Ӹ š¢

 

வானுலகம்

இளங்கோவடிகள் தாம் பிறந்து வளர்ந்துள்ள ஜைனசமய மரபுக்கேற்ப ஜைன தத்துவ நூல்கள் பலவற்றையும் கற்றுக் கரைகண்டவர். அதன் பயனாகச் சிலப்பதிகாரத்தில் ஜைனத் தத்துவக் கொள்கைகளை ஆங்காங்கு தெளிவாகவும், விரிவாகவும் விளங்க வைத்துள்ள அரிய கருத்துக் கருவூலங்களைக் கண்டுள்ளோம். அருகப் பெருமானின் அருள் நெறிகளில் அப்பெருந்தகைக்குள்ள ஈடுபாட்டுணர்ச்சியால் அப்பேருரைகளை,

'பெருமகன் திருமொழி'
"ஞானத் திருமொழி"
"மெய்ப் பாட்டியல்"

என்றெல்லாம் உளமாரப் போற்றி உள்ளவற்றைப் புலவர் பெருமக்கள் படித்து இன்புற்றிருப்பார்களெனில் மிகை படக் கூறுவதன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த அறிவியல் தத்துவங்கள் பலவற்றில் மேலும் சில கொள்கைகளை ஆராய்ந்து இன்புறுவோம்.

நாம் மேலே கண்ட எட்டிப்பட்டம் பெற்ற சாயலன் மனைவி மகாமுனிகளுக்கு ஆகாரதானம் அளித்து வந்த பக்திப் பண்பினையும், அவனிடம் ஒரு முனிவர் அடைக்கலமாக ஒப்படைத்த குரங்கை அவள் தன் மக்களில் ஒன்றாகப் பேணி வளர்த்தக் கடமையையும் அறிந்தோம். அக் குரங்கு இறுதியில் தேவனாகப் பிறந்து, காட்சியளித்த மாட்சியினையும் கண்டோம். மகாமுனிவர்களுக்கு ஆகாரதானம் அளித்து வந்ததன் பயனாக, சாயலனும், அவன் மனைவியும் இறுதியில், "முட்டா வின்பத்து முடிவுலகெய்தினர்" (2:15:197) என்றார் இளங்கோவடிகள்.

இவ்வுலகம் வானுலகங்கள் பலவற்றிற்கும் உச்சியில் அமைந்துள்ளதால் வானுலகங்களின் முடிவு உலகமென்றார்.இவ்வுலகம் வானுலகங்களின் முடிவின் எல்லையாகக் காட்சியளிப்பது. வடமொழியில் சுவர்க்காதீதம் (சுவர்க்கத்தின் முடிவு) என்றே அழைக்கப்பெற்றுள்ளது. இளங்கோவடிகள் வடமொழியிலும் புலமைபெற்றவர் என்பதை இது மெய்ப்பிக்கிறது. இப் பேருலகம் இன்பமயமானது. இங்கே பிறந்தோர் இன்பவாழ்வு வாழ்பவர். இவர்கள் இன்பவாழ்விற்குத் தடையோ ஊறுகளோ உண்டாகா. அனைத்து இன்ப நலங்களையும் அளிக்கும் இயல்புடையது. வியக்கத்தக்க இவ்விண்ணுலக அற்புதங்கண்டே, இளங்கோவடிகள் இதனை 'முட்டா இன்பம்' என்றும், 'முடிவுலக'மென்றும் புகழ்ந்துள்ளார். இன்புனித உலகில் அடைந்தோரனைவரும் முற்பிறவியில் நற்றவம்புரிந்த நல்வினைமாட்சியர்.

ஜைன நான்மறைகளில் உலக அமைப்புக்களையும், இயல்புகளையும் பற்றி விளக்கிக் கூறுவது 'கரணானுயோகம்' எனும் மூன்றாவதுமறை, இம் மாமறையில், நாம் மேலே கூறிய முடிவுலகமெனும் வானுலகைச் சுவர்க்கலோகமென்று கூறப் பெற்றுள்ளது. இவ்வானுலகத் தேவர்களும் மற்ற உலக உயிர்களைப் போன்றே இறப்பும் பிறப்பும் உடையவர்களே.

