ஆசாரிய பரம்பரை || குரு பரம்பரை || பிறப்பிடம்||நூல்கள் ||  சிறப்பு அம்சங்கள் ||  கதைகள்


நம: ஸித்தேப்ய:
ஸ்ரீ குந்த குந்தாசாரியர் வரலாறு

ஆசாரிய குந்த குந்தரும் ஆசாரிய பரம்பரையும்

நாம் வாழும் இந்த பரதகண்டத்தில் தீநற்காலம் என்னும் நான்காம் காலத்தில் விருஷபதேவர் முதல் பர்த்தமான மகாவீரர் வரையிலான 24 தீர்த்தங்கரர்கள் தோன்றி, யாண்டும் நிலைபெற்று இருக்கும் அறத்தைப் போற்றி, வழிபட்டு, பவ்ய ஜீவன்களுக்கு உபதேசித்தருளினர். இறுதி தீர்த்தங்கரரான பகவான் வர்த்தமான மகாவீரருக்குப்பின் கெளதமகணதரர், சுதர்மாசாரியர், ஜம்பு ஸ்வாமி ஆகிய மூன்று முழுதுணர் கேவலிகள் முக்தி நெறியைப் போற்றி அருளினர். இவர்கள் முக்தியும் அடைந்தனர். இப்போது நிகழும் தீக்காலம் என்னும் இந்த ஐந்தாம் காலத்தில் கேவலிகள் தோன்றுவதில்லை. எனினும் தீர்த்தங்கரர்களால் உபதேசிக்கப்பட்டு, கணதரர்களால் எடுத்துரைக்கப்பட்ட பன்னிரு அங்கங்களை உடைய, சுருதத்தை முழுதும் உணர்ந்த, சுருதகேவலிகள் தோன்றி அறத்தைப் போற்றினர். அந்த சுருத கேவலிகள், விஷ்ணுகுமாரா;, நந்திமித்திரர், அபாராஜிதர், கோவர்த்தனர், பத்ரபாகு ஆகியோர் ஆவர். இவர்களுள் ஆசாரிய பத்ரபாகு இக்காலத்தில் இறுதியாகத் தோன்றிய சுருதகேவலி ஆவார். இவர் காலத்தில் வடநாட்டில் 12 ஆண்டுகாலம் கடும் வறட்சி (பஞ்சம்) நிலவியது. இதை முன்கூட்டியே உணர்ந்த பத்ரபாகு ஆசாரியர் தமது சங்கத்துடன் தென்னகம் நோக்கிப் பயணமானார். இதை அறிந்த அரசன் சந்திரகுப்த மெளர்யனும் அரச பதவியைத் துறந்து முனிவருடன் புறப்பட்டுச் சென்றான்.

இவ்வாறு தென்னகம் நோக்கிப் புறப்பட்ட இவர்கள் சிரவண பெளிகுளத்தை அடைந்தனர். அங்கு சுருதகேவலி பத்ரபாகு தவம் புந்து சமாதி அடைந்தார் என்று வரலாறு கூறுகிறது. அரசன் சந்திரகுப்தனும் அவாடமே துறவு மேற்கொண்டு சமாதிமரணம் எய்தினான்.

சுருதகேவலி பத்ரபாகு தென்னகம் நோக்கிப் பயணமானபோது சில முனிவர்கள் அவருடன் செல்லாமல் குஜராத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கிவிட்டனர். பின்னர் அவர்களுள் பலர் வறட்சியின் கொடுமை தாங்காமல் அறத்திலிருந்து சற்று விலகிச் செல்லலாயினர்
.
வறட்சி நீங்கியபின் தென்னகம் சென்றடைந்த முனிவர்களுள் சிலர் விசாகாசாரியர் தலைமையில் மீண்டும் வடநாடு திரும்பினர். அப்போது அங்கு அறத்திலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் அறவழிக்குத்திரும்புமாறு விசாகாசாரியர் அருளிச் செய்தார். ஆனால் அதை ஏற்காத சிலர் தாங்கள் பின்பற்றுவதே சாயான கொள்கையாகும் என வாதிட்டனர். அவர்களே சுவேதாம்பரக் கொள்கையை உருவாக்கிப்பரப்பலாயினர். இவ்வாறு சுருதகேவலி பத்ரபாகுவிற்குப் பிறகு சமணம் இரண்டாகப் பிளவுபட்டது.

