்குக் கோபமும் பிறந்துவிட்டது. துறவுக்குரிய விதியை மீறி சாபமளிக்கும் ஆற்றலையும் உபயோகப்படுத்திவிட்டார். இதனால் கவுந்தியடிகளின் தவத்தின் பேராற்றலும் வெளிப்படுகிறது. எனினும், அவரைப் பெண்மையின் குணம் ஆட்கொண்டதை அறிகின்றோம்.

இம்மட்டுமா! மதுரையில் கோவலன் கண்ணகிக்கு நேர்ந்த கதியைக் கேட்டு, கவுந்தியடிகள் ஆறாத்துயரடைந்து 'சல்லேகனா' (வடக்கிருத்தல்) எனும் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிரையும் நீத்தார்.

திருவரங்கத்தில் காட்சியளித்த சாரண பரமேட்டிகள் கவுந்திஅடிகளின் அளவுகடந்த பாச உணர்வினை அன்றே தங்கள் ஞானத்தால் அறிந்து கவுந்தியடிகளை வாழ்த்தும்போது, 'பவந்தரு பாசங் கவுந்தி கெடுக!' எனக் குறிப்பால் உணர்த்தி எச்சாத்தனர். என் செய்வது? பெண்மையின் இயல்பு தவிர்க்கவொண்ணாதது அல்லவா? செயல்பட்டுவிட்டது! கேவல ஞானத் திருமொழி பொய்க்குமா?

பெண் பிறவிக்கு வீடுபேறில்லையெனும் கொள்கையை இளங்கோவடிகள் எவ்விடத்தும் கூறாது, கவுந்தியடிகளின் வழிப்பயணத்தில் கோவலன், கண்ணகிபால் அத் தவ மூதாட்டியார் வைத்துள்ள பாச உணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக, அந்த அறிவியல் தத்துவப் பேருண்மையை விளங்க வைத்துள்ளமையைக் காப்பியக் கருவூலக் கடலில் மிதந்து தெளிவோமாக!

ஜைனசமயத்தில் முதல் தீர்த்தங்கரரும், உலகிற்கே முதன் முதலில் எண்ணும் எழுத்தும் கற்பித்தவரும், சமுதாய முறைகளை வகுத்தவரும், இல்லறம் துறவறம் எனும் இரண்டு பேரறங்களையும் உபதேசித்தவருமான ஸ்ரீ விருடப தீர்த்தங்கரருக்குப்பின், உலகத்தில் தொண்ணூற்றாறு பாசண்டி மதங்கள் ஏற்பட்டனவென்று மாபுராணத்தில் விளக்கப்பட்டிருக்கின்றது. இக்கணக்கினை நமது இளங்கோவடிகள் கால்கோட் காதை 130-வது வாயில், "தொண்ணூற்றறுவகைப் பாசண் டத்துறை" எனக் கூறுகின்றார். திவாகரத்திலும், வளையாபதியிலும், முறையே இதனைக் காணலாம்.

"பாசண்டத் துறையு மிவற்றுள் பலவாம்
பேசிற் றெண்ணூற் றறுவகைப் படுமே" (திவாகரம், 12, பல்பொருட்கூட்டத்தொரு பெயர்த்தொகுதி)

"பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட
தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன்
விண்ணா றியங்கும் விறலவ ராயினும்
கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான்" (வளையாபதி, 71)

எனவே, இளங்கோவடிகள் ஜைனசமயக் கொள்கைகளை நுண்ணிதின் ஆராய்ந்து, சமயம் வந்துழி, அதனை விளக்கிச் செல்லுகின்றார். இளங்கோவடிகள் தமது சமயத் துறவிகளிடம் கொண்டுள்ள பக்தி அளவிடற்பாலதன்று. இதனை மெய்ப்பிக்கப் பல சந்தர்ப்பங்கள் இருப்பினும் கால்கோட் காதையில்,

"சடையினர், உடையினர், சாம்பற் பூச்சினர்" (சிலப்பதிகாரம் 3:26:225)

எனப் பிறரையும், தமது சமயத் துறவிகளை,

"பிடிகைப் பீலிப் பெருநோன் பாளர்" (சிலப்பதிகாரம் 3:26:226)

எனப் புகழ்ந்து, அவர்கள் துறவற நோன்பினை வியந்து போற்றுகின்றார். இதுபோன்றே கவுந்தியடிகளை மாதவத்தாட்டி, "புண்ணிய முதல்வி", "ஆசில் கொள்கை அறவி" "இருந்தவ முதல்வி" எனப் பலவிடத்தும் அவரது தவப் பெருமையைப் பக்தியுடன் வியந்து பாராட்டிச் செல்லுகின்றார்.

கவுந்தி அடிகளின் பெருமை

மாதவத்தாட்டியார் கவுந்தியடிகள் அறம் செறிந்த உள்ள முடையார்! கற்றறிந்த மேதை! ஜைன நெறிமுறைகளையும், தத்துவக் கோட்பாடுகளையும் துறைபோயக் கண்டவர்; அருளறம் பூண்ட மாண்பினை உடையவர்; ஆகாய சாரிகளான சாரண பரமேட்டிகளால் "கழிபெரும் சிறப்பிற் கவுந்தி காணாய்!" என விளித்துப் பாராட்டப் பெற்றப் புண்ணிய முதல்வி! இப்பெற்றிய பேரறிவும் பெருந்தவமும் பெற்று விளங்கும் கவுந்தி அடிகள் அடுத்தப் பிறவியில் வீடுபேறு அடையாவிடினும், அவர்தம் அருந்தவப் பயனால் விண்ணுலக தேவராகவோ மண்ணுலகில் மன்னர்குலத் திலகமாகவோ, உயர்குடியில் தலைசிறந்த நன்மகனாகவோ பிறவியெடுத்திருப்பாரென்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே இம்மாபெரும் கவுந்தியடிகளின் திருவடிகளை நாம் என்றும் மறவாமல் வணங்கி வாழ்த்திப் போற்றுவோமாக!

