முகப்பு வாயில்

 

மாதாயின் மாண்பு

கவுந்தியடிகள், கோவலனை நோக்கி 'இப்புறஞ்சோ அறவோர் இருப்பிடம்; இல்லறத்தார் இருப்பிடமல்ல. ஆதலால் சூரியன் மறைதற்குள் மனைவியுடன் புறப்பட்டு, நகால் ஓர் இடம் பார்த்துக்கொள்வது நலம்' என்று சொன்னார். அப்பொழுது முதியோளான மாதா என்னும் ஆய்ச்சி அங்கே வந்தாள். அவள் வந்த வரலாற்றையும், அவள் சமயக் கொள்கைகளையும், அடிகள் வாயிலாகக் கேட்டு இன்புறுவோம்:

"அறம்புரி நெஞ்சி னறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர்ப் பூங்க ணியக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோ
ளாயர் முதுமகள் மாதா யென்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்
ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்கும்
கோவலர் வாழ்க்கையோர் கொடும்பாடில்லை
தீதிலள் முதுமகள் செவ்விய ளளியள்
மாதா தன்னுடன் மடந்தையை யிருத்துதற்
கேத மின்றென வெண்ணி னளாகி" (சிலப்பதிகாரம் 2:15:115-124)

இனி இவ்வடிகட்கு அடியார்க்குநல்லார் உரையைக் கவனிப்போம்:

"ஆயர்குலத்துப் பிறந்து மாதிரி யென்று கூறப்படுவோள் ஓர் முது மகள், பூப்போலுங் கண்ணையுடைய இயக்கிக்குப் பான்மடையேற்றி வழிபாட்டோடு வருகின்றவன், அறத்தைப் புரிந்த நெஞ்சினையுடைய அறவோர் பலராயிருக்கின்ற புறமதிற் பள்ளிக் கண் இருந்த கவுந்தியடிகளைக் கண்டு வந்து அடிதொழுதாளாகவென்க ஆவைக் காந்தோம்பி, அவ்வாவின் பயனை யாவர்க்கும் அளிக்கும் இந்த இடையருடைய இல்வாழ்க்கையில் ஒரு கொடுமைப்படும் இல்லை; அதன் மேலும் இவள் நமது உரை நெறியில் நிற்றலால் மனத்தில் அழுக்காறிலன்; அதுவுமன்றி முது மகள்; ஒளவிய மில்லாள்; அளிக்கும் தன்மையையுடையள்; ஆதலான் மாதாயிடத்தே இம் மடந்தையை அடைக்கலமாக இற்றைக்கு வைப்பதற்கு வரும் தீங்கு யாதுமில்லை யெனத் தன் மனத்தில் எண்ணினளாகி யென்க" (சிலப்பதிகாரம், திரு. சாமிநாதையர் பதிப்பு 1892, பக். 365-6)

இவ்வுரையில், "இவள் நமது உரை நெறியில் நிற்றலால் மனத்தில் அழுக்காறிலள்" எனக்காண்கிறோம். இதற்கு மூலத்தில் ஆதாரமிருக்கின்றதா? இருக்கின்றது. ஆனால், எல்லோருக்கும் விளங்குதல் அரிது. இளங்கோவடிகள் தமது காவியத்தில் தோன்றும் கதாநாயகர்களின் குணச்சிறப்புகளை விளக்கும்போது, அவரவர்களின் செயலாலும், தமது உரையாலும், வெளிப்படுத்துகின்றார். அதுபோன்றே இங்கேயும் மாதாயின் சமயத்தை அவள் செயலால் விளக்கியுள்ளார்.

"புறஞ்சிறை மூதூர்ப் பூங்க ணியக்கிக்குப்
பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதா யென்போள்
காவுந்தி யையையைக் கண்டடி தொழலும்,."

என்ற அடிகளில் அவள் சமயத்தைக் காணலாம். பெண் துறவிகளுக்கு (ஆர்யாங்கனைகள்) ஆகாரமளித்துப் பண்பிற் பெயர்வோள், கவுந்தியடிகளையும் தொழுகின்றாள். இதனால் ஜைன அறநெறியில் தோய்ந்தவள் என்பது சொல்லாமலே விளங்கும். மனச்சால்பறிதல் (Psychology) அடியார்க்குநல்லாரிடம் நிறைந்து காணப்படுகின்றது. "பாம்பறியும் பாம்பின் கால்" என்பது போல் இளங்கோவடிகளின் உட்கருத்தை நன்கு அறிந்த அடியார்க்குநல்லார் மாதாயின் செயலைக் கொண்டு, "இவள் நமது உரை நெறியில் நிற்றலால்" எனத் துணிந்து எழுதினார். உரை ஆசிரியர்கள் அடியார்க்குநல்லார்போன்று. கவிகளின் உட்கருத்தைப் படம் பிடித்துக் காட்டுபவர்களாக இருத்தல் வேண்டும். வாவாயாக உரை எழுதுவதால் பயன் விளையாது; உரையாசிரியரெனவுங் கொள்ளவியலாது. எனவே, அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், நூலாசிரியான் உட்கருத்தை ஆழ்ந்தறிந்து உரை எழுதிப் புகழ் பெற்றார்கள். அடியார்க்குநல்லார் உரையைப் பற்றி விளங்க விரித்துரைக்கும் சிறப்புப் பாயிரப் பாட்டுக்களில்,

"பருந்து நிழலுமெனப் பாவு முரையும்
பொருந்துநெறி யெல்லாப் பொருளும்-தொந்திப்
படியார்க்கு நல்லமிர்தம் பாலித்தா னன்னூல்
அடியார்க்கு நல்லான்என் பான்.

