முகப்பு வாயில்

 

மூவரும் பல காத தூரம் நடந்தார்கள். ஆங்காங்கு வழியில் தோன்றும் ஊர்களில் தங்கிச் சென்றார்கள். ஒரு நாள் ஆறு சூழ்ந்த அரங்கத்திற்கு வந்தனர். அவ் வரங்கத்தின் பக்கம் ஒரு மர மடர்ந்த சோலை இருந்தது. அங்கே இரண்டு சாரணர் தோன்றினர். அவர்களைக் கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி ஆகியோர் பணிந்தார்கள். அவருள் மூத்தவர், கோவலன் கண்ணகி வந்த காரணத்தை அவதி ஞானத்தால் (சிந்தை விளக்கு அல்லது முக்காலமும் அறியும் அறிவு) அறிந்து கொண்டாரெனினும், அதன் பயனைக் கூறாது ஊழ்வினை வந்தே தீரும் என்றும், இந்த உடல் நில்லா தொழியுமென்றும் அருகப்பரமேட்டியின் அறிவொளியே பிறவி யிருளைப் போக்கும் வழி என்றும் உபதேசிக்கின்றார். கவுந்தியடிகள் சாரணர் உபதேசித்த வாய்மையுரையைக் கேட்டுத் தலைமேற் கை குவித்த இறைவனைப் போற்றுகின்றார். இந்தக் காட்சியை இளங்கோவடிகள் எவ்வளவு இன்பத்தோடு நமக்கு ஊட்டுகின்றார் என்பதைக் கவனிப்போம்.

"ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்ந்துவந் தெய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா வுடம்பிடை உயிர்கள்
அறிவ னறவோ னறிவுவரம் பிகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் றலைவன் றருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் றேவன் சிவகதி நாயகன்
பரமன் குணவதன் பரத்தி லொளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பொயவன் செம்மல் திகழழொளி
இறைவன் குரவ னியல்குண னெங்கோன்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுக
னங்கம் பயந்தோ னருக னருண்முனி
பண்ணவ னெண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்கொளி
யோதிய வேதத் தொளியுறி னல்லது
போதார் பிறவிப் பொதியறை யோரெனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதற்
காவுந்தியுந் தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்ற வித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகந் திறவா
காமனை வென்றோ னாயிரத் தெட்டு
நாம மல்லது நவிலா தென்னா
வைவரை வென்றோ னடியிணை யல்லது
கைவரைக் காணிணுங் காணா வென்கண்
அருளறம் பூண்டோன் றிருமெய்க் கல்லதென்
பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தா
தருக னறவ னறிவோற் கல்லதெ
னிருகையுங் கூடி யொருவழிக் குவியா
மலர்மிசை நடந்த மலரடி யல்லதென்
றலைமிசை யுச்சி தானணிப் பொறாஅ
திறுதியி லின்பத் திறைமொழி யல்லது
மறுதர வோதியென் மனம்புடை பெயராது" (சிலப்பதிகாரம் 1:10:171-207)

என வாழ்த்திய கவுந்தியடிகளின் புகழ்மாலையைக் கேட்டு மகிழ்ந்த சாரணர்கள், "பவந்தரு பாசங் கவுந்தி கெடுக!" என்று வாழ்த்தி அந்தர வழியே சென்றனர்.

தவப் பெருமாட்டியின் தியான நிலை

பிறகு மூவரும் மதுரையையடைந்தனர். காலைவேளை, கவுந்தியடிகள் வழக்கப்படி தியானத்தை முடித்துஅமர்ந்தனர். இதனை இளங்கோவடிகள்,

"கோவலன் சென்று கொள்கையி னிருந்த
காவுந்தி யையையைக் கைதொழு தேத்தி" (சிலப்பதிகாரம் 2:14:15-16)

என விளக்குகின்றார். கொள்கையினிருந்த என்பதனை அடியார்க்கு நல்லார், "தியானத்தோடிருந்தமையும் கூறினார்" என்றார். இங்கே ஜைனத் துறவிகளின் தியான நிலையையும் நினைவுறுத்திச் செல்வதைக் காண்கின்றோம். கோவலனும் காலைக் கடனை முடித்து. அடிகளை வணங்கிய பின்னர், தனது நிலையினை உணர்ந்து மனத்தே வருந்துகின்றான். அதனைக் கவுந்தியடிகளிடம் கூறிக் கலங்குகின்றான். கோவலன் வருத்தத்திற்கிரங்கி கவுந்தியடிகள் ஆறுதலாகச் சில சொல்லுகின்றார். அவ்வறிவுரைகளை இலக்கிய வாயிலாகக் காண்போம் :

"தவந்தீர் மருங்கிற் றனித்துய ருழந்தோய்
மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்
றறத்துறை மாக்க டிறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்பபறை யறையினும்
யாப்பறை மாக்க ளியல்பிற் கொள்ளார்
தீதுடை வ்வவினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறவர்
ஒய்யா வினைப்பய னுண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கறறி மாக்கள்
பிறிதற் றுன்பமும் புணர்தற் றுன்பமும்
உருவி லாள னொறுக்குந் துன்பமும்
புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க் கல்ல
தொருதனி வாழ்க்கை யுரவோர்க் கில்லை
பெண்டிரு முண்டியு மின்பமென் றுலகிற்
கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம்
கண்டன ராகிக் கடவுள் வரைந்த
காமஞ் சார்பாக் காதலி னுழந்தாங்
கேமஞ் சாரா விடும்பை யெய்தினர்
இன்றே யல்லா லிறந்தோர் பலரால்" (சிலப்பதிகாரம் 2:14:15-16)

