Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

கொல்லாமை நெறியும் இந்திய சமயக் கோட்பாடுகளும்

இத்தகைய அறிவியல் உண்மைகள் நூலில் சிறக்கக் காணப்படினும், நூலாசிரியர் தனிப்பட வற்புறுத்தும் சமணச் சிறப்புப் பண்பு கொல்லாமை (அஹிம்சை) என்பதை நாம் மறத்தலாகாது. எச் சமயத்தை ஆராயும் போதும் நீலகேசியால், 'கொல்லாமையே உயர் நெறி' (அஹிம்சாபரமோ தர்மம்!) என்ற சமணக் கோட்பாடே உரைகல்லாகக் கொள்ளப்படுகிறது. புத்த சமயம் சமணர் சமயத்தைப்போலவே, கொல்லாமையை உச்சி மேற்கொள்ளினும், கொல்லாமையின் நேரான செயல்முறைப் பயனாகிய புலால் உண்ணாமையை மேற்கொள்ளவில்லை என்பது, இந்திய சமய ஆராய்ச்சியாளர் அனைவரும் அறிந்ததே. புத்தரை எதிர்க்கும் போதெல்லாம், அவர்கள் கொல்லாமை நெறி மெய்ந்நெறியானால் அதன் முழு நிறைவு, புலால் மறுத்தலேயாகித் தீரவேண்டும் என்பதை, நீலகேசி வலியுறுத்திக் கூறுகிறாள். வேத வாதத்தைக் கண்டிக்கும்போதும் இதே முறை கையாளப்படுகிறது.

புத்த சமயமட்டுமன்றி, இந்திய சமய நெறிகள் அனைத்தும் (கோட்பாடுகள்) சமணருடனொப்பக் கொல்லாமையை உயர்வாகக் கொள்கின்றன. வேதங்களை ஏற்கும் கோட்பாடுகளாகிய ஆறு சமயக் கிளை (தரிசனங்)களுள்ளும் முதலதாகிய பூர்வ மீமாஞ்சை ஒன்று நீங்கலாக, ஏனையவை கொல்லாமையை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அடிப்படை சமயக் கொள்கையாக ஏற்கின்றன. சமயத்தின் பேரால் வேள்வியில் உயிர்ப்பலியிடுவதைச் சமணர்கள் எதிர்க்கும் அளவில், சற்றும் பின்னடையாது சரங்கியரும் எதிர்க்கவே செய்கின்றனர். யோகநெறி சாங்கிய நெறியின் திரிபேயாதலால், அதுவும் சாங்கியத்தின் இந்நிலையை முற்றிலும் மேற்கொண்டது.
இன்று இந்திய சமயக் கோட்பாடுகளில் முதலிடம் பெறும் வேதாந்த நெறியும், வேதச் சடங்குகளைக் கண்டிப்பதே சங்கரர் ஆன்ம அறிவே அறிவு நெறி என்ற தம் கொள்கையை நாட்டியதுடன், வேதநெறி அறிவற்றவர்களுக்கே தகுந்த கீழ்த்தர நெறி என்று அதனை ஒதுக்குகிறார். மேலும் சமயம் (தர்மம்) என்பது கொல்லாமை (அஹிம்சை)யே என்று தெளிவாக[வ்ம அவர் கூறியிருக்கிறார். வேதாந்தநெறியின் இன்னொரு கிளையினைத் தோற்றுவித்த இராமானுஜரும், அருள்நெறி (பக்தி)யையே உயர்வாகக் கொண்டு வேதநெறி வீடுபேற்றுக்கு உகந்ததன்று என்று விளக்குகிறார். வேதாந்தத்தில் மூன்றாவது கிளையான இருபொருள் நெறி (துவைதம்) கண்ட மாதவரும் உயிர்ப்பலியைக் கண்டித்து, அதனிடமாக மாவாலான உருவங்களையே பலியிடும்படி தூண்டினார். இதுவும் தம் சீடரிடையே பிற்போக்காளர்களுக்கு மன நிறைவு ஏற்படுத்துவதற்காகவேயன்றி வேறன்று. இவ்வெல்லா நெறிகளுக்கும் தாயகமான உபநிடதங்களும், அக அறிவு (ஆத்ம வித்யா) மட்டுமே உயர்வுடையதெனப் பாராட்டி உயிர்கொலையை மறுக்கின்றன.