வானுலகத் தேவராகப் பிறந்த எவரும் நேரே வீடுபேறடையவியலாது. மண்ணுலகில் மானிடராகப் பிறந்து வினைகளை வென்றுதான் வீடுபேறடைய வியலுமென்பது ஜைன தத்துவக் கோட்பாடு. இவ் அறிவியல் முறைப்படி நாம் மேலே கண்ட சுவர்க்கலோகத்தேவர்கள் மற்ற வானுலகர்களைவிடத் தனிச் சிறப்புடையவர்கள். இவ்வானுலகோர் ஏற்கெனவே இணையிலா நல்வினையுடையோராகையால் இவர்கள் வீட்டுலகம்பெறும் பக்குவமும் உறுதியுமுடையோராவர். எனவே, இத் தேவர்களின் ஆயுட்கால முடிந்து, மண்ணுலகில் மானிடராகப் பிறந்து ஆன்ம விடுதலை உணர்வோடு இல்லறவாழ்க்கை வாழ்ந்து, துறவறமேற்கொண்டு தூய தவ மேம்பாட்டுப் பயனால் வினைகளைவென்று வீட்டுலகம் நண்ணும் பேறுபெறுவர். இப்பெற்றிய இயல்பமைந்த முடிவுலகத்திற்கு மேலே எட்டாத தூரத்தில் வீட்டுலகம் அமைந்துள்ளது. திருக்குறளாசிரியர் தேவர்,

"யான்எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்" (திருக்குறள், துறவு)

என வீடு பேற்றிற் குரிய தத்துவத்தையும், வீடுபேற்றின் முகவாயையும் காட்டியுள்ளார். 'பாம்பறியும் பாம்பின் கால்' என்ற பழமொழிப்படி, ஜைன தத்துவ நுணுக்கங்களை ஜைன அறிஞர்களால் தான் அறிய முடியும். எனவே, இளங்கோவடிகள் ஜைன மறைகள், தத்துவங்கள் ஆகியவற்றை நன்கு கற்றறிந்த ஞானியாகையால், தானப் பயனால் அமையும் தேவலோகப் பதத்தை அறிந்து முடிவுலகமாகிய சுவர்க்கலோகத்தை அடைந்தனர் எனச் சுட்டினார்.

முடிவுலகம், வீட்டுலகம் ஆகியவற்றின் வேறுபாடுகளை ஆய்ந்து பாராக் குறைபாட்டால் சிலர் முடிவுலகை வீட்டுலகம் என மயங்கி சாயலனும், அவன் மனைவியும் வீட்டுலகை அடைந்தனர் எனப் பிழைபட எழுதியுள்ளதுமின்றி, சாயலன் மனைவி வீடுபேறு பெற்றதால், பெண் பிறவிகளுக்கு வீடுபேறில்லையெனும் ஜைன சமயக் கோட்பாட்டிற்கு இளங்கோவடிகள் முரண்பட்டுள்ளார் எனும் கருத்துப்பட எழுதியுள்ளனர். இனியாகிலும் இவர்கள் மேலே கண்ட விளக்கங்களை ஆய்ந்து, சாயலன் மனைவி பெற்றது வீடுபேறல்ல; சுவர்க்கலோகமே எனும் உண்மையை ஏற்றுத் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என நம்புகின்றேன்.

