Download PDF Version
Ӹ š¢

Ǽ
 

அடுத்தபடியாக நீலகேசி பதுமபுரம் சென்று புத்தான் நேர் மாணவரான மொக்கலன், சாபுத்திரன் ஆகிய இருவருள் ஒருவனான மொக்கலனை அடைந்து புத்தமதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி வாதிட்டாள். இவ்வாதத்தில் பெரும் பகுதி சமணக் கோட்பாடுகள் பற்றிய புத்தர் கண்டனங்களுக்கு விடை தரும் முறையில் அமைந்துள்ளது. (பெரும்பாலும் இவ்வாதப் பகுதி புத்த தமிழ்க் காவியமாகிய குண்டலகேசியின் இறந்துபட்ட பகுதிகளுக்கு மறுப்புரைகளாயிருக்க வேண்டும்).

நீலகேசி புத்தத் துறவிக்கும் சமணத் துறவிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறாள். வெளித் தோற்றத்திலேயே சமணத்துறவியர் ஆடையைத் துறந்த எளிய வாழ்வு உடையவர். புத்தத் துறவியரோ பலவகைத் தையல்கள் வாய்ந்த பல பேருடைகளை அணிந்தனர். இவ்வுடை வண்மை துறவுக்கு அறிகுறியாகாது. தொடக்க காலத்தில் புத்தரும் கந்தைகளைப் பொறுக்கித் தைத்த உடைகளையே அணிந்தனர். பழைய எளிமை கைவிடப் பட்டபின் குருட்டுத்தனமாகப் பொருளற்ற முறையில் பகட்டான துணிகளும் அதேபோன்று தைக்கப்பட்டன. அதோடு கந்தை நிறத்தை உண்டுபண்ணவே தொடக்கத்தில் காவி நிறச் காயமேற்றப்பட்டது. ஆடை, தையல், சாயம் முதலியவற்றுக்கான தொழில்களால் துறவியரிடையேயும் உலக வாழ்வு பெருகியதை விளக்கி நீலகேசி நகையாடினாள்.

மொக்கலன் இது கண்டு சினங்கொண்டு, "நான் வாதத்தில் இரணியனை வென்றவன். அவளேபோல் நீயும் இழிவு பட்டே போவாய் என்பது உறுதி" என்றான். நீலகேசி ஒருவரை வென்றாயானால், நான் இருவரை வென்றிருக்கிறேன். குண்டலகேசியும், அர்க்கசந்திரனும் என்னிடம் தோற்றுப் பணிந்தனர்" என்றாள். மொக்கலன் அதுகேட்டு வியப்படைந்தான்.

மொக்கலன் சமண நெறியின் கொள்கையாகிய இயக்கதத்துவம் (தர்மம்) நிலைத்தத்துவம் (அதர்மம்), காலம் வான் (இடவெளி) உயிர் (ஜீவன்) பொருள் (புற்கலம்), நல்வினை, தீவினை, கட்டு (பந்தம்), வீடு (மோக்ஷம்) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இவற்றைப் பற்றிச் சமண ஆசிரியரான நாதகுப்தர் வாதிட்டுக் குண்டலகேசியிடம் தோற்றார் என்றார். குண்டகேசியின் வாதங்களையே மொக்கலன் கூற, நீலகேசி அவற்றிற்கு விடையிறுத்தாள். இயற்கையிலடங்கிய ஆக்கப் பொருள்களாகிய ஐந்து மூலப்பொருள்களுள் (அஸ்திகாயங்களுள்) இயக்கம் (தர்மம்) நிலை (அதர்மம்) ஆகிய இரண்டு அடிப்படைத் தத்துவங்களைப் பற்றிப் பலர் தப்பெண்ணங் கொள்கின்றனர்; இயக்கம் பொருள்களியங்க இடந்தருவது, இயக்குவிப்பதன்று. கடலில் நீரின் தன்மை இருப்பதால், கப்பல் ஓட முடிகிறது. ஆனால் ஓட்டுவது காற்று முதலியவற்றின் ஆற்றல். இயக்க தத்துவம் நீரின் தன்மை போன்றது; காற்றின் ஆற்றல் போன்றதன்று. அதுபோலவே, நிலை (அதர்மம்) இயக்கத்தைத் தடுக்க இடம் தருவது. தடுக்கும் ஆற்றல்கள் வேறு. ஒன்றுக்கொன்று மாறான இத்தன்மைகள் எங்ஙனம் பொருந்தும் என்ற மயக்கத்திற்கு நீலகேசி விடையிறுத்தாள். இயக்கமில்லாமல் உலக வாழ்வு இல்லை. மாற்றம் இல்லை. ஆனால் நிலை இல்லாமல் மாறுபாடிடையே தொடர்ச்சி இராது. எனவே, இரண்டும் ஒத்தியல்வதே உலகு' என்று அவள் தெளிவுபடுத்தினாள்.

