Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

 
சமணர் வாழ்வியல் - ஒழுக்கமுறை

சமண ஒழுக்கமுறை, இல்லற ஒழுங்கு (சிராவக தர்மம்) துறவற ஒழுங்கு (யதிதர்மம்) என இருபாலாக வழங்குகிறது. இரண்டும் கொல்லாமையையும், வாய்மை, அவாவின்மை, கற்புநெறி, தன்னல மறுப்பு (அஹிம்சை, சத்தியம், ஆஸ்தேயம், பிரமசரியம், பரிமித பரிக்கிரகம்) ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. இரண்டினிடையேயும் உள்ள வேற்றுமை அளவையும் கண்டிப்பையயும் பொறுத்தவை. துறவிகள் வகையில் அவை மயிரிழையும் பிறழாது மேற்கொள்ளப்பட வேண்டும். அந்நிலையில் அவை பெரு நோன்புகள் (மகா விரதங்கள்) எனப்படும். இல்லறத்தார் அவற்றைச் சூழ்நிலைக்கு ஏற்ற அளவு படிப்படியாகப் பயில்வர். இந்நிலையில் அதே நோன்புகள் துணை நோன்புகள் (அணுவிரதங்கள்) எனப்படும்.

சமணர் சமயத்தில் துறவறம் இல்லறத்தின் பழுத்த முடிவு. ஆனால் துறவறத்துக்கான இன்றியமையா முதற்படி என்ற முறையில் இல்லறம் அதனுடனொத்த மதிப்புப்பெறுகிறது. இப்பாகுபாடே இன்று வைதிகர் தாம் மேற்கொள்வதாகக் கூறும் வகுப்புத்தரநிலை பிறப்பு வேற்றுமையுடன் குழப்பப்படாமல் தொடக்க முதல் இன்றவும் தூய்மையாகக் காக்கப்பட்டு வருகிறது.

சமய மாறுபாட்டைச் சமணநெறி தங்கு தடையின்றி வரவேற்றதன் காரணமாக, எல்லா வகுப்பினரும் சமண நெறியில் சேர்ந்தனர். ஆனால் சேர்ந்தபின் அனைவரும் கொல்லாமை மேற்கொண்டு ஒரு நெறிப்பட்டுப் படிப்படியாக வேற்றுமை களைந்தனர். ஆயினும் உயர்வு தாழ்வற்ற நிலையில் வகுப்புகள் தனித் தியங்குவதைச் சமண நெறி தடுக்கவில்லை. புத்தநெறிபோல் சமண நெறி இந்தியாவில் முற்றும் அழிக்கப்படாமல் நிற்பது இவ்வொரு காரணத்தாலேயே போலும்! சமயத் துறையில் வைதிகநெறியிலும் தீவிரமான சமணம் வைதிக நெறிபோல் இந்தியாவில் பரவாமலும், புத்த நெறிபோல் உலகில் பரவாமலும் இருந்தாலும், வாழ்வியல் (சமூகத்) துறையில் கொண்ட இந் நெகிழ்ச்சியினால் - இந்தியாவில் மட்டும் அழியாது நிலவிற்று.

சமண வகுப்புநெறி, பிறப்புப் பற்றியயதன்று என்பதை நீலகேசி நன்கு விளக்குகிறாள். அவள் தாசப் பெண் (சூத்திரப் பெண்). ஆதலால், வேதங்கள் பற்றிப் பேசவும் தகுதியற்றவள் என்று வேதவாதி கூறும்போது, அவனைக் கலங்க வைக்கிறாள். மாபாரத முதலிய வைதிக நூல்களில், எக்குலத்தாரும் தகுதி பற்றி முனிவராவதையும், வேத முனிவர்களே பல வகுப்பினராயிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறாள். உண்மையில் சமணர்கள் வைதிகர்களுக்கு எதிரிகளேயன்றி, வேதங்களுக்கு எதிரிகளல்லர். வேதங்கள் வேதமொழி என்பதை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் பெரியார் மொழி என அவர்கள் ஏற்கின்றனர். அதோடு வேதங்கள் உண்மையில் கொல்லாமை நெறியையே அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர்கள் கொள்கின்றனர்.

உபநிடதங்களிலேயே இக்கருத்தை வலியுறுத்தும் கதை ஒன்று கூறப்பட்டிருக்கிறது. வேள்வியில் தேவர்களுக்கு அளிக்கப்பட வேண்டுவதாகக் கூறப்படும் 'அஜம்' என்பது ஆட்டைக் குறிப்பதா? அன்றா? என்ற கருத்து வேற்றுமை வைதிகரிடையேயும் அன்றிருந்ததென்பதைக் காட்டுகிறது. அதன் பொருள் ஆடுதான் என்று தன் மனச்சான்றுக் கொவ்வாது கூறிய அரசன் பழி எய்துவதாக உபநிடதங்கள் கூறுகின்றன.

சம்பந்தர், சமணர் 'வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவர்' என இழித்துக்கூறினும், முன்பு சமணராயிருந்தவரான அப்பர் அதனை எதிர்த்தனரே யன்றி, அதன் அடிப்படைக் கோட்பாட்டை என்றும் இழித்துரைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சமணர் கொல்லாமை நெறியை ஆதரித்து அவரும் 'தயாமூலத் தர்மத்தை'ப் பாராட்டுகின்றனர்.

இன்று வைதிக (இந்து) இந்தியாவில் ஏற்பட்டுள்ள விழிப்பும், மறுமலர்ச்சியும் சமணர் நெறிக்கு ஊக்கமளிப்பவை. காந்தியடிகள் கொல்லாமைக்குப் புத்துயிர் அளித்து வருகின்றனர். வைதிகர் மேற்கொள்ளும் வேத உபநிடதங்களின் அடிப்படைக் கொள்கைகளைப் பல இக்கட்டுக்களிடையேயும் தூய்மை கெடாது காத்துவரும் சமணர் நெறி, இத்தறுவாயில் இந்தியருக்கும் உலக மக்களுக்கும் வழிகாட்டியாயும், ஒற்றுமைப்படுத்தும் உயர் ஆற்றலாயும் விளக்கவல்லது. எல்லாச் சமயங்களுக்கும் தனிப்படக் கூறுவதானால், கிறிஸ்தவ சமயத்துக்கும் அடிப்படைக் கொள்கையாக விளங்குவது அன்பு நெறி. அதற்கும் அடிப்படையான கொல்லாமை நெறியை வழுவறக் காத்து நிற்கும் சமண நெறி சமயத்தவர், தொகையில் சிறிதாயினும் தொண்டால் பெரிதாகவல்லது. இவ்வகை உயர்வுக்கு இந்தியப் பரப்பு எழுமாக!


Top