என்றார். இவ்வறவுரைகளில் உயிர்கள்பால் அன்பாயிருக்கும் அருளறத்தையும், நல்லொழுக்கத்தையும் வற்புறுத்தி, ஊழ்வினைப் பயனையும் விளக்கியுள்ளதைக் காண்கிறோம். இவை யாவும் ஜைன சமயக் கொள்கைகளேயாகும். மேலும், இராம சாதையையும் நளன் கதையையும் எடுத்துக் கூறி, அவர்களினும் நீ மேம்பட்டவன்; நல்லறம் செய்தவன், அவர்கள் மனைவியைப் பிரிந்து காட்டிலே அலைந்தார்கள். நீ மனைவியுடன் துன்புறுகிறாய் என நல்வினைப் பயனையும் விளக்கி,

"வருந்தா தேகி மன்னவன் கூடற்
பொருந்துழி அறிந்து போதீங் கென்றலும்" (சிலப்பதிகாரம் 2:14:60-61)

எனக் கூறினார். இங்கே பொருந்துழி அறிந்து என்பதற்குச் 'சாவக நோன்பு நிகழ்த்தற்கேற்ற இடமிது வென்றறிந்து ஈண்டு வருவாயாக' என அடியார்க்குநல்லார் உரை எழுதுகின்றார். இதனால் மதுரையில் ஜைனப் பெருமக்கள் வதியும் நல்லிடத்தை நாடுகின்றார் கவுந்தியடிகள். ஏனெனில், ஜைன சமயத்துறவிகளை வரவேற்று ஆகாரதானம் அளிப்போரவர்களேயாவர்.

மதுரைக் காண்டமும் இறைவன் வாழ்த்தும்

இவைகளுக்கெல்லாம் முடி வைத்தாற்போன்றது மதுரைக் காண்டத்தின் இறைவன் வாழ்த்து. இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரக் காவியத்தினை மன்னுயிரனைத்திற்கும் இன்றியமையாதனவாக வுள்ள திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இயற்கைகளைப் போற்றியே தொடங்கியுள்ளார். எனினும், மதுரைக்காண்டத்தில் இறை வாழ்த்தை மறக்கவில்லை.

"திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாம் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி" (சிலப்பதிகாரம் 2:11:1-4)

என்னும் இறைவாழ்த்துடன் தொடங்குகின்றார். இவ்வாழ்த்து கவுந்தியடிகள் வாழ்த்தாக இருப்பினும், இளங்கோவடிகளின் உள்ளக் கருத்து இதில் அடங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழகத்தின் வரலாற்றையும் அது காட்டுகின்றது.

கவுந்தியடிகள் மதுரை மாநகரம் வருவதற்குரிய காரணத்தைக் கோவலனுக்கு அறிவுறுத்தியபோது,

"மறவுரை நீத்த மாசறு கேள்வியர்
அறவுரை கேட்டாங்கு அறிவனை யேத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன்" (சிலப்பதிகாரம், 1:10:56-59)

என்றார்.

எனவே, மிகப் பழங்காலந் தொட்டே பாண்டிய நாடும் மதுரை மாநகரமும் ஜைன சமயத்தின் தாயகமாய் விளங்கின என்பது புலனாகின்றது. இதனை மெய்பிக்க மதுரையிலும், மதுரை மாவட்டத்தின் பல பாகங்களிலும் ஜைன சமயத்தொடர்புள்ள பல மலைகளும், கோயில்களும், விக்கிரகங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக, சமணர் மலை, ஆனை மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், கொங்கர்ப் புளியங்குளம், உத்தமபாளையம், கழுகு மலை, அருங்குன்றம், சித்தர் மலை, கீழவளவு மலைகள், குன்றக்குடி ஆகியவற்றில் ஜைன சிற்பங்களும், பிராமி எழுத்தாலாகிய கல்வெட்டுச் செய்திகளும், முனிவர்களின் படுக்கைகளும், இன்றும் காட்சியளிக்கின்றன. "சமணர் மலை செல்வோம்" என்னும் எனது நூலில் இவைகளை விரிவாக விளக்கியுள்ளேன். இவ் வரலாற்றை உறுதிப்படுத்தப் பெருத்தொகை நூல் துணை புரிகின்றது.

"பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை யானை-இருங்குன்றம்
என்றெட்டு வெற்பு எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டுமோ பிறவித் தீங்கு" (பெருந்தகை. 183)

எனப் போற்றப்பெற்றுள்ளன. எனவே, இளங்கோவடிகள் மதுரைக் காண்டத்தை ஆரம்பிக்கையில், தமது சமய அறவோர்களை நினைத்து அருகப் பெருமானைப் போற்றித் தொடங்கியுள்ளார்.
 

1   2   3   4   5   6   7   8   9   10  11   12   13   14  15   16  17  18  19


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com