இந்திய நெறிகளனைத்துமே கொல்லாமையை மேற்கொள்ளுகின்றன. ஆதலின், சமணர் கொல்லாமைக் கோட்பாட்டின் சிறப்பு என்ன என வினவலாம். இதற்கு விடையளிப்பது எளிதன்று. ஏனெனில், சமண சமயத்துக்கும் பிற இந்திய சமயங்களுக்குமிடையே, இவ்வகையில் காணப்படும் வேற்றுமை, கொள்கை வேற்றுமையன்று. கொ;ளகையைக் கடைப்பிடிக்கும் உறுதியும், தளரவிடாத துய்மையுணர்ச்சியுமட்டுமே சமணரைத் தனிப்படுத்துவது. இந்தியப் பண்பாடுகளின் பெருந் தொகுதியாகக் கருதப்படுவதும் - அதே சமயம் அவற்றின் முரண்பாடுகளுக்கும் கண்ணாடியாக விளங்குவதும் ஆன, மகாபாரதம் கொலையையும் புலாலுண்ணலையும் பெரிதும் கண்டித்துரைத்தபின், அதனையடுத்தாற்போலவே இவ்வொழுங்குக்கு விலக்குகளாக (வழுவமைதிகளாக) அவற்றிற்கு மாறுபட்ட பல செயல்களுக்கும் இணக்கம் தருகிறது. சமணர் கொல்லாமை பேசுவதுடன் அமையாது, அதனை வலியுறுத்தியும், அதன் உறுதியினின்று இம்மியும் விலகாதும் நிற்க, வேத நெறியும் அதனைப் பின்பற்றிய பிற நெறிகளும் விலக்குகளால் அதன்பிடிப்பை முற்றிலும் தளர்த்தியதன் பயனாகவே தான், பிற்காலத்தில் பாமரமக்கள் எளிதில் சமண சமயம் நீத்து, அவற்றை ஏற்றனர். சமணரின் பிடிவாத உறுதியால் நெருக்குண்டு அடக்கிக்கிடந்த இன்ப விருப்புடைய மக்கள், அப்பிணியை தளர்த்தும் நெறியை அவாவுடன் ஏற்றனர்.

ஆயினும், தேவராரத்தின் ஒவ்வொரு பதிகத்திலும் புத்தருடன் சமணரையும் சேர்த்து வசைபாடும் சம்பந்தர் வசைச் சொற்களை ஊன்றிக் கவனித்தால், அவ்வசையிலும் சமண சமயத்தின் "அடிப்படை உயர்வு விளங்காமலிராது. இரு சமயத்தாரையும், அவர் பண்புகளையும் அவர் தனித்தனி வேறுபடுத்தி விளக்கியிருக்கிறார். "சமணத் துறவி உலக வாழ்வை முற்றிலும் துறந்து, உடையையும் துறந்து நக்கரா (நிர்வாணரா) ய்த்திரிவர்," புத்தத் துறவி காவி உடை போர்த்துத் திரிவர். சாக்கிய (புத்த) முனிவர், கரக் குடுக்கை ஏந்தி இல்லறத்தாரிடமிருந்து கஞ்சியும் சோறும் பெற்றுண்பர்; சமணத் துறவியோ ஒன்றுமின்றி, மயிற்பீலிமட்டும் கொண்டேகுவர். புத்தபிக்கு (பிக்ஷ) தமக்கெனப் பிறர் எழுப்பிய அழகும் ஆடம்பரமும் மிக்க மடங்களில் (விஹாரங்களில்) சொகுசாக வாழ்வர்; திகம்பரர் (சமணத் துறவியர்) இயற்கையின் கொடுமைகள் முற்றும் தாங்கி, வெளியிடத்தே நோன்பு (விரதம்) கிடந்து தவமேற்கொள்வர்." ஓரிடத்தில் சம்பந்தர், புத்தபிக்கு ஊனுணவின் சுவையைப் புகழ்ந்து பாடுவர்; சமண முனியோ அதனைப் பழிச்சொல் (பாவம்) என ஒதுக்குவர் என்றும், எளிதில் மீன் பெற்றுய்யுமாறு புத்தர் கடற்கரையிடத்தே தங்குவர். சமண முனிவர் தவத்தின்பேரால் மலைப் பாங்குகளில் சுடுவெயிலில் கிடந்துழல்வர்' என்றும் கூறுகிறார்.
இங்ஙனம் புத்தசமயம், பிற்கால இந்திய நெறியினும் மிகுதியாகப் புத்த நெறியினின்று அடிப்படைக் கொள்கையில் மாறுபட்டிருந்தும், பிற்காலப் புது வைதீகநெறி நின்ற சம்பந்தர் போன்றவர், வேதநெறியின் எதிரிகள் என்ற முறையில் இரண்டையுமே ஒருங்கே எதிர்த்தனர். இதற்குக் காரணமில்லாமலில்லை. வேத (இந்து)ச் சடங்குகளைப் புத்த சமயத்தினரைவிடச் சமணர் நேரிடையாகவும் கடுமையாகவும் கண்டித்தனர். சமணர் ஒழிக்கத் தக்கவர் என்பதற்கு அவர் கூறும் காரணம் இது ஒன்றே. "சமணர்கள் வேத வேள்வியை என்றும் பழிப்பவர். பார்ப்பனர் பயிலும் வேதங்களையோ, அவற்றின் அங்கங்களையோ அவர்கள் பயில்வதில்லை. வேதநெறியையும் வேதிச் சடங்குகளையும் மறுப்பதையே அவர்கள் தொழிலாகக் கொண்டார்கள். ஆகவே அவர்களை அழித்தே தீரவேண்டும்" என்று அவர் அறைகிறார்.

