Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

புத்தர் வாழ்ந்த கபிலபுரத்தினின்று அகன்று, நீலகேசி வான்வழியாக வென்றியஞ்செல்வனை (ஜின பகவானை)ப் பாடிப் பரவிக்கொண்டு சென்று, கோழியூரை (குக்குட நகரை) அடைந்தாள். அங்கே ஆசீவகர் என்ற சமயப்பிரிவினர் வாழ்ந்தனர். அவர்களையும் வாதில் வெல்ல எண்ணி நீலகேசி, அவர்களுடைய ஆசியராகிய பூரணரிடம் சென்று, "உங்கள் சமயம் எத்தகையது'' என வினவினாள்.

நீலகேசி : உங்கள் சமயம் கண்ட தலைவர் யார்? உங்கள் மறை நூல்கள் 'ஒன்பது ஒளிக்கதிர்கள்' எனப்படுபவை. எங்கள் கோட்பாட்டின்படி அடிப்படைப் பொருள்கள் ஐந்து. அவை ஐந்தும், ஐந்து வேறு, வேறு வகை அணுக்களாலானவை. அவை மண், புனல், அனல், காற்று, உயிர் என்பன.

உள்ளது அழியாது; அல்லது பிறவாது. ஆயின் உள்ளவை நீரில் மிதப்பவைபோன்று மேற்படத் தோன்றும்; அமிழ்ந்துகிடப்பவை போல மறைந்திருக்கும்.

எம் தலைவர்பெருமான் நிறையறிவுடையவர்; இருவினைத் தொடர்பற்றவர். எனவே, அவரிடம் பேச்சும் செயலும் இரா. பேசினால்கூட வெளியிடமெங்கம் நிறைந்த அணுவுயிர்களுக்கு ஊறுவிளையும் என்பதனாலேயே அவர் பேசுவதில்லை. மூப்பும் இறப்பும் தவிர்த்தவர் அவர். வானவில்லின் தோற்றம் மறைவு ஆகியவைபோல, அவர் தோற்றமும் மறைவும் அறியவும் விளக்கவும் ஒண்ணாதவை. எனவே, அவரை யாம் நிறைவர் (பூரணர்) என்கிறோம். அவர் அருளிய மறைகளாகிய 'ஒன்பது கதிர்கள்' ஐவகை மெய்ப்பொருள்களாகிய உருப்படிகளை (மூர்த்தங்களை)ப் பற்றியும் தோற்ற மறைவுகளின் அறியொணாத் தன்மையையும் காரணமின்மையையும் விளக்கும்.

ஐவகை உருப்படிகள் வேறுவேறு இயல்புடையன; ஆயின் பண்பற்றவை. மெய்ம்மைக்கு ஊறும, சுவை, நிறம், மணம் ஆகியவை மட்டுமே அவற்றுக்கு உண்டு. ஓசை என்பது கிடையாது. ஆனால் நீருக்குத் தண்மையும், தீக்கு வெம்மையும், காற்றுக்கு ஓசையும், உயிருக்கு உணர்வும் (போதமும்) உண்டு. இவையும் மூலப்பொருள்களின் அணுக்களின் குணங்களேயன்றி, இவற்றின் சேர்க்கையாலான பொருள்களின் பண்புகள் அல்ல.

கணங்கள் உண்டெனினும் தொடர்ச்சியான காலம் என்ற ஒன்றை நாங்கள் ஏற்பதில்லை.

எங்கள் ஒழுக்கமுறை, இன்பத்தையே நோக்கமாகக் கொண்ட உலகியல் ஒழுக்கமுறையே. பிறர் இதுகண்டு நகையாடலாமாயினும், அதுவே உண்மையில் பகுத்தறிவுக் கொத்தமுறை என்பதை எண்பிக்கக்கூடும்.

நீலகேசி : உங்கள் கோட்பாட்டின் நான்கு கூறுகள் தலைவன், மறைமொழி, மெய்ம்மை இயல்பு, செயல்வகை (ஆப்தம், ஆகமம், பதார்த்தம், பிரவிருத்தி) என்பவை. நான்குமே கண்கூடு, உய்த்தறிவு ஆகிய இருவகை அளவைகளின் ஆதாரமற்றவை. தலைவர் வாளாமை (மெளனம்) பொருளற்றது; அறிவுமுறைக்கு முரணானது. அவர் வாய்திறவாதபோது, உங்கள் "ஒன்பது கதிர்க''ளாகிய மறைமொழி தோன்றிய வகை யாது?