நீலகேசி : புத்தராகிய நீங்கள் உலகின் ஆக்கப் பொருள் ஐந்து கந்தங்கள் என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் உலகின் எல்லைக்கப்பாலுள்ள தெய்வ உலகு, நரகு எப்படிப்பட்டவை? காலம் என்ற ஒன்றில்லை என்கிறீர்கள். ஆயினும் நொடிகளைப் பற்றியும் பெடூழி (கற்பங்)களைப் பற்றியும் பேசுகிறீர்கள். வானகோளங்கள் பொய் என்கிறீர்கள். ஆனால் வானநூலின்படி எதிர்காலப் பலன் கூறுகிறீர்கள்.

உயிரின் உண்மையை மறுக்கிறீர்கள். மறை (ஆகமங்)களாலன்றிக் கண்கூடு (பிரத்தியக்ஷம்) உய்ந்தறிவு (அனுமானம்) ஆகிய அளவையால் அதனை நிலைநாட்டக் கூடுமா என்கிறீர்கள். உங்கள் ஐந்து கந்தங்களுள் அறிவுக் கந்தமும் இதுபோன்றதுதானே. உள்ளுணர்வால் அறியக் கூடுவதாயின், உயிரும் அப்படியே? மறைமொழியால் காணப்படுவதெனின், அது உங்களுக்கு உடன்பாடன்று ஆயிற்றே?

தேவர்கள் பற்றிய கதைகளைக் கூறுகிறீர்கள். அவர்கள் கண்கூடாகவோ, உய்த்தறிவாலோ அறியக் கூடாதவராயிற்றே? மறையுரையால் மட்டும்தானே அறியப்படக்கூடும்? அம்மறைகளே (புத்தசாதகங்கள்) மறுபிறப்புகளை ஏற்பதால் உயிரையும் ஏற்பவை ஆகின்றனவே? உயிர் உடலின் உருவுடையது என்ற சமணரின் கொள்கையை மொக்கலன் எதிர்த்தான்.

நீலகேசி : உயிர் உடலுடன் சேர்ந்தியங்குவது என்பதே இதன் பொருள். உயிர் ஓர் அணு என்ற கருத்தை எதிர்க்கவே இங்ஙனம் கூறப்பட்டது. உயிர் அணுப்பொருளாயின், அது உடலின் ஓரிடத்திலேயே இருக்கும். உடலின் பகுதியாய்விடும். ஆனால் உயிர், உடல்போன்ற பருப்பொருளன்று. உடல் முழுதும் இயங்கும் ஆற்றல். ஆகவே, வடிவற்ற அதன் தன்மை உடல்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. இது பொருத்தமற்ற கூற்று என்று கூறிவிட முடியாது. ஏனெனில் புத்தர் கொள்கைப்படி அறிவுக் கந்தத்தின் செயலாலேயே ஊறு உணர்ச்சி ஏற்படுகிறது. ஊறு உணர்ச்சி உடல் முழுமையும் பரந்து இருப்பது. எனவே, அறிவுக்கந்தமும் உடல் முழுவதும் பரந்து நிற்பதாகிறது. அறிவுக் கந்தம் உடல் முழுமையும் பரந்திருப்பது கூடுவதானால், உயிரின் ஆற்றலும், உடல் முழுவதும் பரந்திருப்பது கூடுவதேயாகும்.