வடநாடு திரும்பிய அம்மாமுனிவர்கள் மீண்டும் ஒரு சங்கத்தை உருவாக்கி 12 அங்கங்களையும் தொகுக்க முயற்சி செய்தனர். ஆனால் 11 அங்கங்களையும் 10 பூர்வங்களையுமே அவர்களால் தொகுக்க முடிந்தது. பன்னிரண்டாவது அங்கமாகிய திருஷ்டி ப்ரவாத அங்கம் முழுமையாக தொகுக்க இயலாமல் போயிற்று.

இவ்வாறு ஜம்புஸ்வாமிக்குப்பின் சுமார் 200 ஆண்டுகள் வரை சுருதகேவலிகளால் சுருதம் முழுமையாக அறியப்பட்டு வந்தது. ஆனால் சுருதகேவலி பத்ரபாகுவிற்குப்பிறகு 11 அங்கங்களையும் 10 பூர்வங்களையும் அறிந்த ஆசாரியர்கள் அறத்தைப் போற்றிவந்தனர். அவர்கள் விசாகாசாயர், ப்ரோஷ்டிலர், நக்ஷத்திரர், ஜெயஸேனர், நாகசேனர், சித்தார்த்தர், த்ருதிசேனர், விஜயர், புத்திலிங்கர், கங்கதேவர், தர்மசேனர் ஆகியோர் ஆவர்.

இவர்களுக்குப் பிறகு ஜெயபாலர், பாண்டவர், த்ருவசேனர், கம்ஸர் என்னும் 11 அங்கங்களை அறிந்த ஆசாரியர்கள் தோன்றினர். இவர்களுக்குப்பின் ஒரு அங்கத்தை மட்டும் முழுமையாக அறிந்த இரண்டாம் பத்ரபாகு, குப்திகுப்தர், லோகாசாரியர், சுபத்ரர், யசோபத்ரர் என்னும் ஞானிகள் தோன்றினர். இவர்களுக்குப்பின் எந்த ஒரு அங்கத்தையும் முழுமையாக அறிந்த ஞானிகள் தோன்றவில்லை.

இவ்வாறு அக்கால கட்டத்தில் அங்கங்களையும் பூர்வங்களையும் முழுமையாக அறியாமல் போனபிறகு அங்கம் அல்லது பூர்வத்தின் ஒரு பகுதியை மட்டுமே அறிந்த ஆசாரியர்கள் தோன்றினர். அவர்கள் முதல் மாகநந்தி, அருகத்பலி, தரஸேனர், புஷ்பதந்தர், பூதபலி மற்றும் ஜினசந்திரர் ஆகியோர் ஆவர். ஆசாரிய புஷ்பதந்தருக்கு முன்பு வரை ஆகமம் செவிவழியாகக் கேட்டு உபதேசிக்கப்பட்டு வந்தது. எனவேதான் ஆகமத்தை சுருதம் (கேட்கப்பட்டது) என்கிறோம். இவ்வாறு செவிவழியாகக் கேட்டு அறியப்பட்ட ஆகமங்களை இனி அவ்வழியாகவே காப்பாற்ற இயலாது என்பதை உணர்ந்த ஸ்ரீ தரசேன ஆசாரியர் ஷட்கண்டாகமம் என்னும் நூலை எழுத்துவடிவில் (வாவடிவில்) உருவாக்க எண்ணி அதை புஷ்பதந்தருக்கும், பூதபலிக்கும் உபதேசித்தருளினார். அவரால் அருளப்பட்ட அந்த ஆகமம், புஷ்பதந்த - பூதபலி ஆசாரியர்களால் ஜ்யேஷ்ட சுக்ல பஞ்சமி அன்று வாவடிவம் பெற்றது. முதன்முதலாக சுருதம் எழுதப்பட்ட அத்திருநாளை 'சுருதபஞ்சமி' என்று, நாம் இன்றும் கொண்டாடுகிறோம். புஷ்பதந்த, பூதபலி ஆசாரியர்களுக்கு பிறகு தோன்றியவர்தான் ஏலாசாரியர், கிருத்தபிச்சர், பத்மநந்தி, வக்ரக்வர் என்றெல்லாம் போற்றப்படும் ஆசாரிய குந்த குந்தர். .

www.jainworld.com