வணங்கா முடியுடன் கொல்லாமை வழி சமணர் போல் நிற்பது நன்றா அல்லது தத்தம் நலம்பேணிச் சூழ்நிலைக்கேற்ப அதனைத் தளர்த்துவது நன்றா என்பது ஆராய்ந்து முடிவுபடுத்த வேண்டி செய்தி. நீலகேசி இவ்வகையில் சமண மரபுப்படி அதனையே உயிர்நெறியாகத் தீவிரமாகக் கொண்டு வாதாடுகிறாள்.

சமண சமயமும் கேள்விகளும்

வேதார முதலிய பிற சமய நூல்களில், சமணரைப் பற்றிக் கூறப்படுவற்றைக்கொண்டு மட்டுமே சமண சமயப் பண்புகளை மக்கள் பெரிதும் மதிப்பிட்டுவிடுகின்றனர். சிறந்த ஆராய்ச்சியாளர்கூட, இந்தியர் மட்டுமன்றி மேல்நாட்டவருங்கூட, இவ்வகை மதிப்பீட்டின் காரணமாகச் சமண சமயத்தைப் பற்றித் தப்பும் தவறுமான கருத்துக்கள் கொண்டுவிடுகின்றனர். இதனால் பழங்கால இந்திய வரலாற்றின் ஒரு பெரும்பகுதி வழுநிறைந்து காணப்படுகிறது. இத் தப்பெண்ணங்களுள் முதன்மையானது, வேத வேள்விகள் மீது சமணர் கொண்ட தொடர்பே. சமணத் துறவிகள் வேத வேள்விகளை ஒறுத்தனர் என்பதானல், அவர்கள் தம் இல்லறத்துத் தோழர்களை, வேள்விகளையும் சடங்குகளையும் முற்றிலும் ஒதுக்கிவிடும்படி கூறினர் என்று கருதப்படுகிறது. ஆகவே ஏதேனும் ஒரு நூலில் வேள்வி பற்றியோ, சடங்கு பற்றியோ பேசப்பட்டால் உடனே அது சமண நூலன்று என்ற முடிவுக்குச் சில ஆராய்ச்சியாளர் தாவிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக ஓர் அரசன் முடியேற்கும்போது திருமுழுக்கு விழா (பட்டாபிஷேகம்) நடத்தினான் என்று கூறப்பட்டால், உடனே அரசன் சமணன் அல்லன் என்று கொள்கின்றனர். இது முற்றிலும் தவறு.
சமண முனிவர்கள் ஒறுத்த வேள்வியும் சடங்கும் உயிர்க்கொலையுடனிணைந்த வேள்வியும் சடங்குமேயன்றி எல்லா வேள்விகளும் சடங்குமல்ல. ஏனெனில் இன்றளவுங்கூட சமணரிடையே இல்லறத்தாருக்கு வகுக்கப்பட்ட எல்லா நடைமுறைகளும் - பிறந்த நாள் விழா, பூணூல் அணிவித்தல் (உபநயனம்) மணவிழா முதலிய எல்லாச் சடங்களும் பிறரிடம் காணப்படும் முறையிலேயே நடத்தப்பெருகின்றன. வைதிக (இந்து) அறநூல்களில் கூறப்பட்ட பதினாறு நற்றெயல்களுமே (சமஸ்காரங்கள்) சமணர்களாலும் பின்பற்றப்படுகின்றன. இதுமட்டுமன்று, இச் சமயங்களில் அவர்கள் வழங்கும் மந்திரங்கள் கூட வேத மந்திரங்களே. மந்திர வழிபாட்டுக்குரிய தெய்வங்களும் இந்திரன், வருணன், அக்கினி, வாயு, உருத்திரன் முதலிய வேதத் தெய்வங்களே. எனவே, சமண நெறி வேள்விகளுக்கும் சடங்குகளுக்கும் முற்றிலும் எதிரானதல்ல. ஆனால் சமண சமயம், அவை இல்லறத்தாருக்கு மட்டுமே உரியவை என்று கொண்டது. அவர்களுக்கும் கொல்லாமையுடன் கூடிய வினைகள் மட்டுமே உரியவை. வேத வேள்வியாளர் செய்யும் உயிர்க்கொலைக்கு மாற்றாக அவர்கள் சோறும் நெய்யும் படைப்பர்.

Top