மொக்கலன் : உயிர் அறிபொருள் (சேதனம்); உடல் அறிவில் பொருள் (அதேசனம்). இங்ஙனம் மாறுபட்ட தன்மை உடையவற்றுக்கிடையே தொடர்பு இருத்தல் எவ்வாறு? உடலுக்கு ஊறுவந்தால் உயிர் வருந்துவானேன்? இது காளை காலிடறிக் கழுதை நொண்டியாயிற்று என்பது போன்றதல்லவா?

நீலகேசி : உயிர், உடல் முழுவதும் பரந்து நேரிடையாகவே உணர்கிறது என்பது சமணக் கோட்பாடு. அதற்கு இடையீடு எதுவும் வேண்டுவதில்லை. (உடல் அறிகருவி மட்டுமே). நீங்கள் கூறும் மறுப்பு உங்கள் நிலையை மறுப்பதேயன்றிச் சமணர் நிலையையல்ல. உயிர்வேறு; அறிவு வேறு; உயிரில் பொருள் ஆகிய உலகு (பிரகிருதி) வேறு, என்ற உங்கள் கோட்பாடும், வேறுவேறு கந்தங்கள் கோட்பாடும் இம்மறுப்புக்குப் பெரிதும் இடம் தருபவை. ஏனெனில், தொடர்பற்ற இவை ஒன்றுக்கொன்று காரணகாரியமாதல் எங்ஙனம்!

மொக்கலன் : சமணர் காரண காரிய ஒழுங்குப்படி காரியம் நிகழும்போது, காரணமும் உடனிகழவேண்டுமென்று கூறப்படுகிறதே. அப்படியானால், நல்வினைப் பயன்நாடிக் கோயில் கட்டுபவன் உடனடியாகவே அதன் பயனை அடையவேண்டுமன்றோ? பயன் பிற்பட்டுக் காணப்படுமென்றால், அதன் முன் காரணம் அழிந்து படுமே.

நீலகேசி : புத்தர் நெறிப்படி காரணம் அழிந்தபின் காரியம் நிகழும். இது இல்காரியக் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப்படும். நீங்கள் இதனை மனத்துட்கொண்டே பேசுகின்றீர்கள். சமணர் கோட்பாடு உள் காரியக் கோட்பாடு (சத்காரியவாதம்) எனப்படும். ஆனால் உங்கள் மறுப்பு, சாங்கியர் உள்காரியக் கோட்பாட்டைக் கருதிய மறுப்பேயாகும். சாங்கியர், காரணமும் காரியமும் ஒன்றே என்பர். சமணர் உள்காரியக் கோட்பாடு இவ்விரண்டு நிலைகளினின்றும் வேறுபட்டது. காரியம் காரணத்தின் வளர்ச்சி ஆதலின், அதன் தொடர்ச்சி என்றும் ஆயின், அது காரணமன்று என்று ஒப்புமையில் வேற்றுமை கற்பிப்பது. உலகியலில் சமணர் கொண்ட கொள்கைக்கு இது ஒத்ததேயாகும். புத்தர்போல் உலகு தொடர்ச்சியற்ற மாற்றங்கள் என்றும் கொள்ளாது, வேறு சிலர்போல் மாறுபாடற்ற ஒரே நிலைப்பொருள் என்றாவது கொள்ளவில்லை.

மொக்கலன் : சமணர் துன்பத்தை மேற்கொள்வதே நோன்பு (தவம்) என்கின்றனர். இதனால் நல்வினை வரும் என்று கருதப்படுகிறது. ஆனால் துன்பம் தீவினைப் பயனாயிற்றே. ஆகவே, தவம் செய்பவன் முன்னைய தீவினையை நுகர்கிறான் என்றாகிறது. இதனால் நல்வினைப் பயன் வருமென்பது எவ்வாறு?

