Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

 
நூலாசிரியர்

நீலகேசியின் நூலாசிரியரைப்பற்றி நாம் எதுவுமே அறியக்கூடாத நிலையில் இருக்கிறோம். ஆசிரியர் பெயர், இடம், காலம் எதுவும் தெரியவில்லை. உரையாசிரியரும் இவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர் காலத்திலேயே இவை அறியப்படாது போயினபோலும். புறச் சான்றுகள் கிடைக்காததுடனன்றி, அகச் சான்றுகூட மிகக் குறைவே. அதனால் ஆசிரியர் பெயரும் இடமும் அறியக்கூடவில்லையாயினும், ஓரளவு கால வரையறை மட்டும் ஏற்பட முடிகிறது. சமண சமயநெறியை அலசிக்காட்ட முயலும் இவ்வாசிரியர், வேறெந்த சமண நூல்களையும் குறிப்பிடாமல் மூன்று நூல்களை மட்டும் மேற்கோளாகக்கொண்டு குறிக்கிறார். அவை தொல்காப்பியம், நாலடியார், திருக்குறள் ஆகியவை. இவை மூன்றுமே சமணரால் இயற்றப்பட்டவை என்று கொள்ள இடமுண்டு. முதலது இலக்கண நூல்; பிந்திய இரண்டும் ஒழுக்க நூல்கள். இவையன்றி வேறு சமண நூல்களை அவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. சமய ஆராய்ச்சி செய்யும் இவ்வாசிரியர் இவைபோலப் பிற சமண நூல்களும் இருந்திருப்பின் குறிப்பிடாதிரார் என்பது உறுதி. ஆகவே, அவை மூன்றேயன்றி மற்றெச் சமண நூலும் அவர் காலத்தில் இல்லையென்றே கொள்ளலாம்.

இம்மூன்று நூல்களுள்ளும் தொல்காப்பியத்தின் காலத்தைத் திட்டமாகக் கூறமுடியவில்லையாயினும், மூன்றிலும் அதுவே முந்திய என்பது ஒரு தலை.

இரண்டாவதாகிய நாலடியார் சமண முனிவர்களால் எழுதப்பட்டதென்றும், அவர்கள் அவர்கள் வடநாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாகப் பத்திரபாகு என்பவர் தலைமையில் தென்னாடு வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. பத்திரபாகு, சந்திரகுப்த மெளரியன் என்ற போசனை மாணவனாகக் கொண்டவர். அவர் பஞ்சத்தால் தென்னாட்டுக்கு வந்தபோது, சந்திரகுப்தனும் உடன் சென்றான் என்று சமணர் வரலாறு கூறுகிறது. இதனால் சந்திரகுப்தனும் பத்திரபாகுவும் ஒரு காலத்தவர் ஆவர். சந்திரகுப்தன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஆண்டவன். எனவே, பத்திரபாகுவின் காலமும், நாலடியார் காலமும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கூறலாகும்.

மூன்றாவது நூலாகிய திருக்குறளின் ஆசிரியர் சமணர் மரபுரைப்படி ஏலாச்சாரியார் அல்லது குந்தகுந்தாசாரியார் என்பவராவர். இவர் காலம் சமணர் வரலாற்றின்படி கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டு ஆகும். சமண மரபுரையை விட்டு வேறு வகையாக ஆராய்ந்தவர்களும், அவர் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்றே கூறுகின்றனர்.

நீலகேசி, மேற்கூறிய மூன்று நூல்களுக்கும் பிந்தியதென்று ஏற்படவே, அதன் முக்கிய கால எல்லை திருக்குறளின் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டு என்று கூறலாம். அதாவது அது முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதேயாக வேண்டும். பிந்தியகால எல்லையை வரையறுப்பது இதனினும் சற்றுக் கடிது. இவ்வகையில் நாம் முற்றிலும் நூலின் அகச்சான்றுகளையே ஆராய்தல் வேண்டும். இந்நூலுடனொத்த சமய விளக்கத்திரட்டுகள் அனைத்தும் தம் காலத்திலுள்ள சமயக் கோட்பாடுகள் எல்லாவற்றையும் கூடியமட்டும் விளக்குபவையாகும். இம்முறையில் பின்னாட்களில் தழைத்தோங்கிய சங்கரர், இராமானுசர், மாத்துவர் ஆகியவர்களின் வேதாந்தக் கோட்பாடுகளை இவர் குறிப்பிடாதது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமன்று, பிற திரட்டுக் (சர்வ தரிசன சங்கிரகங்)களில் விளக்கப்பட்ட கோட்பாடுகளில் பலவும்கூட இதில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இச்சமயங்களுட் பெரும்பாலானவை, ஆசிரியர் காலத்திலில்லை எனவும், அவர் அவை வழங்கிய காலத்துக்கு முற்பட்டவர் என்றும் கூறலாம்.

மேலும், நீலகேசியில் விளக்கப்படும் சமயவாதங்களுள் புத்த சமயத்துக்கு அடுத்தபடியாக ஆசீவக வாதம் என்ற கோட்பாடு இடம் பெறுகிறது. இவ் ஆசீவக வாதத்தைப் பற்றித் தேவார திருவாசகங்களில் எத்தகைய குறிப்பும் இல்லை. வேத நெறிக்குப் புறம்பான புத்த சமண சமயங்களைப் பலவிடங்களிலும் பலவாறாகத் தாக்கி எதிர்த்த இச்சமயத் தலைவர்கள், வேதநெறிக்குப் புறம்பாக ஆசீவக வாதம் என்ற ஒரு தனிக்கோட்பாடு இருந்திருந்தால் அதனையும் எதிர்த்திருப்பாரன்றோ? வடமொழியிலும் சங்கிரகங்கள் என்ற குழுவைச் சார்ந்த மதவாத நூல்கள் எதுவும் ஆசீவக வாதம் பற்றி விளக்கவில்லை. நீலகேசி ஆசிரியர், சமணமதத்தின் முதல் எதிர் நெறியாகிய புத்த சமயத்தோடொப்ப ஆசீவக வாதத்தை எதிர்த்திருப்பதைப் பார்க்க, அச்சமயம் அவர் காலத்தில் நன்கு தழைத்திருக்க வேண்டும் என்றும், தேவார காலத்துக்குள் அது தடந்தெரியாது அழிந்து போயிருக்க வேண்டும் என்றும் புலப்படும்.