கவுந்தியடிகள் தவப்பெருமை

கவுந்தியடிகள் புகார் நகானின்றும் மதுரை மாநகர்வரை கோவலன், கண்ணகிக்கு வழித்துணையாக நின்று, ஆங்காங்கு அவர்கட்கு அறவுரையாற்றியும், சிற்றுயிர்க்கும் ஊறுநேரா வகையில் வழிகாட்டியும், துன்புற்ற உள்ளங்களுக்கு ஆறுதல் மொழி பகன்றும், அவர்களை அழைத்துச் சென்ற காட்சியைக் கண்டு களித்தோம். மதுரையை அடைந்ததும் கவுந்தியடிகள் அவ்விருவரையும் திக்கற்ற நிலையில் விட்டுப் பிரிய மனம் எழாமல், அவர்களை எவாடத்தேனும் பாதுகாவலாக விட்டுச் செல்லவேண்டும் என எண்ணியது அவர் பேருள்ளம். எண்ணியவாறே, எதிர்பாராவகையில் மாதா யெனும் ஒரு மூதாட்டியார் அங்கு வந்து கவுந்தியடிகளை வணங்கி நின்றார். அம் மூதாட்டியைக் கண்டதும், கவுந்தியடிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அம்மாதாயாருக்கு, கோவலன், கண்ணகியைக் காட்டி, அவர்கள் குலப்பெருமையையும், செல்வச் சிறப்பையும், நற்பண்புகளையும், குறிப்பாகக் கண்ணகியின் கற்பு மேம்பாட்டையும், அமைதியையும், அடக்கத்தையும் கூறி அவர்களை அடைக்கலமாக ஏற்குமாறு பணித்து அங்ஙனமே அவ்விருவரையும் மாதா பால் ஒப்படைத்து அனுப்பிய பொறுப்புடை மாண்பினையும், தவத்தோரின் மாசற்ற அருள் உள்ளத்தையும் கண்ணாடிபோல் காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இளங்கோவடிகள்.

பெண் துறவிகளும் வீடுபேறும்

பெண் பிறவிகளுக்கு வீடுபேறில்லை என்பது ஜைன சமயக்கொள்கை. இவ் அறிவியல் கொள்கையை ஜைன சமயம் நன்கு விளக்கியுள்ளது. பேடி, அலி போன்றதே பெண் பிறவியும், பெண்கள் துறவு பூண்டாலும் மனத்தை அடக்கி உடலை வருத்தி, துன்பம் பொறுக்கும் ஆற்றல் அவர்கட்கு அது மட்டுமல்ல, தங்களை அறியாமலே பந்தபாசமும் கொண்டிடுவர். அவர் பற்றற்ற நிலையைக் கடை பிடிக்க இயலாதவர். பொதுவாகத் துறவிகள் தங்கள் தவத்தின் ஆற்றலால் சபித்தல், கோபித்தல், பிறரை இகழ்தல், பொய் பேசுதல், மந்திர தந்தரம் செய்தல், அற்புதங்கள் நிகழ்த்துதல் ஆகியவற்றை அகற்றியவர்களாய் இருத்தல் வேண்டும். அவர்களே மெய்த்துறவிகள் ஆவர். பெண்துறவிகள் இளகிய மனமுடையவர்களாகையால் தங்கள் நிலையை மறந்து இக்கொள்கைகளை மீறிவிடுவார்கள். ஆகையால் பெண்களுக்கு வீடு பேறில்லை என ஜைனம் கூறுகிறது. இத்தகு அறிவியல் தத்துவத்தை அதாவது, பெண்களுக்கு வீடு பேறில்லை யெனும் கொள்கையை - தொல்காப்பியரும் நன்கு விளக்கியுள்ளதைப் புலவர் உலகம் நன்கறியும்.

எழுத்தெனப்படுபது
அகரமுத லனகரஇறுவாய் முப்பதென்ப
சார்ந்தவரல் மரபின் மூன்றலங்கடையே (தொல்காப்பியம், எழுத்ததிகாரம், 1)

என்பது (நுன்மரபு 1) சூத்திரம். ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங் கூர்க் கேள்வி இளம்பூரணரெனு மேதமின் மாதவத்தோர் தம் உரையில், 'னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதல் சிறப்பான் பின் வைக்கப்பட்டது' என விளக்கம் தந்துள்ளார். இவ்வாறு நச்சினார்க் கினியன் போன்றவரும் உரைவிளக்கம் தந்துள்ளனர். இதனால் பெண்களுக்கு வீடுபேறில்லை என்பது பெறப்படுகிறது. இவ் அறிவியல் கொள்கையை இளங்கோவடிகள் தமது காவியத்தில் விளக்கியுள்ளமையைக் காண்போம்.

 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

Ӹ š¢        www.jainworld.com