நீலகேசி : சமணத்துறவி மேற்கொள்ளும் துன்பம் தீவினைப் பயன் அன்று. ஏனெனில், அதுதானே அவனை வந்தடைவதன்று அவனாக விரும்பி மேற்கொள்வது, அது தவறி உட்கொள்ளும் நஞ்சு அன்று. உடல் நலன் கருதி உட்கொள்ளும் கசப்பு மருந்து போன்றது. பயன் நாடுபவன் அதனைத் துயராகக் கொள்வதுமில்லை. கொண்டாலும் அது பயனோக்கிய கருவியேயன்றி வேறன்று. மேலும் புத்தர்கட்கு அமைந்த துதாங்க ஒழுங்குகள் இவ்வகைப் பட்டவைதானே! புத்தரே தம் கண்ணும் தலையும் பிறருக்கு விரும்பி ஈந்ததை என்னென்பது?

மொக்கலன் : சமணர் மேற்கொள்ளும் இறப்புவரை உண்ணாத நோன்பு (சல்லேகனம்) கொல்லாமை நெறியினருக்கு ஒவ்வாத தற்கொலை முறையன்றோ?

நீலகேசி : சாவது விலக்கமுடியா நிலையில் மட்டுமே அது மேற்கொள்ளப்படும். எனவே, அது தற்கொலையன்று. கொலையை ஒறுப்பதுபோலவே, கொல்லாநோன்பினர்களான சமணர் தற்கொலையும் வெறுக்கவே செய்கின்றனர். இந்நோன்பு உயிர் நீப்பதற்கன்று; உயிர் நீங்குவதன்முன், உயிர் நிலையின் மேம்பாட்டுக்காவன செய்வதேயாகும்.

மொக்கலன் : கொல்லுதல் தீவினை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சமணர் ஊனுண்ணலைத் தீவினை என்பதேன்? தான் கொல்லாதபோது தின்பவனுக்குத் தீவினை ஏது?

நீலகேசி : தீமையை நேரடியாகச் செய்து மட்டுமன்று, தீமையைச் செய்யத் தூண்டுவதும் தீவினையே. நல்வினை வகையில் நீங்களே இதை ஒத்துக்கொள்கிறீர்கள். போதிமரத்தைச் சுற்றுவது நேரடியான நல்வினையன்றாயினும், புத்தர் நல்வினையை நினைவூட்டுவதாதலால் மறைமுறை நல்வினை எனக்கொள்கிறீர்கள். ஊனுண்ணலும் அதுபோன்ற மறைமுகத் தீவினையின் பாற்படும்.

மொக்கலன் : சமணத் துறவியர் மயிற்பீலியைப் பயன்படுத்துவது, மயிலைக் கொல்விக்கத் தூண்டுவது தானே? அதுவும் மறைமுறைத் தீவினையன்றோ?

நீலகேசி : மயிற்பீலிக்காக மயிலைக் கொல்வதில்லை. கொல்லத் தூண்டுவதுமில்லை. பீலியைக் கொல்லாமைக்குக் கருவியாகவே பயன்படுத்துகின்றனர். தமக்காக மயிலைக் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் கொல்வது கேட்டால், துறவியர் அதனை ஏற்கார் என்பதும் உறுதி...

மொக்கலன் : தீவினை தீய செயலால் மட்டுமே வரும். ஊனுண்ணல் நுகர்தலால் செயலன்று.

நீலகேசி : நுகர்தல் செயலன்று என்று கொள்வதானால், கற்பழித்தல் முதலியவையும் நுகர்ச்சியேயாதலால் தீமையன்றாய்விடும். பிற பல தீமைகளும் அவ்வாறே. ஊனுண்ணல் மறைமுகக் கொலையன்று என்று நாட்ட மொக்கலன் கூறும் பல்வகை எதிர் உரைகளையும் நீலகேசி எளிதில் மறுத்தாள்.

மொக்கலன் : துன்பத்தை வரவேற்கும் தவத்தை மேற்கொள்ளும் நீங்கள், உயிருடன் உடலை எரித்தல் போன்றவற்றையும் தவத்திற்கொப்பான செயலாகக் கொள்ளலாம் அன்றோ?