செங்குட்டுவன் சமணன்

சேரநாட்டு மன்னன் செங்குட்டுவன் சமயமும் சமணம் ஆகும். மாடல மறையோன் செங்குட்டுவனைச் சந்தித்ததையும், அவனைச் சமண சமய நெறியில் மறுபடியும் திருப்பியதையும் நாம் முன்னரே விளக்கினோம். மாடலன் செங்குட்டுவனை நோக்கிக் கூறிய அறங்களாலும் சில உரையாடல்களாலும் செங்குட்டுவன் சமய உண்மையைக் காணலாம்.

"வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கனும்
மறக்கள வேள்வி செய்வோய் ஆயினை" (சிலப்பதிகாரம் 3:28:129-132)

என்றான் மாடலன். இதனால் செங்குட்டுவன் அரசுரிமையை ஏற்றதன் பின்னர், தனது சமய நெறியில் ஈடுபடவில்லையென்பதும், அதற்கு மாறாகப் போர்க் கோலங் கொண்டு பல மன்னர்களை வீழ்த்தி அடிப் படுத்தும் செயலிலேயே ஈடுபட்டுள்ளான் என்பதும் பெறப்படுகின்றன. "அறக்கள வேள்வி செய்யாது" என்றதனால் அவன் அருளறத்தின் வழிவந்த வேள்வியாகிய பெரு நல்வேள்வியைச் செய்ய வேண்டியவன் என்பது தெளிவாகிறது. மேலும் மாடலன் அறவுரையில் நிலையாமைத் தத்துவங்கள், நாற்கதித் துன்பங்கள் ஆகிய அறநெறிகளை விளக்கிய பின்னர், இவைகள் யாவும்,

"பொய்யில் காட்சியோர் பொருளுரை"
என்றும்,
"பெருநல் வேள்விநீ செய்யல் வேண்டும்"

என்றும் கூறிமுடிக்கின்றான். இவைகளைச் செவியேற்ற மன்னன், மாடலன் வழி நிற்கின்றான். மாடலன் உரையில் பொய்யில் காட்சியோர் பொருளுரை என வருகின்றது. பொய்யில் காட்சியோர் எனில் நற்காட்சி, நன் ஞானம், நல்லொழுக்கமுடைய ஜைன அறவோர்களின் மெய்யுரை என்பதாகும். ஜைன சீலங்கள் ஐந்தில் பாமித பாக்கிரகம் என்பதொன்றாகும். அதாவது கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர் மனை நயவாமை, மிகு பொருள் விரும்பாமை என ஐந்தாகும். ஜைன அறநெறியில் பொருளாதார சமத்துவம் இன்றியமையாதது. பொருளாதாரம் நிலைகுலையும் இடத்தில்தான் களவு, வஞ்சனை, பொய், கொலை எல்லாம் நிகழ்கின்றன. எனவே, உலகில் அறம் நிலைபெற்று விளங்கவேண்டுமானால் மக்களிடையே பொருளாதாரம் நிலைபெற வேண்டும். எனவே பகவான் விருஷப தேவர் பஞ்சசீலங்களைப் போதிக்கையில் கொல்லாமையையும் மிகுபொருள் விரும்பாமையையும் தலையாய அறங்களாக வற்புறுத்தினார். இதனையே குறள் ஆசிரியர்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை" (திருக்குறள், கொல்லாமை 2)

என்றார். இக்கொள்கையை விளக்கிக்கூறவே வெகாமை என்னும் அதிகாரத்தை வகுத்துள்ளார் திருக்குறள் ஆசிரியர்.

"நடுவின்றி நன்பொருள் வெகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்" (திருக்குறள், வெகாமை, 1)

என்பதில் நன்பொருள் என்பது மிகுபொருள் என்றே பொருள்படும். நல்ல மழை பெய்தது, நன்றாக அடித்துவிட்டான் என்பது போன்றே நன் பொருள் எனில் மிகு பொருள் என்றே பொருளாகும். 'நன்று பொதாகும்' எனும் தொல்காப்பிய சூத்திரமும் (தொல்காப்பியம், உரியியல், 47) இதை வலியுறுத்தும். பாமேலழகர் பிறர் பொருள் எனப் பொருள்கொண்டது சமயக் காழ்ப்பேயாகும். நிற்க, மாடலன் உரையில் மதுக்கொள் கேள்வி வேட்டோனுயினும் எனக் காண்கின்றோம் 'மதுக்கொள்' வேள்வி என்பது வேத வேள்வியின் 'சோமயாகம்' என்பதாகும். இதனால் அளவுக்கு மீறிப் போர் தொடுத்து நாடு பிடிப்பதையும், கொலை வேள்வி, மதுக்கொள் வேள்வி ஆகியவற்றையும் விடுத்து, அவன் பெருநல் வேள்வி செய்தல் வேண்டும் என்பதையும் வற்புறுத்துகின்றான். இவைகளால் செங்குட்டுவனின் உண்மைச் சமயம் வெளியாகிறது. மற்றொரு மறுக்கவியலாத அகச்சான்றைக் காண்போம்.

ஜைன அறவோர்களான சாரண பரமேட்டிகளை நாடு காண்காதையில் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் வணங்கி அறங்கேட்டதைக் கண்டோம்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com