ஆசீவக வாதம் என்ற பெயர் தேவார காலங்களில் அறியப்படாவிட்டாலும், அதற்கு மிகவும் பிந்திய நூலாகிய சிவஞான சித்தியாரில் இடம்பெற்றிருக்கிறது. இது நாம் மேலே குறிப்பிட்ட முடிவுக்கு மாறுபட்டதுபோல் தோன்றுவது இயல்பே. ஆனால் நீலகேசியாலும், பிற நூலாராய்ச்சியாலும், ஆசீவக சமயத்தைப்பற்றி நாம் அறிந்த செய்திகளுடன் சிவஞான சித்தியாரில் கண்ட செய்திகளை ஒப்பிட்டு நோக்கினால், சிவஞானசித்தியார் ஆசீவக வாதம் என்ற பெயரைக் குறிக்கின்றாரேயன்றி அதனை நேரடியாக அறிந்து விளக்கவில்லை என்று காணலாம்.

ஆசீவகர் நெறி, மேற்போக்கான பண்புகளின் சிலவற்றில் சமணாடையே திகம்பரர் நெறியை ஒத்தது. இரு சாராடையேயும் துறவிகள் ஆடையை வெறுத்தனர். இக்காரணத்தால் இருவரையும் ஒன்றுசேர சமணர் எனக் குறிப்பதுண்டு. இவ்வெளி ஒற்றுமையையும் வழக்கமாகக் கூறப்படும் பெயரொற்றுமையையும் கண்டு, சிவஞான சித்தியார் அவை இரண்டும் ஒரே நெறியின் இரண்டு உட்கிளைகள் என மயங்கினர். அதுமட்டுமோ? இரண்டினையும்பற்றிக் கூறும் செய்திகள் சிறிதும் ஒன்றுக்கொண்டு வேறுபடாது ஒரே பொருளின் இருவகை விரிவுரையாகவே அமைந்துள்ளன.

இதிலிருந்து சித்தியார் ஆசிரியர், பிறிதொரு நூலிலிருந்து இப்பெயரைக் கேள்வியுற்று மேலீடாக ஒன்று படுத்திக் குழப்பினரேயன்றி, அச்சமயம் பற்றி நேரிடையாக எதுவும் அறிந்தவரல்லர் என்று ஏற்படுகிறது. ஆயினும் தென்னாட்டில், தேவார காலத்துக்கு முன்பே (கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பே) இறந்துபட்ட இவ் ஆசீவகநெறி, வட நாட்டில் பின்னும் சில காலம் இருந்ததெனக் கூறலாம். ஆசீவக நெறியைத் தோற்றுவித்த தலைவர் மஸ்கரி என்பவர், ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாணரின் ஹர்ஷ சாதத்தில் பிறசமய வகுப்பினருடனே மஸ்கரி வகுப்பினரைப் பற்றிய செய்தியும் கூறப்படுகிறது. நீலகேசி இங்ஙனம் ஆசீவக மதம் தமிழகத்தில் தழைத்திருந்த காலத்திய நூல் ஆகும்; எனவே, அது ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தியதாதல் வேண்டும்.

ஆசிரியர் காலத்தை வரையறை செய்ய உதவும் இன்னொரு செய்தி நீலகேசி 5-வது செய்யுளின் குறிப்பு ஆகும். இதில் ஆசிரியர் தாம் தம் சமயக் கோட்பாடுகளைத் 'தேவா'டமிருந்து கற்றதாகவும், அவை தெய்வ வாக்குக் கொத்த மதிப்புடையவை (பிரமாணிகம்) என்றும் குறிப்பிடுகிறார். ஆசியர் தம் குரு எனக் குறிக்கும் இத் தேவர் யார்? தமிழ் இலக்கிய மரபில் வேறெவ்வகை அடையும் இல்லாது 'தேவர்' என்ற தனிச் சொல்லால் மட்டுமே சிறப்பாகக் குறிக்கப்படுபவர் திருக்குறளின் ஆசிரியராகிய திருவள்ளுவர் ஒருவரே. நீலகேசி 5-ம் பாட்டில் கூறப்படும் 'தேவர்' திருவள்ளுவரானால், நீலகேசி ஆசியர் திருவள்ளுவான் நேரடியான மாணவர் ஆக வேண்டும். அவர் சமய உண்மைகளைத்தேவரிடமிருந்தே கற்றனர் என்பதிலிருந்து, அவர் பிற சமய நெறியினின்று சமண நெறி புக்கவர் என்றும், அதற்கு உரிய ஆசிரியர் திருவள்ளுவர் என்றும் கொளல் தகும். 2-வது பாட்டில் இவ்வரலாறு பழமறை நூல் கண்டு எழுதியதன்று என்று அவர் தாமே கூறுவதும் இக்கோட்பாட்டை வலியுறுத்தும். நீலகேசி ஆசியர் திருவள்ளுவர் மாணவர் என்று பெறப்படின் அவர் காலமும் கி.பி. முல் நூற்றாண்டெனவே துணிதல் வேண்டும்.


Top