நீலகேசி : பிற உயிர்கட்கு ஊறுசெய்வது மட்டுமன்றித் தனக்கு ஊறு செய்வதும் கொல்லாமைக்கு மாறானதே. சமணர் தவம், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாத தவம். தனக்கும் ஊறு செய்வதும் சமணர் நோக்கமன்று. உடலாற்றலறிந்து படிப்படியாகவே அவர்கள் துன்பத்தை ஏற்பர். மேலும் இம்மறுப்பு புத்தர் வாழ்க்கை வரலாற்றுக்கு மாறானது. புத்தர் பிரான் மேற்கொண்ட நிறைபாடுகள் (பாரமிதைகள்) முற்றிலும் தன்னொறுப்பேயாகும். விசாகையிடம் உணவு ஏற்குமுன், அவரே பல நாள் உண்ணாநோன்பு நோற்றார். இவையனைத்தையும் மறந்து, சமணர் நோன்பை எள்ளுதல் பொருந்தாது.

மொக்கலன் : மரவகைகள், உயிர் இனங்களுட்பட்டவையே என நீங்கள் கொள்கிறீர்கள். மரங்கள் வளர்வதால் உயிரினமானால், வளர்கின்ற காரணத்தால் புற்றும் உயிருடையதாக வேண்டும். உணர்ச்சியற்ற மயிரும் நகமும் போல்வனகூட வளர்கின்றவே?

நீலகேசி : புற்று வளர்ச்சியும் உயிர் வளர்ச்சியும் சொல்லளவில் வளர்ச்சிகளாயினும், வேறு வேறு வகை வளர்ச்சிகள். புற்றின் வளர்ச்சி, பொருள் புறத்திருந்து அடுக்கடுக்காய் மேல் சேர்ந்து வளரும் வளர்ச்சி. உயிர் வளர்ச்சி, உள்ளீடாய்ப் பொருள் முழுதும் உருப்பெருக்க மடைந்து வளரும் உள் வளர்ச்சி மயிர் வளர்ச்சியும் நக வளர்ச்சியும் கூடப் புற்றுவளர்ச்சி போன்றவையே. செம்பஞ்சி ஏற்றிய நகம் வளர்ந்தபோது, புது வளர்ச்சியைத் தனிப்படக் காணலாம்.

மேலும் மரவகைகள் பிற உயிரினங்களைப் போலவே அவ்வப்போது இலைகளை மடக்கி உறங்குகின்றன. புளி முதலியவற்றில் இது எளிதிற் காணப்படும்.

மொக்கலன் : ஒரு சில மரங்களே இலைகளை மடக்குகின்றன. இது உறக்கம் என்று கொள்வதற்கில்லை.

நீலகேசி : உயிரினங்கள் எல்லாம் உறங்கும்போது கண் மூடுவதில்லை. மரவகைகளும் அப்படியே. மேலும் மரவகைகள் உயிரினங்களைப் போலவே விருப்பு வெறுப்பு செயலெதிர் செயல் உடையன.

மொக்கலன் : அனலருகில் பட்டவுடன் மெழுகு உருகுவதில்லையா? அது உயிர் எனக் கொள்வதில்லையே. செயல், எதிர்செயல் உயிரின் குறியாவது எங்ஙனம்?

நீலகேசி : மெழுகின் மாறுதல் அனலின் சூடுபோன்ற புறநிலையைமட்டும் பொருத்தது. மரவகை, உயிரினம், ஆகியவை தம் விருப்பு, வேண்டுதல் ஆகியவற்றுக்கேற்பச் செயலாற்றும்.

மரவகைகளும் உயிர்களும் வளர்வதற்கும் வாழ்வதற்கும் எல்லை உண்டு. வளர்ந்தபின் அவை நலிந்து அழிவு எய்தும். உயிரில் பொருள்களுக்குத் திட்டமான வரையறையும் எல்லையும் இல்லை. விறகுள்ளவரையும் எவ்வளவு நாள் வேண்டுமாயினும் தீ எரியும்.

வெட்டினால் அழிவது, நோயினால் நலிவது, குணப்படுவது ஆகிய பண்புகள் வாளிலும் தோலிலும் காணப்படும் மாறுதல் போன்றவை. காந்தத்தால் வளைந்த வாள் நிமிர்வதுபோல் தான், மருந்தால் நோய் நீங்குவதும் என்று பலவாறு மொக்கலன் வாதிட்டான். நீலகேசி அவற்றின் பொருந்தாமை விளக்கி, தம் வடிவும் பண்பும் மாறா இனப் பெருக்கம் உயிர்வகைகளின் சிறப்புப் பண்பு என்பதையும் விளக்கினாள்.