ஓருந் தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் றொத்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொரு
ளாருந் தொய விரித்துரைத்தானடி யார்க்கு நல்லான்
காருந் தருவு மனையான் நிரம்பபையர் காவலனே
காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்துக் கடியபெருங்
காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமக் காலமெனுங்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கெயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல் வித்ததே"
(சிலப்பதிகாரம், திரு. சாமிநாதையர் பதிப்பு, 1892, பக்கம் 6)

எனப் புகழ்ந்து போற்றப்பட்டுள்ளார். இக் காலத்திலும் சிலப்பதிகாரத்திற்குப் புதிய உரைகள் வந்திருக்கின்றன. அவைகள் நுண்ணிதின் ஆராயும் புலவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாயில்லை. உரையாசிரியர்களுக்குரிய சிறப்பும் அங்குக் காணோம். எனவே, அடியார்க்குநல்லாரின் உரைச் சிறப்பால் மாதாயும் ஜைன சமயத்தைச் சார்ந்தவள் என்பது தெளிவாகின்றது.

தானத்தின் பயன்

நமது கவுந்தியடிகளும் மாதாயின் குணநலன்களை நன்கறிந்தே கண்ணகியை அவ்வம்மையாரிடம் இருத்தலாம் என எண்ணி, கோவலன் கண்ணகி அவர்களின் குடிப்பிறப்பு, சிறப்புக்களை யெல்லாம் எடுத்துக்கூறி, கண்ணகியை அடைக்கலமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், தவத்தினர் அடைக்கலமாகத் தந்த பொருள் சிறதாயினும் போன்பமளிக்க வல்லது என்றும், அதற்குச் சான்றாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் நடந்த ஓர் உண்மை அறியத்தக்கது என்றும் சொல்லலுற்றார் :

"காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள்
பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல்
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட
இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன்
திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் றமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்
கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப்
பெருவிறல் வானவன் வந்துநின் றேனைச்
சாவக ரெல்லாஞ் சாரணர்த் தொழுதீங்
கியாதிவன் வரவென விறையோன் கூறும்" (சிலப்பதிகாரம், 2:15.151-162)

"எட்டி எனப் பட்டம் பெற்ற சாயலன் என்னும் தன வணிகன் பட்டினி நோன்புடைய மகாமுனிகளுக்கு வேண்டிய உபசாரங்கள் செய்து வந்தான். ஒரு நாள் மாதவ முனிவர் ஒருவர் அவன் வீட்டிற்கு வந்தார். சாயலன் இல்லாள் அவருக்கு ஆகாரதானமளித்தாள். அச் சமயம் பசியால் வாடிய ஒரு கருங்குரங்கு ஒதுங்கி ஓடிவந்து மாதவன் காலில் விழுந்தது. முனிவர் உண்ட எச்சிலையும், கை கழுவிய நீரையும் உண்டு பசி யாறியது. மாதவரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நின்றது. குரங்கின் இன்பச் செயலைக் கலங்கா உள்ளத்தராகிய அறிஞர் பார்த்து, "இக் குரங்கை உன் மக்களுக்குச் சமானமாகக் கருதிப் பேணுக" என்று சாயலன் மனைவியிடம் கூறிப் போந்தார். அவள் அவ்வாறே செய்தாள். குரங்கு நீண்ட நாள் அவளிடம் வளர்ந்து, இறந்தது. சாயலன் மனைவி அக்குரங்கின் தீவினை நீங்குக என்றெண்ணித் தான் செய்யும் தானங்களில் தனது மக்களுக்கு ஒரு பங்கும், அதற்கு ஒரு பங்கும் செய்தாள். அக்குரங்கு விலங்கு உருவம் நீங்கி வாரணாசியில் உத்தரகெளத்தன் என்னும் அரசனுக்கு மகனாகத் தோன்றி, அரிய பொயதான தருமங்களைச் செய்து 32-ஆம் வயதில் இறந்து ய்வ வடிவம் பெற்றது. சாயலன் மனைவி செய்த தவத்தாலல்லவா இவ்வாறு குரங்கு தேவசாரம் பெற்றது. அந்த நன்றியை உலகுக்கு அறிவித்துத் தானத்தின் பெருமையை விளக்கவே இத்தேவன் கருங்குரங்குக் கையுடன் விளங்குகின்றான்" என்றார். சிராவகர் தானத்தின் பெருமையை அறிந்து மகிழ்ந்தனர். ஆதலால் "மாதா, எனது உரையைக் கேட்ட நீயும் இப் பெண்மணியைப் பேணத் தாமதியாமல் உடன் கொண்டு செல்" என்று கவுந்தி அடிகள் பணித்தார். அடிகளைப் பணிந்து மாதாயும் அவ்வாறே செய்தாள்.

மாதா மனைக்குப் பக்கத்தில் செம்மண் பூசிய சிறிய மனையிருந்தது. அம் மனையைக் கோவலன் கண்ணகிக்கு ஈந்து, மகிழ்வுடன் மாதா அவர்களை உபசாத்தாள். பின்னர், கண்ணகிக்குத் தனது மகள் ஐயையைக் காட்டி, 'இவள் உங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வாள். ஆதலின் இங்கேயே இருக்கட்டும்' என்று கூறி, மற்ற ஆய்ச்சியர்களைப் பார்த்து,

"சாவக நோன்பிக ளடிக ளாதலின்
நாத்தூ ணங்கையொடு நாள்வழிப் படூஉ
மடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்க
ணெடியா தளிமி னீரெனக் கூற" (சிலப்பதிகாரம் 2:16:18-21)

இவர்கள் 'சிராவக நோன்பினர்; இரவுண்ணார்; உடனே சமையலுக்கு வேண்டிய புதுக் கலங்களைக்கொண்டு வாருங்கள்' என்றாள்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com