பூரணர் : அவை ஒக்கலி, ஓகாலி என்ற இரு தேவர்களால் அருளிச் செய்யப்பட்டவை.

நீலகேசி : அத் தேவர்கள் மறைமொழி அருளின், அவர்கள் நிறை அறிவுடையவர்களா? நிறை அறிவுடைய தலைவர்போல் அவர்களும் வாய்திறவாதிராததேன்? நிறை அறிவற்றவர்களானால், மறைமொழிகளின் வாய்மை குறைபடுகிறதே. குறையறிவுடைய நம்போலியரே அன்பு காரணமாகப் பிறருக்க உதவ முன்வருகிறோம். நிறையறிவுடைய தலைவர் மஸ்கரி வாளா இருந்ததேன்?

தோற்றம் மறைவு ஆகியவை காரணமின்றி இயல்பாக நிகழ்பவை என்கிறீர்கள். ஆனால் தலைவர் தோற்றம் காரணமற்றதென்று விளக்க முன்வருகிறீர்கள். இதற்குக் கூறும் உவமையாகிய வானவில் விளக்கமே காரண காரியத் தொடர்பு வகையில், உங்கள் அறியாமைக்குச் சான்றாகிறது. முகில்கள்மீது ஞாயிற்றின் கதிர்கள் விழுவதனாலேயே அது தோற்றுகிறது என்பதை நீங்கள் அறியவில்லை ! வாளாமை நிறை அறிவுக்கு அறிகுறியாகுமானால், பேச அறியாக் குழந்தைகள், செவிட்மூமைகள், மரங்கள், குன்றுகள், நிறை அறிவுடையவையா? அவர் உறுப்பசைவுகூட அற்றவரானால் அவர் உயிரற்றவா? பாசாங்குக்காரரா? பேசாத அவர், ஐந்து மெய்ப்பொருள்களியல்பு, இருவினையியல்பு ஆகியவற்றுக்கு விளக்கம் தருவாரா? செயலற்ற அவர் வாழ்வில் சிற்றின்ப வேட்கை புகுந்ததெவ்வாறு?

மூலப் பொருள்களில் மண்ணுக்கு மட்டுமே நிறம், சுவை, மணம் ஊறு உண்டென்கிறீர்கள். அடுத்த மூன்றுக்கும் அவை இருப்பதால் அவை மண்ணின்பாற்படுமா? அப்படியானால் மூலப் பொருள்கள் இரண்டாக வல்லவோ வேண்டும்? மேலும் இவ்வுணர்ச்சிகளை உணரும் பொறிகளும் மண்தானா?

புலன் அறிவுக்கு உட்பட்டவற்றில் இருளும் ஒன்றாயிருக்க, அதை ஏன் பொருளாகச் சேர்க்கவில்லை?

மூலப் பொருள்களுக்க இயல்பு உண்டு என்று கூறியபின், பொருள்களுக்குப் பண்பு இல்லை என்றல் எவ்வாறு? இயல்பு பொருளிலிருந்து பிக்க முடியாதென்றாலும், அதை ஏற்பவர் பண்புகளும், பிக்க முடியாத நிலையில் ஏற்கப்படலாமன்றோ?

மெய்ம்மையின் மாறாத்தன்மை (அவிசலித நித்தியம்) பற்றிக் கூறுகிறீர்கள். மரம் படகாதலும், பொன் அணிகலனாவதும், வெண்கலமும் கிண்ணமும் மாறுதலல்லவா? வெண்கலத்திலேயே வெளிப்படையான தட்டை உருவும், மறைநிலையாக கிண்ண உறவும் உள்ளன என்றாலும், இரண்டு வேறுவேறு பொருள்களாகி மாற்றம் ஏற்படுகின்றன என்று ஆகிறதே! இலக்கணத்தில் சொற்கள்கூட வேற்றுமையிலும் தொகைகளிலும் மாறுகின்றன.