மொக்கலன் : நில உயிர், நீர் உயிர், அனலுயிர், காற்றுயிர், வானுயிர் என்று மூலப் பொருள்களிலும் உயிர்களிருப்பதாகக் கூறுகிறீர்களே. இது உயிரில் பொருள்களிலும் உயிர் இருப்பதாக மயங்குவதல்லவா?

நீலகேசி : மூலப்பொருள்கள் (பூதங்கள்) உயிர் உடையவை என்று சமணர் கொள்வதாகக் கொள்ளுகிறீர்கள். இது தவறு. கண்காணா நுண் உயிர்களாகிய ஓர் உணர்வு உயிர் இனங்கள் எண்ணற்றவை உண்டு. அவை நில நீர் முதலியவற்றிலிருப்பதையே இப்பாகுபாடு குறிக்கும்.

மொக்கலன் : நிலையுடைமை (நித்தியம்) நிலையாமை (அநித்தியம்) ஆகியவை மூலப்பண்புகளா? தற்செயல் நிகழ்ச்சிகளான துணைப்பண்புகளா? உலகு நிலையுடைமையை மூலப் பண்பாகக் கொண்டதானால், உயிரினங்கள் மீது அதன் தாக்கு எவ்வாறு ஏற்படும்? நிலையாமை மூலப் பண்பானால், உயிரினங்கள் ஒரே தொடர்ச்சியான உலக நுகர்ச்சி பெறுதல் எங்ஙனம்?

நீலகேசி : சமணர் முடிந்த பொருளொருமைக் கோட்பாட்டினர் (ஏகாந்தவாதிகள்) என்ற தப்பெண்ணைத்தால் இவ்வினா எழுந்தது. சாத்தன் என்ற ஒரே ஆள் வேலனுக்குத் தம்பியாகவும், மூலனுக்கு அண்ணனாகவும் இருத்தல் கூடுமன்றோ? இருதன்மையும் ஒரே பொருளின் இருவேறு தொடர்புகளே. அதுபோல, நிலையுடைமையும், நிலையாமையும் உலகின் இருவேறுப்பட்ட தொடர்புகள். முழுமையாகப் பார்க்க அது நிலையுடையது. பகுதிகளாகப் பார்க்க அது நிலையாமையுடையது. இன்னொருவகையாகக் கூறினால், மூலப்பண்பை (அனுவிருத்த சுவபாவம்) நோக்கப் பொருள் நிலையுடையது. துணைப் பண்பை (வியாவிருத்த சுபாவம்) நோக்க நிலையாமை உடையது.

மொக்கலன் : பொருள்களின் அடிப்படை இயல்பு நிலையானது என்றும், தற்காலிக இயல்பு நிலையாததென்றும் கூறுகின்றீர்கள். அப்படியானால் பண்புகளல்லாமல் அவற்றுக்கப்பாற்பட்ட பண்பி அல்லது பொருள் இல்லையென்று கொள்ளலாகுமல்லவா?

நீலகேசி : பண்புகளிலிருந்து பொருளைப் பிரிக்க முடியாது என்பது நீங்கள் கூறுவதன் பொருளாயின, அது சரியே. ஆனால், பண்புகளின் கூட்டே பொருள் என்று கொள்வதானால் அது தப்பாகும். கடல் நிலையானது; அலைகள் நிலையாமையுடையவை. பொன் நிலையானது; அணிவகைகள் நிலையாதவை. ஆயினும், அலைகள் கடலிலெழுவனவேயன்றிக் கடலல்ல. அணிவகைகள் பொன்னாலானவையேன்றிப் பொன்னல்ல.

மொக்கலன் : பொருளும் பண்பும் இரு பொருள்களா? ஒரே பொருளா? இரு பொருள்கள் என்றும் ஒரு பொருள் என்றும் நீங்கள் மயங்க வைக்கிறீர்கள்.

நீலகேசி : மெய்ம்மை ஆராய்ந்து பார்ப்பவருக்கு இதில் மயக்கமில்லை. புத்தசமய நூலிலேயே ஐங்கந்தங்கள் சேர்ந்தே ஆன்மா செயலாற்றுகின்றதாயினும், கந்தங்களே ஆன்மாவல்ல. ஒரே சித்தம் முன்னைய சித்தத்தின் பயனாகவும், வருகிற சித்தத்தின் காரணமாகவும் கொள்ளப்படுகிறது. ஒரே பொருளுக்கு இவ்விடங்களில் இருநிலைகள் கூறப்படுகின்றன. இவைபோலவே, பண்பும் பொருளும் ஒன்றுபட்ட ஒரு மெய்ம்மையின் இரு வேறு நிலைகளாம்.

மொக்கலன் : மெய்ம்மை உரைகடந்ததென்கிறீர்கள். உரைகடந்ததென்றதே அதுபற்றிய உரைதானே. உரை கடந்த ஒன்றுபற்றி வாளா இருத்தலன்றோ வேண்டும். அதுபற்றி வாதிட இடமேது?

நீலகேசி : உரைகடந்தது (அவ்க்தவ்யம்) என்றால், உரைக்கிடமில்லாததென்று பொருள் அன்று. அது ஒரு தரப்பில் அழியாததென்றும், ஒரு தரப்பில் ஒன்று என்றும், ஒரு தரப்பில் வேறுபாடுடையதென்றும் கூறப்படலாம். உரைகடந்தது என்பதன் பொருள், முற்ற விளக்க உரைபெற முடியாதது என்று மட்டுமே பொருள்படும்.

மொக்கலன் : பொருள்கள் மாறுகையில் அடிப்படை ஒருமைப்பாடு இருக்கவேண்டும் என்கிறீர்கள். பால் தயிராகும்போது, பாலே தயிருருவில் உள்ளது என்றால், தயிர் பால்தான் என்று ஆகும். அப்போது மாறுபாடு என்ன?

நீலகேசி : பொருளின் மாறுபாட்டை உள்பயன் கோட்பாடு (சத்காரியவாதம்) எனச் சமணரும், இல்பயன் கோட்பாடு (அசத்காரியவாதம்) எனப் புத்தரும் கூறுவர். இல்பயன் கோட்பாட்டின்படி பால் முற்றிலும் ஒழிந்து தயிர் புதிதாகத் தோன்றுகிறது என்று கொள்ளப்படுகிறது. இது உண்மையானால், பால் ஏன் தயிராக மட்டும் மாறவேண்டும்? எண்ணெயாகவும் தேனாகவும் மாறலாமே. பால், தன் அடிப்படைத் தன்மை மாறாமல் உருவில் மட்டும் தயிராக மாறுகிறது. அதாவது பாலின் அணுக்கள் உருவிலும் ஒழுங்கிலும் மட்டும் மாறி, தயிர் அணுக்களாகின்றன. காரணகாரியத் தொடர்பில்லாவிட்டால், புத்தர் வீடு பேறு (நிர்வாணம்) மதிப்பற்றது. யாரும் வீடு பெறலாம் பெற்றவர் பழைய நிலைக்கு மீளலாம் என்றாய்விடும்.

மொக்கலன் : உண்மை அன்பைப்பற்றிய உங்கள் கொள்கைப்போக்கு புதுமையானது. தன்னிலையில் உண்மைவாய்ந்த ஒரு பொருளே பிறிதொரு தன்மை, இடம், காலம், முறைமை ஆகியவைகளில் அன்மையாகவும் கூறப்படும் என்பது எவ்வாறு? ஓரிடம் இருப்பது மற்ற இடமில்லை என்று கூறுவது ஒரு பெரிய கோட்பாடா?