வளர்ச்சிமுறை வகையில் நீங்கள் நான்கு, கூறுகளை ஒப்புக்கொள்கிறீர்கள். அவை வளர்ச்சியின் கட்டாயத் தன்மை, வளர்ச்சியின் படிமுறை, வளர்ச்சியின் உச்ச எல்லைநிலை, வளர்ச்சியின் கால அளவு ஆகியவை. அதாவது பெண் குழந்தை மாது ஆகமட்டுமே வளர முடியும். சிறுமி, நங்கை, மங்கை, போளம் பெண் ஆகிய படிகள் கடந்தே வளரமுடியும். கிழவிப் பருவத்துக்கப்பால் வளர முடியாது. வளர ஐம்பது அல்லது நூறு ஆண்டுகள் வரை செல்லும்.

மாற்றம் இல்லை என்று கூறும் நீங்கள், மேற்கூறிய இவ்வளவு மாற்றங்களையும் வகைப்படுத்திக் கூறுவது எவ்வாறு பொருந்தும்?

குழந்தையின் வளர்ச்சியில் உருப்பெருக்கம் மாற்ற மல்லவா? ஒன்றரை அடிக் குழந்தை உருவிலேயே ஆறடி முழுவளர்ச்சியும் இருப்பதென்பது பொருந்துமா? மீசை தாடி முதலிய ஆண் உடற்கூறுகளும், கருப்பை முதலிய தாய்மை உறுப்புக்களுமாவது புது வளர்ச்சியாகிய மாறுபாடுகள் என்பதை மறுக்க முடியாதன்றோ?

உயிர்கள் (பாலைக்கனியின் நிறமாகிய) நீலநிறமென்றும்; போதிய நீள அகலமும் நானூறுயோசனை உயரமும் உடையவை என்றும் கூறுகிறீர்கள். இவ்வளவு பொய அளவுடைய உயிர்கள், சிற்றளவினவாகிய உடலில் அமைந்திருத்தல் எவ்வாறு? பல கோடியாதலால் அத்தனைக்கும் உலகில் இடம் ஏது?

உயிர், பூசணிக்காய் போன்ற நீளம் அகலம் உயரம் உடைய பருப்பொருளானால், அக் காயைப்போலவே துண்டுபடக்கூடியதாயிருக்க வேண்டும். உயிர்கள் எல்லாம் வீடு பெற்றால், உலகியல் வாழ்வில்லையே என்ற கடாவுக்கு மறுமொழியாக, வீடுபெற்ற பின்னும் உயிர்கள் மீண்டும் உலகியலில் தொடக்கநிலையெய்தும் என்ற மண்டல வீடு பேற்று (மண்டல மோக்ஷ)க் கொள்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அது உயிர்கள் எண்ணற்றவை என்பதன் முழு இயல்பை அறியாமல் நீங்கள் தரும் விடையாகும். எண்ணற்றவை (அனந்தம்) எத்தனை பிந்தாலும் பின்னும் எண்ணற்றவையாகவே இருக்கும் என்ற கணக்கியல் மெய்ம்மையை நீங்கள் உணரவில்லை.

மூலப் பொருள்களுள் மண்ணும் நீரும் கீழ்நோக்கிச் செல்பவை என்றும், தீயும் உயிரும் மேல்நோக்கிச் செல்பவை என்றும், கூறுகிறீர்கள். மேல் நோக்குவதாகக் கொள்ளும் தீ, எநிலையிலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் பொருளே என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. உயிர்கள் தொடர்ந்து மேல் நோக்குபவையானால், அவை திங்கள் மண்டிலம், விண்மீன் மண்டிலம் ஆகியவற்றை எளிதில் அடையவேண்டுமன்றோ? பக்கநோக்கிச் செல்வதாக நீங்கள் கூறும் காற்று, உடலில்மேலும் கீழும் செல்வதை நீங்கள் கவனிக்கவில்லை.

காலமில்லை என்று கூறும் நீங்கள், வளர்ச்சியின் கூறுகளுள் காலப்போக்கை ஒன்றாகக் கூறுகிறீர்கள்.

காரண காரியத் தொடர்பை மறுக்கும் நீங்கள், நோன்பும் தவமும் நாடுவதேன்?

நீலகேசியின் வாதத்தால் பொய்ம்மை தவிர்ந்த ஆசீவக ஆசிரியர் பூரணர், தன் குழப்பநிலையிலிருந்து விடுதலை தருமாறு வேண்ட, நீலகேசி தன் மறுப்புக்களுக்குத் தானே விளக்கம் கூறி, அவரைச் சமணநெறி மூலம் தேற்றினாள்.

ஆசீவக வாதம் - உரை முற்றும்

Previous Next Top