நீலகேசி : முக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வகையிலும் உள்ள உண்மை, இல்லாத இன்மை ஆகியவற்றிலிருந்து தன்மை, இடம், காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபாடும், உண்மை இன்மைகளைப் பிரித்தறிவதற்கே இப்பிரிவினை ஏற்பட்டது. யானை ஒரு பெரிய விலங்கு என்பது என்றுமுள்ள உண்மை. யானை தறியிற் கண்டுண்டு நிற்கிறது என்பது தற்காலிக உண்மை. ஏனெனில், அது ஒரு குறிப்பிட்ட காலத்தையும் இடத்தையும் மட்டுமே குறிப்பிடுவதாகும். என்றுமுள்ள தன்மை, உண்மை முயற்கொம்பு போல் என்றுமில்லாத தன்மை, இன்மை. தற்காலிகமாக இல்லாத தன்மை அன்மை. ஒரு பொருள் இங்கு அன்று, இவ்வாறு அன்று என்றால் வேறிடம் உண்டு, வேறு பண்பு உண்டு என்று தெரியவரும்.

மொக்கலன் : பெயரில்லாத பொருளும் நுகரப்படாத பொருளும் பொருளல்ல என்று கூறப்படுகிறது. ஒருவனால் நுகரப்படாத பொருளும், ஒருவன் பெயர்த் தொகுதியில் அடங்காத பொருளும் இல்லை என்றால் கூடுமா?

நீலகேசி : நீங்கள் குறிப்பிடுவது சமணர் கொள்கையன்று. நாங்கள் கூறுவதெல்லாம் நம்மால் பெயரிடப்பட்டு நுகரப்படும் பொருள், உண்மையற்றதாயிருக்க முடியாது என்பதே.

மொக்கலன் : ஒரு பொருளின் தன்மை அதற்கே சிறப்பு என்றால், இரும்பு பழுப்படைவதையும், தண்ணீர் வெந்நீராவதையும் என்னென்பது. அவற்றின் தன்மையாகிய கருமையும் தண்மையும் மாறுபடுகின்றவே.

நீலகேசி : இரு பொருளின் தன்மை ஒரு பொருளில் காணப்படுவதால், பொருள் மாறுவதுபோல் தோன்றும். அடிப்படைத்தன்மை மாறுவதில்லை. சேர்க்கை நீங்கிய பின், தனித்தன்மை மீண்டும் காணப்படும். இரும்பு சிவப்பதும், தண்ணீர் வெப்பமடைவதும் தீயின் பண்பு அதில் ஏறுவதனாலேயே. தீயின் செயல் நீங்கியபின், அவை பழைய தன்மையுடனேயே விளங்கும். பூவிருந்த தட்டில் சிலகாலம் மணம் இருப்பதும் இவ்வாறே.

மொக்கலன் : துறக்கம் (வானுலகு) ஓர் இடமானால், அதுவும் மாட்டுத் தொழுபோன்ற ஓர் இடமாதலால் அதன் சிறப்பு, உயர்வு யாது?

நீலகேசி : புத்தர் அறிவுபெற்ற இடமாகிய போதியடி, பிற இடங்களிலிருந்து எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே என்க.

மொக்கலன் : பிறப்புடைய உயிர், துறக்கமெய்திய பின் மீள்வதில்லை. இச்சிறப்புத் தரத் துறக்கத்தில் என்ன இருக்கிறது?

நீலகேசி : இது இடத்தின் சிறப்பல்ல. அங்கே செல்லுமுன், உயிர் இருவினை வேரறுத்துவிடுவதால் வரும் பயன்.

மொக்கலன் : வீடுபெற்ற உயிருக்கும் அறிவு இருப்பதால், செயலும் வினையும் உளதாக வேண்டுமே.

நீலகேசி : உலகின் உயிர்கள், அறிவு பொறியறிவாதலால் வினையெய்தும், வீடெய்திய உயிரின் அறிவு, வினையறுத்த அறிவு. அது வினைப்பயன் சாராது.

மொக்கலன் ஐயங்களெல்லாம் நீங்கப்பெற்றுச் சமண அறிவு பெற்றான். அதோடு நீலகேசியைத் தன் தலைவரான புத்தரிடமும் செல்லும்படி தூண்டுகிறான்.

மொக்கல வாதம் - உரை முற்றும்

Previous Next Top